Categories
கருத்து தற்கால நிகழ்வுகள் வணிகம்

மக்கள் மட்டும் இளிச்சவாயர்களா?

சமீத்தில் நடிகர் ஒருவரின் பேட்டி ஒன்றைக் கண்டேன்.

அவரது அன்றாட உணவுப் பழக்கம் பற்றி அதில் பேசியிருந்தார். மிக ஆரோக்கியமான உணவுப் பழக்கம். காலை எழுந்தவுடன் ஒரு கப் ப்ளாக் காபியில் (கடுங்காபி) ஒரு கரண்டி நெய் விட்டுக் கலக்கிக் குடிப்பாராம்.

பிறகு இரண்டு மணி நேரம் உடற்பயிற்சி.

காலை உணவாக 4 முட்டை வெள்ளைக்கரு மட்டும்.
11 மணிக்கு ஆப்பிள், பீட்ரூட், கேரட் கலந்து ஒரு ஜூஸ்.

மதியம் ஓரளவு பெரிய இரண்டு சிக்கன் துண்டுகள் (மசாலா, எண்ணெய் ஏதுமில்லாமல், மிளகு காரம் மட்டும் போட்டது.)

ஓரளவு காய்கறிகள் வேகவைத்தது.

மாலை 4 மணிக்கு அவல் மற்றும் கடலை கலவை.

இரவு 7 மணிக்கு ஒரு சூப்.

இது தான் அவரது அன்றாட உணவுப் பழக்கமாம்.

இந்த வயதிலும் அவர் கட்டுக்கோப்பாக இருக்கக் காரணம் இந்த உணவுப்பழக்கமும் அவரது உடற்பயிற்சியும் தான்.

இவர் ஒரு நல்ல சமூக அக்கறை உள்ள நபராக, ஒரு அரசியல் தலைவராக மக்களிடம் ஆரோக்கியமான உணவுப் பயிற்சி மற்றும் உடற்பயிற்சி பற்றிப் பேசி விழிப்புணர்வை உண்டு செய்தால் அது நியாயம்.

ஆனால் இவரோ பணத்தை வாங்கிக் கொண்டு தலப்பாக்கட்டி பிரியாணியில், சிக்கன் குழம்பை ஊற்றி, மட்டன் கோலா உருண்டை ஒரு துண்டை எடுத்து பிரியாணிக்குள் வைத்துப் பிசைந்து சாப்பிட்டால், அடடா, அவ்வளவு ருசி என்று விளம்பரம் செய்கிறார்.

ஏன் சார்? நீங்க மட்டும் கட்டுக்கோப்பா வாழனும், மத்தவங்க, கொழுப்பு அடச்சி நெஞ்சு வலி வந்து சாகனுமா?

காசு தான் சினிமாவுல சம்பாதிக்கிறீங்களே?

இது போதாம, ரம்மி சர்க்கிள் விளம்பரம் வேற.
ஏன் சார் எவ்வளவு பேர் அதில் பணத்தை இழந்து தற்கொலை செய்து கொண்டார்கள்? இதெல்லாம் கொஞ்சமாவது சரியா?

இதேபோல சோப்பு விளம்பரங்களில் நடிக்கும் விளையாட்டு வீரர்கள், துணிக்கடை, நகைக்கடை விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள், மற்ற உணவுப் பண்டம், அழகு சாதனப் பொருட்கள் சம்பந்தமான விளம்பரங்களில் நடிப்பவர்கள் முதலில் தான் அந்தப்பொருளை உபயோகிப்போமா என்று சிந்திக்க வேண்டும்.

மக்கள் என்ன இளிச்சவாயர்களா?

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.