ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம் உயிரினும் ஓம்பப் படும்.
இப்படி உயிரைக்காட்டிலும் அதிக முக்கியத்துவம் கொடுத்துப் பேணிக்காக்கப்பட்ட ஒழுக்கமானது, தலைமுறைகள் தாண்ட, கலாச்சாரங்கள் சிறிது மாற, அதிலே காணாமல் போகிறது.
90 முதல் 2000 கால கட்டங்களில் , பள்ளிக்கு ஒழுங்கான சிகை அலங்காரத்தோடு செல்லாவிட்டாலே அடி
தான். அடித்த கையோடு வீட்டுக்கு அனுப்பி சிகைமுடியை வெட்டி வரச்செய்வார்கள்.
வீட்டிற்குச் சென்றால், “நான்தான் முன்னாடியே சொன்னேன்ல, இன்னைக்குப் படிப்புப் போச்சா?“ என்று சொல்லி அங்கே இரண்டு அடி விழும்.
எங்களில் பெரும்பாலான ஆட்களுக்கு இந்தப் பொருத்தமும் பயமும் உண்டு. பள்ளியில் நடந்தது என்ன ஆயினும், ஏதாவது அடி வாங்கினால் வீட்ல சொல்லக்ககூடாது.
சொன்னா அங்க இரண்டு அடி விழும்.
நீ ஏதும் தவறு செய்யாமல் பள்ளியில் ஏன் அடிக்கப் போகிறார்கள் என்று.
சிகை அலங்காரத்திற்காக சீப்பு வைத்திருந்தாலே ரௌடி பட்டியலில் சேர்க்கப்படுவோம்.
ஆசிரியர்களிடம், எதிர்த்துப் பேசாமல், தலைவணங்கி மரியாதையுடன் நடந்து கொண்டோம்.
பள்ளிக்கூட சீருடையுடன் பகல் நேரங்களில் எங்கேனும் சென்றால், முகம் தெரியாதவர் கூட, தம்பி பள்ளிக்கூட நேரத்துல இங்க என்ன செய்றீங்க என்று கேள்வி எழுப்பினர்.
இதெல்லாம் இருந்தும் கூட, அந்த நாட்கள் இனிமையானவை தான்.
நாங்கள் பள்ளி வாழ்க்கையை ரசித்து மகிழ்ந்து வாழ்ந்தோமா என்றால், ஆமா என யோசிக்காமல் சொல்வோம்.
சுதந்திரம் என்பது பிறர் சொல்பேச்சைக் கேளாமல், யாருக்கும் அடங்காமல் திமிராக சுற்றுவதல்ல.
அது வேறு.
சுதந்திரம் சுயமரியாதைக்கு எல்லாம் இன்று வேறு விதமான விளக்கங்கள் அளிக்கப்படுகிறது இந்தத் தலைமுறை இளைஞர்களால்.
சரி, இதையெல்லாம் அனுபவித்து நிம்மதியாக மகிழ்ச்சியாக வாழ்கிறார்களா என்றால் ???
எனக்கு நினைவிருக்கிறது,
12 ஆம் வகுப்புப் படிக்கும் போது மாலை நேரம் பள்ளி முடிந்து ஒரு 15-20 நிமிட இடைவெளிக்குப் பிறகு, சிறப்பு வகுப்புகள் துவங்கும். அந்த இடைவெளியில் பள்ளியின் பின்னால், பேருந்து நிலைய பால்பண்ணை தேநீரகத்தில் நண்பர்களோடு சென்று ஒரு தேநீர் பருகிவிட்டு வருவோம்.
இது பள்ளி ஆசிரியர்களால் கேள்வி எழுப்பப்பட்டு, பிறகு நாங்கள் அனைவரும் வீடுகளில் பெற்றோரிடம் இதைத் தெரியப்படுத்திவிட்டோம் என்ற தகவல் தந்த பிறகு தான் சரி போய் வாருங்கள் என்று சொன்னார்கள்.
ஆனாலும் கூட, சிறப்பு வகுப்பை முடித்துவிட்டு வீட்டில் போய் தேநீர் பருகினால் ஆகாதா?
பேருந்து நிலையத்திற்குக் கூட்டமாக செல்வது பாதுகாப்பானதா என்ற கேள்வியும் இருந்தது.
இத்தனைக் கெடுபிடிகள் இருந்தும் எங்கள் வாழ்வில் நிம்மதியும் மகிழ்ச்சியும், ஒரு பாதுகாப்பு அரணும் இருந்தது.
இன்று 12 ஆம் வகுப்பு மாணவன் சக மாணவர்களால் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறான் என்ற செய்தியைப் படித்த போது, ச்சீ 20 வருடங்களில் வளர்ச்சி என்ற பெயரில் இப்படி சமுதாயம் சீரழிந்து நாசமாகிப் போனதே என்ற வருத்தம் தான் மனதில் முள்ளாகக் குத்துகிறது.
அளவுக்கு மிஞ்சிய அமிர்தமும் நஞ்சு தான்.
இந்தச் சீரழிவு சரிசெய்யப்பட வேண்டும். பெற்றோர்களும், ஆசிரியர்களும், முந்தைய காலகட்டத்தைப்போல ஒழுக்கத்தை அரும்பாடுபட்டாவது வளர்த்தெடுக்க வேண்டும்.
சுதந்திரம் என்ற பெயரில் நிகழும் சீரழிவுகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும்.
இல்லாவிட்டால், இன்று 12 ஆவது, நாளை பத்தாவது, அடுத்தது ஐந்தாம் வகுப்பு என்று செய்தித்தாள்களைப் பிரட்டிக்கொண்டே மனம் வருந்த வேண்டியது தான்.