Categories
சினிமா

3 BHK- திரை விமர்சனம்

கல்யாணம் பண்ணிப் பார், வீட்டையும் கட்டிப் பார் என்று நம்மூரில் ஒரு சொலவடை உண்டு.

அதற்குக் காரணம் இந்த இரண்டு விஷயங்களையும் செய்து முடிக்க நாம் படும் அவஸ்தைகளும் மெனக்கெடல்களும் தான்.

அப்படி இதில் இரண்டாவதாக சொல்லப்பட்ட வீடு என்ற விஷயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் தான் 3 BHK.

இதில் மையக்கரு வீடு என்றாலும் படத்தில் குடும்பத்திற்கான அத்தனை விஷயங்களும் உள்ளடங்கியிருப்பது மிகச்சிறப்பான விஷயம்

இது படத்தை நமக்கு மிக அருமையான படமாக உணர்த்துவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

அப்பா அம்மா அண்ணன் தங்கை, என்று விட்டுக்கொடுத்து வாழும் ஒரு கீழ் நடுத்தர வாழ்க்கை வாழும் ஒரு குடும்பத்தின் வாழ்வை பிசிறு இல்லாமல் பதிவு செய்தது போல அருமையான படம்.

ஒரு நடுத்தர வாழ்க்கை வாழும் தந்தையானவர்,
தன் பிள்ளைகளை வளர்க்கும்,விதம், மகன் மகளின் மீதான தாய்ப்பாசம் என்பது மட்டுமில்லாமல் நல்ல அண்ணன் தங்கை உறவையும் பிரதிபலித்திருக்கிறது.

ஒரு ஏற்றுமதி இறக்குமதி நிறுவனத்தில் கணக்கராக சரத்குமார், வாய்க்கும் வயித்துக்கும் என்றபடியான வாழ்க்கை. அதன் காரணமாக வாடகை வீடுகளில் சிக்கனம், ஒரு 500, 1000 வாடகை கம்மியானால் நல்லது என்று தேடித் தேடி வீடு பார்க்க, அது அவரது பிள்ளைகளுக்கு பிடிக்கவில்லை.
அதனால் கூடிய சீக்கிரம் சொந்த வீடு வாங்கியாக வேண்டும் என்று முடிவு செய்கிறார்கள்.

அப்போது சரத்குமார், தான் 7.5 லட்சம்
பணம் சேர்த்து வைத்திருப்பதாகச் சொல்கிறார்.

மீதிப் பணத்திற்கு, அவரது மனைவி தேவயானி பலகாரம் செய்து விற்று ஏதாவது சம்பாதிக்கலாம் என்றும், சரத்குமார் தினசரி 4 மணி நேரம் அதிகப்படியான நேரம் வேலை செய்யவும் முடிவு ஆகிறது.

ஆண்பிள்ளையின் வாழ்க்கை நன்றாக அமைய வேண்டும் என்று சித்தார்த் பெரிய பள்ளியில் மிக அதிகமாக செலவு செய்து படிக்க வைக்கப்படுகிறார்.

அவருக்கான வேலை படித்து நல்ல மதிப்பெண் பெறுவது மட்டுமே.

அவர் பனிரெண்டாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற இயலாத காரணத்தால் , சேமித்த பணம் அவருக்குக் கல்லூரியில் இடம் வாங்க செலவாகி விடுகிறது.
கல்லூரி நிர்வாகஸ்தர் சொல்ல தனக்கு விருப்பமில்லாத படிப்பில் சித்தார்த் தள்ளப்படுகிறார்.
பள்ளியில் தனக்கு மிகவும் பிடித்தத் தோழியைக் கண்டறிய இயலாமல் ஒரு பக்கம் பரிதவக்கிறார்.

மீண்டும் அந்தக் குடும்பம் பணம் சேர்க்க, சரத்குமாருக்கு இதய பாதிப்பு ஏற்பட்டு அந்த மொத்தப்பணமும் செலவாகி விடுகிறது.

மருத்துவமனையில் கண் விழித்ததும், சாப்பிட்டியா என்று மனைவியிடம் கேட்கும் காட்சி கவிதை..ஒரு நல்ல தகப்பனாக பல இடங்களில் சரத்குமார் அவர்கள் வாழ்ந்திருந்தாலும் கூட , இந்தக் குறிப்பிட்ட காட்சிகள் அவருக்கு கிரீடம்.

அதையடுத்து மீண்டும் ஓட்டம், பணம் சேமிக்க, அப்போது பெண்ணின் அதாவது மகளின் திருமண பந்தம் ஏற்படுகிறது.
தனது தம்பியின் பேச்சைக் கேட்டு மிகப்பெரிய பணக்கார வீட்டில் பெண்ணைக் கொடுக்கிறார். 35 லட்ச ரூபாய் செலவு.

சமீபத்திய ரிதன்யா கதை போலத்தான் ஆகிறது அவர்களது மகளின் வாழ்க்கை.
ஆனால் அந்த மகள் தைரியமாக வளர்க்கப்பட்டவள் என்பதால் அவள் செய்யும் காரியத்தால் கைதட்டல்களையும் விசில்களையும் பெறுகிறார்.
பிடிக்காத ஐடி வேலையில் சித்தார்த்.

அவருக்கு ஒரு பணக்காரப் பெண் பேசி முடிக்கப்பட்டு, அவர் அதை விருப்பமில்லாமல் தவிர்த்துத் தனது பள்ளித் தோழியை எதிர்பாராத விதமாக சந்தித்து அவரையே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்.

இதெல்லாம் காட்சிகளாக நல்ல திரைக்கதையாக, நம் பக்கத்து வீட்டு அல்லது நமது வீட்டில் நிகழ்ந்த அன்றாட நிகழ்வுகளைப் போல யதார்த்தமாகப் படம் நகர்வதால் அந்தக் குடும்பத்தோடு நாமும் ஒன்றிப்போகிறோம்.

அவர்கள் இறுதிக்காட்சியில் வீடு வங்கி கிரகப்பிரவேசம் செய்யும் வரை, அந்த விழாவிலும் நாம் மகிழ்வோடு பங்கெடுத்துக் கொண்டு, (அதாவது டைட்டில் கார்டு ஓடும் காட்சிகளை நின்று ரசிக்கிறோம்.), அந்த விழாவுக்கு வரும் ஒவ்வொரு ஆட்களையும் கைகாட்டி இவர் அந்த ஆளு, இவரு பழைய வீட்டு ஓனர், இது சித்தார்த்தக்குப் பேசி முடிச்ச பொண்ணு, ஹே, இவன் பாரு வெள்ளக்காரிய கல்யாணம் பண்ணிட்டான் என்று அந்த விழாவிற்கு வரும் படத்தின் கதாபாத்திரங்களை நமது வீட்டு விழாவின் ஆல்பத்தில் நமது சொந்தக்காரர்களை நண்பர்களை ரசிப்பது போல ரசிக்க வைத்தது , படத்தில் நாம் எவ்வளவு ஒன்றிவிட்டோம் என்பதை உணர்த்தியது.

யோகிபாபு வந்திருக்க வேண்டாம், இருந்தாலும் நல்ல காட்சிகள் தான்.

கார்த்தியின் பின்புலக் குரல் கனீரென நம்மை ஈர்த்தது.

மொத்தத்தில் குடும்பமாக ரசிக்கக் கூடிய அழகான கவிதை.

கொஞ்சம் மெதுவாக நகரும் படம்..
சரத்குமார், நெஞ்சை விரித்து நாலு பேர் எலும்பை முறிப்பார், சித்தார்த் துப்பாக்கி எடுத்து சுடுவார் என்று எண்ணிப் படத்திற்கு வந்தால் மோசமாகி விடும்

இது அந்த மாதிரி அல்ல.வேற மாதிரி.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.