Categories
அரசியல் கருத்து தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

கள் மட்டும் தான் சமுதாய சீரழிவோ?

சில விஷயங்களை நாம் மிக யதார்த்தமாகப் பழகிக் கொண்டோம்.
கள்ளு இறக்கத் தடை இருக்கும் இதே மாநிலத்தில் கொக்கைன் மிக எளிதாக வெகு காலமாகப் புழக்கத்தில் இருந்திருக்கிறது.

அதுவும் மிகப் பிரபலமான மனிதர்களிடையே அது சர்வ சாதாரணமாகக் கைமாறியிருக்கிறது.

நாம் இதுநாள் வரை கள்ளு இறக்க ஏன் தடை? அதுவும் ஒரு தொழில் தானே?
பனை மரங்களின் எண்ணிக்கை கூடும், அதைச் சார்ந்த தொழில்கள் பெருகும் என்று கேள்வி கேட்டதுமில்லை.

கொக்கைன் போதையில் சினிமா பிரபலங்கள் என்பதைக் கேள்விப்பட்டு அதிர்ச்சியடையவுமில்லை

ஏனென்றால் சிறிது காலத்திற்கு முன்பே ஒரு சினிமா பிரபலம், பல நடிகர்களைக் குறிப்பிட்டு இவர்கள் எல்லாம் பவுடர் எடுப்பாங்க என்று கூறிய வாக்குமூலத்தை நாம் கேட்டு கடந்தும் சென்றிருக்கிறோம்.

சரி விஷயத்திற்கு வரலாம்.
ஒருவேளை அந்த கொக்கைன் வியாபாரிகள் நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மதுபானக் கூடத்தில் போதையில் தகராறு செய்யவில்லை என்றால் இந்த விஷயம் இப்போதும் கூட வெளிச்சத்திற்கு வந்திருக்காது.

மேலும் இதில் சம்பந்தப்பட்ட, போதைக் கிராக்கிகளின் பட்டியல் முழுவதும் வெளியில் வருமா என்றால் அதுவும் கிடையாது.

ஏனென்றால் பணம் படுத்தும் பாடு.

ஆனால் கள்ளு இறக்கி ஒரு லிட்டர் கள்ளு 20 ரூபாய்க்கும் , அதை ருசியாகக் குடிக்க கருவாடு 40 ரூபாய்க்கும், ஒரு கள் வியாபாரி விற்பனை செய்வானேயானால் சமுதாயம் போதைக்கு அடிமையாகி விடும் என்ற காரணத்தால் தான் அரசாங்கம் அதற்கு மாற்றாக டாஸ்மாக்களைத் திறந்து வைத்து வீரன் என்ற பெயரில் 140 ரூ சரக்கை ரூ.150 க்கும், 2 ரூ ப்ளாஸ்டிக் கப்பை , 10 ரூக்கும், 20 ரூ தண்ணி பாட்டிலை 40 ரூபாய்க்கும்,15 ரூ சோடா பாட்டிலை , 40 ரூக்கும், மலிவு விலையில் சேவையாக விற்று, சமுதாயத்தை கள் போதையில் இருந்து மீட்டு, வீரத்தை அவர்களுக்குள் விதைத்து நல்வழிப்படுத்துகிறது.

கள் மற்றும் டாஸ்மாக் விலைப்பட்டியல் – நண்பர்களிடம் தரவு
வித்தியாசங்கள் இருக்கலாம்.

போதை என்பது அவரவர் தகுதிக்கு ஏற்ப வேறுபட்டு தான் இருக்கிறது.

நாம் கேள்விப்படும் இந்த கொக்கைன் என்ற போதை வஸ்துகள் எளிய மனிதர்களால் எளிதாக அடைய இயலாது.

அது ஒருவேளை அப்படி இருந்திருக்கும் என்றால் இவ்வளவு காலமாக வெளிச்சத்திற்கு வராமல் இருந்திருக்காது.

அந்த போதைப்பழக்கம் உலாவந்த சமூகம், மிகப்பெரியது. காவல்துறை எளிதாக நுழைய இயலாதது என்ற காரணத்தாலேயே பல வருடங்களாக அது வெளிச்சத்திற்கு வராமல் இருந்திருக்கிறது

ஆனால் அந்தக் கலாச்சாரம் போலவே கள் கலாச்சாரம் வாழ முடியுமா என்றால் கண்டிப்பாக இல்லை.
ஏனென்றால் எளிய மக்கள் என்றால் சட்டம் எளிதாக எட்டி உதைத்து விடும்.

கொகைன் குற்றவாளிகளைப் பிடித்து விசாரித்து , விசாரணையை மேலும் துரிதப்படுத்துவதற்கு பாராட்டுகள்

ஆனால் இத்தனை பெரிய்போதைப் பொருள் இத்தனை ஆண்டுகாலமாக உபயோகத்தில் இருந்தும் கூட நிகழ்ந்து விடாத எந்த ஒரு மோசமும், கள் புழக்கத்தால் நிகழ்ந்து விடுமா?

அல்லது டாஸ்மாக் மதுப்பிரியர்களை விட கள் பிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்து
விடும் என்ற எச்சரிக்கை காரணமாக கள் தடை இருக்கிறதா?

டாஸ்மாக் கடைகளைப் போலவே கள் இறக்குமதி மற்றும் விற்பனையைக் கூட அரசாங்கமே எடுத்து நடத்தலாமே?

எப்படி மது ஆலைகளை நம்பி, மதுக்கடைகளை நம்பி பல ஊழியர்களும்,
தொழிலாளர்களும் , தொழிலும் , வியாபாரமும் உள்ளதோ அதைப்போலவே பனையை நம்பிப் பல மக்கள் கள் இறக்கி தங்கள் வாழ்வாதாரத்தை உருவாக்கிக் கொள்ளலாம் அல்லவா?

இந்தக் கருத்து இப்போது இருக்கும் அரசியல் கட்சிகளுக்கும், பெரியாரின் கொள்கைக்கும் எதிரானதாகத் தோன்றலாம்.
ஆனால் பெரியாரின் பெயர் கூவும் மிகப்பெரிய அரசியல் கட்சிகளும் கூட இப்போது கடவுள் மறுப்பு அல்லது மூட நம்பிக்கைக்கு எதிரான கோஷங்களையோ , கொள்கைகறையோ பின்பற்றுவதில்லை.

அப்படியிருக்கும் போது இந்தக் கள் விஷயத்தில் மட்டும் , பழைய கதை மாறாது என்பதெல்லாம் ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்று…மீண்டும் கள் இறக்க அனுமதி கிடைத்தால், அது சம்பந்தமான தொழில்கள் நிலைக்கும், தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெருகும்.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.