Categories
கருத்து

நானும், கருப்பு நாயும்.

தேவைகள் என்பது ஒவ்வொரு மனிதனிக்கும், மிருகத்திற்கும் , ஏன் உயிரற்ற பொருட்களுக்கும் கூட உண்டு.

ஆம். சில பொருட்களை சூரிய ஒளி படாத இடத்தில் வைக்க வேண்டும் என்ற தேவை, சில பொருட்களை காற்றோட்டமாக வைக்க வேண்டும் என்ற தேவை.

அதுபோல மனிதனுக்கும் ஒவ்வொரு நிலையில் ஒவ்வொரு தேவை உண்டு.

பலருக்கும் பல தேவை.

என்ன தேவை ? என்பதை அறிந்து அதை நிறைவேற்றுவது சேவை.

அப்படி என்ன தேவை என்பதை அறியாமலே பலரும் பலருடனும் பலவிதமாகப் பழகியும், பேசியும், பலனில்லாமல் காலம் கழிகிறது.

ஒரு குழந்தை அழும்போது அதனிடம் 10 ரூ பணத்தைக் கொடுத்து விட்டால் அதன் தேவை பூர்த்தி அடைந்து விடுமா? அல்லது அழுகை தான் நின்று விடுமா?

அதே குழந்தை 18 வயதை அடைந்து பள்ளிப் படிப்பை முடிந்து கல்லூரிக்குச் செல்லத் தயாராகும் போது அதனுடைய தேவை என்பது அந்த ஒரு டம்ளர் பால் தானா என்ன?

சில நேரங்களில் ஒருவருடைய உண்மையான தேவை என்பது உணரப்படாமலேயோ அல்லது நம்மால் அதைப் பூர்த்தி செய்ய இயல முடியாமலோ கூட ஆகலாம்.

ஆனால் அது என்ன என்று அறிந்து அதற்கான முயற்சியைச் செய்தாலே நமக்குக் கிட்டத்தட்ட சேவையின் பலன் உண்டு.

இதைப் பேசும் போது , எனக்கு என் தெருவில் உள்ள ஒரு நாயைப் பற்றிய சிந்தனை வருகிறது.

பொதுவாக நமது மனநிலை என்ன?
நாய்களுக்கு 2 பிஸ்கட் போட்டால் போதும்.
அவற்றுக்குப் பசி மட்டுமே பிரதானம் என்று.

ஆனால் இந்த நாய் வேறு ரகம்.என்ன காரணம் தெரியவில்லை, ஒரு நாளும் பிஸ்கட்டைத் தின்னாது.

வெங்காய சமோசாவைக் கூட பிய்த்துப் போட்டால் சாப்பிடும், ஆனால் பிஸ்கட் தின்னாது.

இது ஒரு கவன ஈர்ப்பை அதன்மீது ஏற்படுத்தியது.

அதனால் ஒரு சில நாட்களில் , ஏதாவது வித்தியாசமாக தின்பண்டங்களை கொண்டு வந்து பரிசோதித்தேன்.
நாய்கள் தின்னும், கேக், பால் போன்ற அனைத்தையும் சாப்பிட்டது, பிஸ்கட், பன் சாப்பிடவில்லை.

தொடர்ந்து நன்கு பழகியது.நான் தெருமுனையில் நுழையும் போதே வண்டியின் பின்னால் ஓடிவந்து என்மீது தொற்றிக் கொள்ளும்.

எதையாவது போட்டால் சாப்பிடாது. இதற்கு என்ன வேண்டும் என்பதே புரியவில்லை.

சரி ஒரு நாள் அவ்வாறு தொற்றிய போது அதன் தலை வாட்டமாக இருந்தது என்று இரண்டு அடியைப் போட்டு சிறிது நேரம் தடவி விட்டு, மேலே வீட்டிலிருந்து சிறிது பாலை எடுத்து வரச் சொன்னேன்.
அதன்பிறகு சாப்பிட்டது.

நான் என்றோ ஒரு நாள் அதன் தலையில் தடவிக் கொடுத்தது அதற்கு நினைவில் இருந்திருக்கிறது..

அந்த நாய் ஒரு கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் கட்டிடத்தில் தங்கியிருக்கிறது.

சோத்துக்குப் பஞ்சமில்லை. தினசரி அங்கே சோறு கிடைத்து விடுகிறது.

ஆனால் அதை தெரு நாயாக தூரநின்று பழகாமல் தொட்டுத் தடவி கொஞ்ச ஆள் இல்லை.

அந்த ஏமாளி நான் என்பதால் என்னிடம் ஓடி ஓடி வருகிறது.

தினமும் வண்டியின் பின்னால் வீடு வரை ஓடி வந்து சிறிது நேரம் என்னோடு விளையாடும்.

பாசத்தில் கைகளை நக்கி வைக்கும்.
ரேபிஸ் வைரஸ் ஏதாவது வருமோ என்று ஒரு புறம் பயமிருந்தாலும், அந்த நாய் பரிதவித்து ஓடி வந்து அப்பாவியாக நிற்கும் போது, வாழும் வாழ்வில் நான்கு ஜீவராசிகளிடம் அன்பு செலுத்தாமல் வாழ்ந்து எதைச் சாதிக்கப்போகிறோம் என்று தோன்றுகிறது.

ஆனால் , ஒரு விஷயம்.

இதைப்போல எனக்கு ஏற்கனவே இரண்டு பகுதகளில் நாய்களின் நட்பு உண்டு.
அந்தப் பகுதிகளை காலி செய்து விட்டு வந்தபிறகு அந்த நாய்களை யாராவது என்னைப்போல கொஞ்சி விளையாடியிருப்பார்களா?

அந்த நாய்கள் என்னை எதிர்பார்த்திருக்குமா என்பது எனக்குத் தெரியவில்லை.

என்னால் இயன்ற போது , ஒரு நாய்க்குட்டியின் தேவையைப் பூர்த்தி செய்தேன்.

இந்தப் படைப்பில் அந்த நாய்க்குட்டியின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக நான் நியமிக்கப்பட்டதைப்போல எனது தேவைகளைப் பூர்த்தி செய்ய யாராவது நியமிக்கப்பட்டிருக்கலாம்.

ஒரு வேளை அதுமாதிரியாக இல்லாமல், எனது தேவைகளை நானே பூர்த்தி செய்து கொள்ளும்படியாகவும் படைப்பு வடிவம் இருக்கலாம்.

அது என்ன சூட்சமம் என்பது நமக்கு விளங்குவதில்லை.

சில நேரங்களில் நமக்கு வேண்டியது கிடைக்கும்.

சிலநேரங்களில் நாம் நினைத்தது கிடைக்காது.
ஒருவேளை அது நமக்குக் கிடைக்கக் கூடாத ஒன்றாக இருக்கலாம்.
அதாவது நாம் நமக்கு விதிக்கப்படாத ஒன்றை நினைத்து வருந்திக் கொண்டிருக்கலாம்.

அப்படி நமக்குக் கிடைக்காத ஒன்றைத் தேடிப்பிடிக்க வேண்டும்..

முயற்சி செய்வதில் தவறில்லை..ஒரு வேளை கடுமையான பல முயற்சிக்குப் பிறகும் அது கிடைக்கவில்லை என்றால், அது நமக்கானது தானா என்பதை ஒரு முறை ஆராய வேண்டும்.

நமக்கானது என்ற சிந்தனை இருந்தால் தொடர்ந்து முயற்சிக்கலாம்.

அந்த நாய்க்கு நான் ஒரு கோமாளி கிடைத்தது போல, என்றாவது நமது தேவை பூர்த்தி அடையும்.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.