Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

அன்பான அரசுப்பள்ளி ஆசிரியர்கள்

மாதா பிதா குரு தெய்வம்.

ஒவ்வொரு மனிதனின் வாழ்வும் சிறப்பாக அமைய தெய்வத்தை விட இன்றியமையாதவர்கள் ஆசரியர்கள்.

குரு என்பவருக்கு அத்தகைய மரியாதையும் இருந்தது என்பது உண்மை தான்.

குருவுக்காக விரலை வெட்டிக் கொடுத்த கதை, குரு சாபமிட்டு வித்தை மறந்து உயிரிழந்த கதை எல்லாம் படித்தவர்கள் தான் நாம்.

ஆனால் இன்றைய காலகட்டத்தில் குரு என்பவருக்கு அத்தகைய மரியாதை இருக்கிறதா என்றால் சிறிய கேள்விக்குறி தான்.

தனியார் பள்ளிகளிலும் , கல்லூரிகளிலும் ஆசிரியர்கள் தங்கள் கடமையை சீருடனும் சிறப்புடனும் செய்தாலும் கூட அவர்களுக்கான நியாயமான ஊதியமும், பணி நிரந்தரத்தன்மையும் கிடைப்பதில்லை.

மாறாக பணி நிரந்தரமும், நல்ல ஊதியமும் கிடைக்கும் அரசுப் பள்ளி , கல்லூரி ஆசிரியர்களில் பலர் தங்கள் பணியை நேர்மையாகச் செய்வதில்லை என்று நம்பப்படுகிறது.

ஆனால் அது உண்மையல்ல. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் வேலை செய்வதில்லை என்பதெல்லாம் சுத்தமான பொய்.

தனியார் மாபியா கட்டணக் கொள்ளைப் பள்ளிகள் தங்களுக்குப் போட்டியாக அரசுப் பள்ளிகள் வளர்ந்து விடக்கூடாது என்பதற்காகவே அந்த ஆசிரியர்களை மட்டம் தட்டியே வைத்திருக்கின்றன.

என்னால் கர்வமாகவும், கம்பீரமாகவும் சொல்ல இயலும். நான் படித்த அரசுப் பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் அத்தனை பேரும் தங்கள் பணியை சீருடனும் சிறப்புடனும் செய்தவர்கள் என்று.

பகலில் மட்டுமல்ல, மாலை சிறப்பு வகுப்புகளும், இரவு நேரம் தங்கிப் படிப்பதற்கான ஏற்பாடுகளும், அதற்குக் காவலுக்கு ஒருவரும் என்று அவர்கள் அதிகப்படியான வேலை தான் செய்தார்கள்.

இது ஆண்டாண்டு தொடரும் நிகழ்வு தான்.

பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சியும், அதிக மதிப்பெண்களும் எடுக்க வேண்டும் என்பது அவர்களது நோக்கம்.

பொத்தம் பொதுவாகச் சொல்வது போல, அரசுப் பள்ளிகள் நோக்கமில்லாமல் அக்கறை இல்லாமல் இருக்கின்றன என்பது முழு உண்மை அல்ல.

மாநகராட்சிகளில் சில பள்ளிகளில் சில சில தவறுகள் நிகழ்வதாகப் பேசக் கேட்டிருக்கிறோம்..ஆனால் அது எந்தளவு உண்மை என்பது ஆராய்ந்தால் மட்டுமே விளங்கும்.

அரசுப்பள்ளி ஆசரியர்களுக்கெல்லாம் கிரீடம் வைக்கும் விதமாக, திருச்சி பூவாளுர் அரசுப் பள்ளி அறிவியல் ஆசிரியர் சதீஸ்குமார் என்பவர், படிப்பு மட்டுமல்லாமல், மாணவர்களுக்கு சிறு சிறு பயிற்சிகள், அதாவது, மின்விசிறி கழட்டி மாட்டிதல் , மின் விளக்குகளை சரிசெய்தல் போன்றவையும், வங்கிகளுக்கு அழைத்துச் சென்று படிவம் நிரப்புதல் போன்றவையும் , காவல் நிலையம் எப்படி செயல்படுகிறது என்பதையும் அழைத்துச் சென்று காட்டுகிறார்.

மேலும் அந்தப் பள்ளியில் கழிப்பறை வசதி சரியில்லாத காரணத்தால், மாணவிகள் மாதவிடாய் சமயங்களில் விடுப்பு எடுப்பதும் அல்லது பக்கத்து வீடுகளுக்குச் சென்று அங்கே கெஞ்சிக் கூத்தாடி கழிப்பறையை உபயோகப்படுத்துவதுமாக இருந்தது இவருக்குத் தெரிய வந்திருக்கிறது.

வருத்தமடைந்த இவர், இதை சரிசெய்ய வேண்டும் என எண்ணி, பெற்றோர் ஆசிரியர் கூட்டம் கூட்டி, அதில் விஷயத்தைப் பேசி தானும் இதற்காக 50 ஆயிரம் ரூபாய் தருவதாகக் கூறியுள்ளார்.

பெற்றோர் ஆசிரியர் கூட்டத்திலிருந்து ஒரு 2-3 லட்சம் வசூல் வர, மீதி சில லட்சங்களுக்கு இணையத்தின் உதவியை நாடி, பல திசைகளிலுமிருந்து உதவி பெற்று இன்று அந்தப்பள்ளியில் முறையான கழிப்பறை வசதி, நாப்கின் இயந்திரம் எல்லாவற்றையும் உருவாக்கி வைத்திருக்கிறார்.

இந்த மாதிரியும் ஆசிரியர்கள் இருக்கும் போது, அரசுப் பள்ளிகள் என்றாலே அபத்தம், மோசம் என்று நாம் பொத்தாம் பொதுவாகப் பேசுவது நியாயமல்ல…அரசுப் பள்ளிகளில் கட்டமைப்பு வசதிகள் தனியார் பள்ளிகளோடு போட்டியிட முடியாது என்பது உண்மை தான்.

ஆனால் அந்த நிலையும் மாற வேண்டும்…

அரசாங்கம் இதை முழு வேகத்துடன் சரிசெய்ய வேண்டும் என்பது நமது வேண்டுகோள்.

தொடர்ந்து தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளை பற்றி விரிவுரைப்போம்..

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.