சட்டம் என்பது அனைவருக்கும் பொதுவானது தான்.
ஆனால் அதன் பாய்ச்சல் என்பதோ, ஆளுக்கு ஆள் வேறுபடுகிறது.
சாமானியன் என்றால் உடனடியாகப் பாய்ந்து விடுவதும், பணம் பதவியில் இருந்தால் கொஞ்சம் பக்குவமாகப் பாய்வதும் என்பது பழகி விட்டது.
இன்று ஒரு தினசரியில் ,ஒரே பெட்டிக்குள் அடுத்தடுத்து இரண்டு குட்டிச் செய்திகள்.
இரண்டும் பெண்னை பலவந்தப்படுத்தியதும், பாலியல் சீண்டல் செய்த சம்பவம் பற்றிய செய்திகள் தான்.
இரண்டுமே சென்னையில் நிகழ்ந்த சம்பவம் தான்.
முதலாவது வடசென்னையிலும், இரண்டாவது துரைப்பாக்கம் பகுதியிலும் நிகழ்ந்திருக்கிறது.
முதலாவது சம்பவமானது, கல்லூரி மாணவி வீட்டில் தனியாக இருந்த போது , அதாவது அந்தப் பெண்ணின் அப்பா அம்மா வேலைக்குச் சென்றிருந்த நேரத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர், இவர்களது வீட்டிற்கு வந்து பேச்சுக் கொடுக்கும் விதமாக நுழைந்து அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாக சீண்டியிருக்கிறார்.
இதனை அவள் மெற்றோரிடம் சென்று அந்தப் பெண் சொன்னதும், அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்கள்.
புகார் பெற்ற பிறகு வந்து அந்த நபரைத் தேடினால், ஆள் தலைமறைவு.
ஒரு வழியாக முயற்சி செய்து அந்த நபரைப் பிடித்து சிறையில் அடைத்து விட்டார்களாம்.
அந்த நபர் , விசிக கட்சியில் ஒரு முக்கியப் பிரமுகர் என்ற தகவலும் பகிரப்பட்டிருந்தது.
இரண்டாவது சம்பவம், கேரள மாநிலத்திலிருந்து இங்கு வந்து தங்கி மென்பொறியாளராகப் பணியாற்றும் பெண், தனது அலுவலகத்திலிருந்து , இரவு வீட்டிற்குத் தனியாக நடந்து செல்லும் போது ஒரு நபரால் பாலியல் சீண்டலுக்கு ஆளாகியிருக்கிறார்.அவர் கூச்சலிடவும் அந்த ஆள் அங்கிருந்து ஓடி விட்டானாம்.
அந்தப் பெண் அளித்த புகாரின் பெயரில் அந்த நபர், அதே பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் புரோட்டா மாஸ்டராகப் பணிபுரியும் ஆள் என்பது கண்டறியப்பட்டிருக்கிறது.
அவரைக் கைது செய்ய முயன்ற போது, தவறி கீழே விழுந்து கை முறிந்ததாகக் காவல்துறை சார்பாக சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த கை முறிவு கதை எல்லாம் நமக்குத் தெரியாதது ஒன்றுமில்லை.
இரண்டாவது ஆள், புரோட்டா மாஸ்டராக , அதாவது கேட்க ஆள் இல்லாத சாமானியன் என்பதால் உடனடி தண்டனை கிடைத்திருக்கிறது.
இந்தக் கை தானே சீண்டியது என்று அவர் கை உடைந்திருக்கிறது.
முதலாவது ஆளின் கை முறியவும் இல்லை..முறியப் போவதுமில்லை.
சொல்லப் போனால் அவர் தலைமறைவாக இருந்ததற்குக் கூட அவர் மீது எந்த வன்மமும் காட்டப்படவில்லை.
காரணம் அவர் கையிலிருக்கும், பணமும் அரசியல் செல்வாக்கும் தான்.
இந்த அதிரடி தண்டனை சம்பந்தமாக சமீபத்தில் கூட நீதிபதி ஒருவர் காவல்துறையைக் கடிந்து ஒரு கேள்வி எழுப்பியிருக்கிறார். அதெப்படி காவல் நிலையத்தில் இருக்கும் கழிவறைகளில் ஒரு காவலரும் தவறி விழுவதில்லை, ஆனால் கைதிகள் தவறி விழுந்து கை முறிந்து போகிறது என்று.
அதோபோல இந்தக் கேள்வியும் கேட்கப்பட வேண்டும்.
காவலர்கள், பாலியல் சீண்டல் செய்த நபர்களை தண்டிப்பது நியாயம் தான்.
ஆனால், அந்த தண்டனை அந்த நபர்களின் பின்புலம் பார்த்து இருக்கக்கூடாது என்பதுதான் முக்கியம்.
சாதாரணமாக, தலைக்கவசம் அணியாமல் காவல்துறையிடம் மாட்டிக் கொண்டு, கை கால்கள் எல்லாம் வெடவெடத்து பயந்து பதில் சொல்லும் சாமானியர்கள் இருக்கும் இதே ஊரில் தான், மதுபோதையில் திமிராகப் பேசும் ஆசாமிகளும் இருக்கிறார்கள்.
இருவருக்குமான வேறுபாடு, பணமும் பதவியும் தான்.
அந்தப் பணமும் பதவியும் தரும் தைரியம் சாமானியனிடம் இல்லை.
அது வரவும் போவதில்லை.
ஆனால் சட்டம் சாமானியனுக்குத் தரும் பயத்தை, பணக்காரனிடமும், அரசியல்வாதியிடமும் நியாயமாகக் கடத்த, நமது அரசாங்க நிர்வாகம் எனும் அச்சாணி ஒழுங்காக இருந்தால் தான் முடியும்.
மாற்றத்தை எதிர்நோக்கிக் காத்திருப்போம்.