Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

காவல்துறை யார் நண்பன்?

நமக்கு எதுக்குப்பா வம்பு என்று சாமானியர்கள் பலரும், பலவற்றை சகித்துக் கொண்டு தங்களது ஆத்திரத்தையும், கோபத்தையும் அடக்கிக் கொண்டு இருக்குமிடம் தெரியாமல் வாழ்வதற்குக் காரணம், இந்த அமைப்பின் மீதான அதீத பயம் தான்.

காவல்துறை உங்கள் நண்பன் வாசகம் இங்கே யாருக்குப் பொருத்தம் என்பது தான் முதல் கேள்வி.

விடை தெரியாத கேள்வி.

காவல்துறை என்றால் ஒட்டுமொத்த காவல்துறையும் தங்களது வேலையைச் செய்யவில்லை அல்லது அனைத்து காவலர்களும் தவறானவர்கள் என்று சித்தரிப்பது நமது நோக்கமல்ல.

காவல்துறையில் பணிபுரியும் சொந்தங்களும் , நண்பர்களும் நமக்கும் உண்டு.
ஆனால் அந்தக் கட்டமைப்புச் சிக்கலும், அந்த அமைப்பின் செயல்பாட்டு வழிமுறைகளும் சாமானியனுக்கு சாதகமா என்று கேட்டால் , நம் பதில் இல்லை என்பதே ஆகும்.

விசாரணை என்ற படத்தில், அந்த நான்கு இளைஞர்களைக் காப்பாற்றிக் கூட்டி வரும், தேவதை போன்ற சமுத்திரக்கனி, பிறகு சூழ்நிலை காரணமாக அந்த நால்வரையும் கொடூரமாகக் கொலை செய்வது தேவையாகி விடுவது போல, இன்றைய அரசியல் மட்டும் சமுதாயச் சூழலில் ஒரு சில நேரங்களில் காவல்துறை ஏவல் செய்யப்பட்ட குட்டிச் சாத்தான்கள் போல, கொடூரமான செயல்களைச் செய்து சாமானியர்களை வதைப்பது தான் இப்போதும் நிகழ்ந்திருக்கிறது.

முன்பின் தெரியாத ஆளிடம், தனது நான்கு சக்கர வாகனத்தை நிறுத்தச் சொன்னார்கள் என்பதே ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்.
அதுவும் அவருக்கு நான்கு சக்கர வாகனமே ஓட்டத் தெரியாது என்பது இதில் இன்னொரு பெரிய கேள்விக்குறி.

பரவாயில்லையப்பா, உனக்கு ஓட்டத் தெரியாவிட்டாலும், வேறு யாராவது ஒரு ஆறு வைத்து அந்த வாகனத்தை நிறுத்தி விடு என்று சொன்னதெல்லாம், 4 ஆவது வகுப்புப் படிக்கும் குழந்தை கூட , ஓஹோ, சரி நம்பிட்டேன் என்று சொல்லும் அளவிற்கு முரணானது.

அதையும் தாண்டி கேள்வி எழும் விஷயம், அப்படி முன்பின் தெரியாத ஆளிடம் நான்கு சக்கர வாகனத்தை பத்து சவரன் நகையோடு ஒப்படைத்தது.

நகையை அணிந்திருக்க வேண்டும், அல்லது வீட்டிலேயே வைத்திருக்க வேண்டும்.
அதுவும் இல்லாவிட்டால் நான்கு சக்கர வாகனத்தை விட்டு இறங்கும் போது தம்மோடு அதை எடுத்துச் சென்றிருக்க வேண்டும்.

ஆனால் இது எதுவமே இல்லாமல் , பத்து பவுன் தங்களது வண்டியில் வைத்து விட்டு, அதையும் வேறொரு தெரியாத நபரிடம் நம்பி ஒப்படைப்பது என்பதெல்லாம் இந்த வழக்கின் மிகப்பெரிய சந்தேகங்கள்.

இதையெல்லாம் நீதிமன்றம் முறையாகக் கேள்வி எழுப்பியிருப்பது ஆறுதல் என்றாலும், போன உயிர் திரும்ப வரப்போவதில்லை.

இந்த வழக்கில் உண்மையிலேயே நகை காணாமல் போனதா அல்லது அந்த இளைஞர் இவர்களிடம் 500 ரூ பணம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், இவர்கள் தங்களது பணத்திமிரையும், அதிகாரத்திமிரையும் காட்டுவதற்காக இது மாதிரி நகை காணவில்லை என்று ஏதாவது கதை சொல்லி ஜோடித்து விட்டார்களா என்பதைக் கண்டறிந்து , ஒருவேளை இது பொய்யான வழக்கு என்றால், அந்த இளைஞரின் குடும்பத்திற்கு மிகப்பெரிய வாழ்வாதார ஆறுதல் தொகையும், இந்த வழக்கை ஜோடித்த , இளைஞர் சாவுக்குக் காரணமான காவலர்கள் மட்டுமல்லாது, அந்த இரு பெண்களின் மீதும், அவர்களின் பின்புல அதிகாரி மீதும் நிச்சயம் கொலைவழக்குப் பதிந்து தண்டனை அளிக்க வேண்டும்.

மேலும் அந்த இளைஞரின் சாவுக்குக் காரணமான அந்த ஆறு காவலர்களின் பணி பறிக்கப்பட்டு, தக்க தண்டனையும் அளிக்கப்பட வேண்டும்.
அவர்களுக்கு ஆதரவாகப் போராடுபவர்கள், பேசுபவர்களை ஒரு சாமானியனின் மீது காவல்துறை எப்படி நடவடிக்கை எடுக்குமோ, அதேபோல பாரபடசமில்லாமல் அந்தக் கொலைகாரக் குடும்பத்தின் மீதும் நடவடிக்கை வேண்டும்.

காவல்துறைக்கு மக்கள் மீதிருக்கும் பயத்தையும், அதிருப்தியையும் அதிகப்படுத்தும் விஷயமாக இதுபோன்ற சம்பவங்கள் அவ்வப்போது நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது.
காவல்திறையில் சீரமைப்பு ஏற்படுமாயின் அதுவும் நிகழும்.

அவர்களது கோபத்தையும் விரக்தியையும் விசாரணை என்று
வரும் அப்பாவி மக்களிடம் தான் காட்ட்வழியிருக்கிறது.

இந்தப் பனிச்சுமை காரணமாக சில காவலர்கள் தற்கொலை செய்ததுகொண்டுள்ள கதைகளும் உண்டு.

இந்த உயிரிழப்பை, தியாகத்தை ஒரு பெரிய விஷயமாகக் கருதி காவல்துறையில் ஒரு நல்ல சீர்திருத்தம் ஏற்படுத்தி உண்மையிலேயே காவல்துறை மக்களின் நண்பன் என்ற நிலை உருவாக வழி ஏற்பட்டால் இனிமை.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.