ஆடி அமாவாசை தர்ப்பணம் இன்று.
முன்னோர்கள் பசியோடு நம்மை அனுகுவார்கள்.
அவர்களை நினைத்து வணங்கி விட்டு, அவர்களுக்காக படையல் செய்து பூஜை செய்து விட்டு அதை நாம் சாப்பிடுவது என்பது ஒரு நல்ல நடைமுறை.
நமது முன்னோர்களை, நம் வாழ்வின் முன்னோடிகளை நினைத்து வணங்க வேண்டும் என்ற ஒரு நற்காரியம் நிறைவேற்றப்படுகிறது.
அவர்களின் பெயரைச் சொல்லி காகங்களுக்கு உணவு செலுத்துவது, அதுவும் ஒரு வகையில் நற்காரியம் தான்.
நாம் ஏற்கனவே, பறவைகளுக்கு உணவு அல்லது நீர் தினசரி வைத்தால் சிறப்பு என்ற வேண்டுகோளை நமது வாசகர்களிடம் வைத்துள்ளோம்.
இன்னொரு நற்காரியம், மாடுகளுக்கு அகத்திக்கீரை வாங்கி உணவளிப்பது.
அதுவும் கூட 100 சதவீதம் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒரு நல்ல செயல் தான்.
சக மனிதனின் முகத்தைத் தலைநிமிர்ந்து பார்க்க நேரமில்லாமல் பறந்து கொண்டிருக்கும் இந்த பரபரபரப்பான உலகில், வாயில்லா ஜீவன்களைத் தேடி அலைந்து அவைகளுக்கு உணவளிக்கும் நடைமுறை இந்த நாளில் செயல்படுத்தப்படுவது, மனதில் ஒரு ஓரத்தில் மனிதத்தை நிலை நிறுத்தப் பயன்படுகிறது.
இதில் மனதிற்கு ஒவ்வாத விஷயம் என்பது மந்திரம் ஓதி எள்ளைக் கரைத்து காவாத் தண்ணியில் விட்டுவிட்டு என் முன்னோர்க்கு சாப்பாடு போட்டாச்சு என்று சொல்வது.
ஆம் முதலில் கடல் நீரில், ஆற்று நீரில் முறையாக தர்ப்பணம் நிகழ்ந்தது. அனைவரும் ஆறு வரை, கடல் வரை போக முடியாது என்பதால் குளம் இருந்தால் போதும் அங்கே கரைக்கலாம் என்று சொல்லப்பட்டது.
இப்போது குளம் கெட்டுவிடும் என்று வாளியில் நீர் வைத்து அதில் கரைத்து விடுகிறார்கள்.
அந்த நீரைக் கடைசியில் காவாயில் ஊற்றி விடுகிறார்கள்.
இது என்ன சாஞ்ஞியமா?
முறையாக செய்யாவிட்டாலும் பரவாயில்லை, ஆனால் வருடம் 3 முறை பணம் கொடுத்து, சும்மா ஒரு பெயருக்கு எள்ளைக் கரைத்து சாக்கடையில் விடுவதில் என்ன பயன்.
உண்மையிலேயே முன்னோர்கள் மீது அக்கறை இருந்தால், கங்கையிலே, கோதாவரியிலே, காவிரியிலே, ராமேஸ்வரத்திலே சென்று தர்ப்பணம் தரலாம். அல்லது பேசாமல் இருந்து விடலாம்.
குரங்கு காட்டுக்கு ராஜா வேடமிட்ட கதையாக, சாக்கடையில் தர்ப்பணம் தர ஒரு மிகப்பெரிய கூட்டமே இங்கு தள்ளுமுள்ளு செய்து கொண்டிருக்கிறது.
சொல்லப்போனால் நானும் அந்தக்கூட்டத்தில் ஒருவன் தான். இதில் என்ன பிரயோஜனம்?
அவர்கள் வருமானத்தைத் தவிர? என்ற கேள்வியை எழுப்பினால், அப்படி சொல்லாதப்பா! சும்மா மனதிருப்பதிக்காக செஞ்சுரு.
100 ரூ தானே, 200 ரூ தானே என்று நம்மை சமாதானம் செய்வார்கள்.
விருப்பமே இல்லாவிட்டாலும் செய்து தான் ஆக வேண்டும்.
ஆனால் கேள்வி கேட்பது நிற்காது.
கூடிய விரைவில் மாறும். முடிந்தால் ஆறு , கடலுக்குச் சென்று முறையாகச் செய்யலாம். இல்லாவிட்டால் விட்டுவிடலாம்.
எல்லோரும் வருடத்தில் 3 முறையும் செய்தே ஆக வேண்டும் என்று கட்டாயமெல்லாம் இவர்கள் கிளப்பி விட்டது.
பணத்தையும் கொடுத்து விட்டு சாக்கடையில் எள்ளைக் கரைப்பானேன்?