அறிமுகமாகிறது, மீரா அரிசி கஞ்சி ஷாம்பூ.
அரிசி கஞ்சியின் இயற்கையான நற்குணத்தால் இதை உபயோகிக்கத் துவங்கிய ஓரிரு முறையிலேயே நல்ல மாற்றம் தெரியும். சிகை மினுமினுக்கும், உறுதி பெறும் என்று இதன் அறிமுக விழாவில் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
இதன் ஒரு லிட்டர் ரூ.215 மட்டுமே.
இதைத் தான் என் பாட்டியும் சொன்னார்கள்.
குளிக்கும் போது லேசாக அரசிக் கஞ்சியை தலையில் தேய்த்துக்குளி, முடி நல்லா இருக்கும் என்று.
ஆனால் வானொலியிலும், தொலைக்காட்சிப் பெட்டியிலும் இதே மீரா சிகைக்காய் விளம்பரமாக வந்து, எம்மை இந்த அரசிக் கஞ்சி உபயோகிக்கும் பழக்கத்திலிருந்து மாற்றியது.
மேலும் அரசிக் கஞ்சியைத் தலையில் தேய்த்தால் முடி நறுமனம் தராது என்றும், சிகைக்காய் பொடி தேய்த்துக் குளித்தால் தான் வாசமாக இருக்கும் என்றும் பலரும் பேசிப் பேசியே அரிசிக் கஞ்சி பழக்கத்தை வேறோடு அழித்து விட்டனர்.
அட அவ்வளவு ஏன், இப்போதெல்லாம் அரிசிக் கஞ்சியே இல்லை. குக்கரில் சமைத்துக் கவிழ்த்திக் கொண்டிருக்கிறோம்.
ஆனால், பாருங்களேன் அந்த வியாபார நிறுவனத்திற்குத் தெரிந்திருக்கிறது.
இப்போது நம்மிடம் அரசிக் கஞ்சி இல்லை என்பதைப் புரிந்து கொண்டு அவர்கள் அதை வியாபாரமாக்கி விட்டார்கள்.
அரிசிக் கஞ்சி ஒருவேளை நம் வீட்டில் இருந்தாலும், அதை எப்படி முறையாகப் பக்குவமாகத் தலையில் தேய்த்துக் குளிப்பது என்ற பழக்கத்தை நம்மிடமிருந்து மறக்கடித்து விட்டார்கள்.
அவர்கள் புத்திசாலிகள்.
நாமெல்லாம் அதிபுத்திசாலிகள்.
வேப்பங்குச்சியைத் தூக்கி எறிந்து விட்டு வேம்பின் சக்தி கொண்ட பற்பசையைத் தேடிக் கொண்டிருக்கிறோம்.
கறியை வைத்துப் பல் துலக்கினால் பல் கருப்பாகி விடும் என்று நினைத்து வெள்ளை நிற பற்பசைகளை உபயோகிக்கத் துவங்கி இப்போது மீண்டும், சார்க்கோல் பற்பசைகளை உபயோகித்துக் கொண்டிருக்கிறோம்.
குழந்தைகள் உயரமாவதற்கு வலுவடைவதற்கு ஆர்லிக்ஸோ, பூஸ்டோ தான் காரணம் என்று இன்றும் கூட நம்பிக் கொண்டிருக்கிறோம்.
இன்னும் எத்தனை காலம் தான் இந்த விளம்பரக் கவர்ச்சியினால் நமது உண்மையான அறிவை இழந்து ஆட்டு மந்தைகளைப் போல, வியாபார பொருட்களின் பின்னே அலைந்து நமது அறிவையும் பொருளாதாரத்தையும் இழக்கப் போகிறோம் என்பது நமக்குத்தான் உரைக்க வேண்டும்.
மாடியிலிருந்து குதித்தால் சக்திமான் வந்து காப்பாத்துவாரு என்று நம்பிய குழந்தைகளுக்கும் நமக்கும் என்ன வித்தியாசம்?