எதுவுமே இல்லாத வாழ்க்கை. திசை தெரியாத படகு போல தான்.
நட்ட நடு கடலில் திசை தெரியாமல் நிற்பவன் துடுப்பிட்டும் பிரயோஜனம் என்னவோ?
அவ்வளவு தான்… முடிந்தது…
யாராவது வந்து திசை காட்டிவிட்டாலொழிய வாழ வழியில்லை.
கடல் தேவதைகளோ கடவுளோ வருவார், நம்மைக் காப்பார் என்ற சிந்தனை மகா மூடத்தனம்.
திசைகாட்டியாகவோ, வழிகாட்டியாகவோ வருவதன்னவோ மனிதனோ மற்ற பிற சாதாரண உயிரினங்களோ தான்.
சூரியனைக் கண்டு திசையைப் பிடிக்கலாம்.
நீரோட்டத்தைக் கண்டு திசையைப் பிடிக்கலாம்.
மீன்களின் ஓட்டம் கண்டு திசையைப் பிடிக்கலாம்.
ஆக நடுக்கடலில் நின்று தவித்தாலும், தப்பிக்கவோ வாழவோ வழியுண்டு.
ஆனால் அதைப் புரிந்து கொள்ள பக்குவமும் தெளிவான மனநிலையும் வேண்டும்!
இறுகிய மனதுடனும், குழம்பிய மூளையுடனும் இருக்கும் வரை எதையும் சாதிக்க முடியாது.
கஷ்டமும், இழப்பும் இல்லாத வாழ்க்கை வரம் தான்.
ஆனால் வரம் எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
இழந்ததையே நினைத்து இருப்பதை இழந்து விடாமல், மனதைத் தேற்றிக் கொண்டு இருப்பதையாவது குறைந்தபட்சம் அனுபவிக்கலாம் தானே?
இழந்தது மிகப்பெரிய விஷயம் என்றால், மிகப்பெரிய சந்தோசம் தான் நம் வாழ்க்கையை மீண்டும் சீராக மாற்றும் என்ற காத்திருப்பு தவறு.
பல சின்ன சின்ன சந்தோசங்ளை ஒன்றிணைந்து அனுபவித்தால் அது மிகப்பெரிய சந்தோசம் தரும்.
இழப்பின் துயரம் சற்று குறையும்…
வாழ்க்கையின் சந்தோசம் நிச்சயம் சூழ்நிலை காரணமாக அமையலாம். மாறலாம்…
சிரித்துப் பேச சில நண்பர்கள். பழைய இனிய நாட்களை அசை போட சில நிமிடங்கள் இருந்தால் போதும்.
பிணமான பின்பும் வாழ்ந்து விடலாம்.
இவை இல்லாத சூழ்நிலையில் வாழ்க்கையை நடைபிணமாகத்தான் வாழ வேண்டும்!
பலரின் கதி இதுதான்.
வாழ்க்கையில் வருத்தங்கள் இருக்கலாம்.
ஆனால் அந்த வருத்தங்களை மட்டுமே வாழ்க்கையாக எண்ணிவிட்டால் நம்மைச் சாரந்த சூழ்நிலையும் சீரழிந்து போகும்.
சூழ்நிலை சீர்குலைந்து விடக் கூடாது என்பதற்காக வருத்தங்களை மறைத்து வாழ்க்கையை வாழ்ந்து ( நடிப்பதாக இருக்கலாமோ?) கொண்டு இருக்கும் பல மனிதர்களின் யதார்த்த பதிவு.
இருக்கலாம்… இருக்கிறது!