இரண்டு பறவைகள் காதலிப்பது அழகு தான்.
ஆனால் அந்தக் காதல் நிலையாக ஒரு மரக்கிளை, ஒரு பறவைக்கூடு, இதெல்லாம் அவசியம்.
மனிதர்களின் காதலும் அவ்வாறு தான்.
நல்ல அன்பான கணவன் மனைவியின் அன்பும் உறவும் நீடித்து நிலைத்திருக்க, அவர்களுக்கு இடையிலான அன்பு மட்டும் போதாது. சுற்றமும், உறவும், நட்பும், குடும்பமும் அவர்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதை ஜாலியான வகையில் எடுத்துரைத்த படம் தலைவன் தலைவி.
பார்த்த உடன் காதல், தெய்வீகமான காதல் என்று இழுக்காமல், பெண் பார்க்கும் படலத்தின் வழியாகக் கூட, ஆழமான காதல் உருவாகும் என்பதை காட்சிபடுத்திய விதம் மிக அருமை.
அதேபோல, பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டார் உறவு அறிமுகங்கள் யதார்த்தமாக இருந்தது.
பிடித்தமான பெண், ஜோசியரின் பேச்சால் பிடிக்காத பெண்ணாக மாறிப் போக, அந்தப் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன் என மகன் அடம்பிடித்துத் திருமணம் செய்ய, மாமியாரும், நாத்தனாரும் அந்த குடும்பத்தில் கதகளி ஆடுவது சிறப்பான நகைச்சுவை மற்றும் யதார்த்தமான காட்சி ரகங்களால் வெளிப்பட்டிருப்பது அருமை.
ஒரு நல்ல கணவன் மனைவியின் உறவில், கணவனின் அம்மா, கனவனின் தங்கை, மனைவியின் அம்மா என்று அனைவரும் நடனமாடுவதைத் தான் பெரும்பாலான காட்சிகளாக அமைத்துள்ளனர்.
இன்னொரு காட்சியில் சொந்தக்காரன் ஒருவன் எவ்வளவு மோசமான காரியங்களைச் செய்து இவர்களின் வாழ்வில் விளையாடி இருக்கிறான் என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
கோபம் வரும் சமயங்களில் சிறிது விட்டுக்கொடுத்துப் போவது, குடும்பத்திற்கு நல்லது.
கணவன் – மனைவிக்கிடையே சண்டை வருவதும், மனைவி கோவித்துக் கொண்டு அம்மா வீட்டுக்குப் போவதும், கணவன் பின்னாடியே போய் கெஞ்சி – மனைவியை சமாதானப்படுத்துவதும் என்று சில காரசாரமான விஷயங்களை ஜாலியாக சொல்லி நம்மை மகிழ்வித்திருக்கிறார்கள்.
மொத்தத்தில் ஒரு மெகா சீரயலை, காமெடியாக சில அடிதடிக் காட்சிகளோடு, சில நகைச்சுவை சேர்த்து நன்கு கிண்டிய பிரியாணி போல நமக்கு நல்ல படமாகத் தந்திருக்கிறார்கள்.
கதாபாத்திரங்கள் அறிமுகம் போலவே படத்தில் நடித்தவர்களும் அந்த கதாபாத்திரங்களை நம் கண் முன்னே நிறுத்தியது மனதிருப்தி.
கணவன் – மனைவி பந்தம் என்பது காகிதத்தாலோ, மூன்று முடிச்சாலோ, மற்றவர்களின் சூழ்ச்சியாலோ, வற்புறுத்தலினாலோ பிரிக்கவோ நீடிக்கவோ இயலாது. தூய்மையான அன்பு ஒன்றே அந்த உறவை நீடிக்கச் செய்யும் என்பதை சிறப்பாக விளக்கியிருக்கும் நல்ல படம்.
இந்தக்கால ஜோடிகளுக்கான படம்.