எதிர்பாராமல் கண் இமைக்கும் நேரத்தில் மின்னல் வெட்டுவது போல விபத்துகள் நிகழ்ந்து மிகப்பெரிய பாதிப்பையும் துயரத்தையும் உருவாக்கி விட்டுச் செல்வது தவிர்க்க இயலாத ஒன்றுதான்.
ஆனால் சில மனிதர்களின் அலட்சியத்தால் விபத்துகள் ஏற்பட்டு ஒரே குடும்பத்தைச்சார்ந்த அக்காளும் தம்பியும் துடிதுடித்து இறந்து போவது என்பது மனதைத் துளைத்து விடும் தோட்டாக்கள் போன்றது.
கடலூரில் பள்ளி வேனின் மீது ரயில் மோதி விபத்துக்குள்ளானது என்பதில் பலரும் பலவிதமான கருத்துகளையும், செய்திகளையும் சொன்னாலும் கூட, நம் யாராலும் அந்த இழப்பை ஈடு்செய்ய இயலாது.
அந்த வலிக்கு மருந்து ஏதும் கிடையாது..
இந்த விஷயம் இப்போது பெரும் அரசியல் புலமாகி இருசாரார் ஒருவரை ஒருவர் சாடிக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த கேட் கீப்பர் இந்திக்காரன் என்றும், அவனுடைய தவறால் தான் இவ்வளவு பெரிய விபத்து ஏற்பட்டது என்றும் ஒரு சாராரும், கேட் மூடாவிட்டால் என்ன ரயில் வருகிறதா என்று கூடப் பாராமல் ஒரு பள்ளி வாகனத்தை இயக்குவதா என்று ஒரு சாராரும் சரமாரி கேள்வி எழுப்பி வருகின்றனர்.
உண்மைதான் கேட் திறந்திருக்கிறதோ அல்லது மூடியிருக்கிறதோ , நமது பாதுகாப்பு என்பது மிகவும் அவசியமானது.
முதலில் நம்மை நாம்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
கேட் திறந்திருந்தாலுமே ரயில் வருகிறதா என்று இருபுறமும் 30 வினாடி நோட்டமிட்டிருந்தாலே, இவ்வளவு கொடுமையான விபத்து தவிர்க்கப்பட்டிருக்கும்.
ஆனால் இதற்கு முற்றிலும் முரணாக இன்னொரு தகவலும் பரவுகிறது. அந்த கேட் மூடப்பட்டு ரயில்வே நிலைய அதிகாரிக்கும் தகவல் அளிக்கப்பட்டுவிட்டது.
அதன்பிறகு இருசக்கர வாகன ஓட்டிகளும், பள்ளி வேன் ஓட்டுனரும் வற்புறுத்திய காரணத்தால் தான் கேட் மீண்டும் திறக்கப்பட்டது என்று ஒரு தகவல் பரவுகிறது.
இதில் ஒரு மறுக்க முடியாத உண்மை உள்ளது.
கேட் கீப்பர் கேட் மூடியாயிற்று, ரயில் கிளம்பலாம் என்று ரயில் நிலைய அதிகாரிக்குத் தகவல் சொன்னால் தான் ரயில் கிளம்பியிருக்கும்.
ஆக கேட் மூடப்பட்டு அந்தத் தகவல் சென்றிருக்க வேண்டும்.பிறகு இந்த வாகன ஓட்டிகளின் வற்புறுத்தலால் கேட் திறக்கப்பட்டிருக்க வேண்டும்.
அல்லது கேட் மூடப்பாடமலேயே கேட் மூடப்பட்டது என்று போலியாக தகவல் சென்றிருக்க வேண்டும்..
இந்த இரண்டில் எது நடந்திருந்தாலும் அது கேட் கீப்பரின் தவறு தான்.
அதனால் அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார் என்று தென்னக ரயில்வே அறிவித்துள்ளது..
சரி இது ஒரு மனிதனின் தவறு.
ஆனால் ஒரு வாகன ஓட்டி, அதுவும் பள்ளி மாணவர்களைச் சுமந்து செல்லும் வாகனத்தை இயக்குபவர் எவ்வளவு கவனமாக இருந்திருக்க வேண்டும்?
நொடிக்கு நொடி உஷாராக, உள்ளே இருப்பது நம் நாட்டின் எதிர்காலம், பல குடும்பங்களின் கனவு என்பது அவரது மனதில் எண்ணம் உதித்திருக்க வேண்டுமல்லவா?
இப்போது எத்தனை சிஐடி வேலை செய்து தவறு யார் மீது என்று கண்டறிந்து விடுவதால் போன உயிர் திரும்ப வந்துவிடுமா?
அந்தப்பிஞ்சுக் குழந்தைகளின் கதறல் மறைந்து தான் விடுமா?
ஓட்டுநர் தொழில் என்பது வெறுமனே உட்கார்ந்து எழுந்து நேரம் கடத்துவது அல்லவே?
பள்ளி வாகனத்தில் அந்த ஓட்டுநரைத் தவிர்த்து இன்னொரு கண்காணிப்பாளர் இருந்து அவராவது ரயில் வருவைதப் பார்த்திருந்தால் இந்த விபத்து நிகழாமல் இருந்திருக்குமே?
இது போன்ற இழப்பு இனிவரும் காலங்களில் எப்போதுமே ஏற்பட்டு விடக்கூடாது என்று வேண்டிக் கொள்வோம்.
ஓட்டுனர் வேலை செய்பவர்கள், இந்த விபத்தை ஒரு பாடமாக எடுத்துக் கொண்டு இனி வரும் காலங்களில் மிகுந்த எச்சரிக்கையோடு, வாகனத்தை இயக்க வேண்டும்.
ரயில்வே துறை கூடிய சீக்கிரம் இன்டர்லாக் கேட் முறையை அத்தனை கடவுகளிலும் ஏற்படுத்த வேண்டும்.
மேலும் இந்த விபத்து நிகழ்ந்த ரயில்வே கடவில், சுரங்கப்பாதை அமைக்கும் திட்டம் ஒரு வருடத்திற்கு முன்பாகவே தயாராகிவிட்டது என்றும், ஆட்சியரின் ஒப்புதல் கிடைக்காத காரணத்தால் தாமதமாகிறது என்றும் ஒரு புறம் செய்திகள் வருகிறது.
இதுமாதிரி ஏதாவது திட்டங்கள் ஏற்படுத்தப்படும் போது, அரசு அதிகாரிகள், ஊழியர்கள் பொது மக்களின் நலன் கருதி அதை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும்.
தொலைந்து போன கனவுகளுக்கும், தூரமாகிப்போன நினைவுகளுக்கும் , மறைந்து போன குழந்நைகளுக்கும் நினைவுகளின் கண்ணீர் அஞ்சலி.