பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.
இதைச் சொன்ன வள்ளுவனின் சாதி என்னவென்று தெரியாத காரணத்தால் இன்னும் அவருக்குக் கொஞ்சம் மரியாதை மிஞ்சியுள்ளது.
இல்லாவிட்டால், அவர் இந்தக் காரணத்தால் தான் இதைக் கூறினார், அந்தக் காரணத்தால் அதைக் கூறினார் என்று சொல்லி திருக்குறளுக்குப் புதிய உரை எழுதி விடுவார்கள்.
இந்த ஆண்டு 2026. வள்ளுவராண்டு 2056.
அதாவது பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று 2056 ஆண்டுகளாகப் படித்து விட்டு, ஒரு இளைஞன், மாற்று சமூகத்தில் உள்ள பெண்ணிடம் பழகியதற்காக, அந்தப் பெண்ணின் தம்பி அந்த இளைஞரை வெட்டிக் கொலை செய்த செய்தியையும் படித்துக் கொண்டிருக்கிறோம்.
ஏனென்றால் அந்த இளைஞன் இந்தப்பெண்ணை விடத் தாழ்ந்த சாதியாம்
எது தாழ்த்தியது?
பணமா? படிப்பா? குணமா? அந்தஸ்தா?
இப்படி பட்டியலிடுவதற்கு எதுவுமில்லை.
அந்த இளைஞர் பட்டியலினம் என்பதைத் தவிர.
ஆக பட்டியலினத்தைச் சார்ந்த இளைஞன் படித்தாலும், பணம் சம்பாதித்தாலும், அவனது பெற்றோர் நல்ல நிலையில் இருந்தாலும், நல்ல வசதியான வீட்டில் வாழ்ந்தாலும் கூட அவன் மீதான பார்வை, அவன் சாதியின் அடிப்படையில் தான் இருந்திருக்கிறது.
சிலையாக செதுக்கி விட்டால் கல்லை சாமியாக வணங்கிப் பால் அபிஷேகம் செய்யும் இதே மனித இனம் , சக மனிதன் எவ்வளவு உழைத்து முன்னேறி நல்ல நிலைக்கு வந்தாலும் அவனை மனிதனாகப் பார்க்காமல், இன்னும் அந்த சாதிக்காரன் , இந்த சாதிக்காரன் என்று பார்க்கும் இந்த மனோவியாதி மட்டும் மாறவே இல்லை.
இன்னொரு படித்த தற்குறி கூட்டம் உண்டு.
அவன் சலுகையில் படித்தான், இட ஒதுக்கீட்டில் படித்தான், என் இடத்தைத் தட்டிப் பறித்தான் என்று கூறிக்கொண்டு சமூக வலைத்தளத்தில் சாதிப் பெருமை பேசிக் கொண்டி திரியும் தர்த்தினியக் கூட்டம்..அந்தக் கூட்டத்திற்கும் இந்தக் கொலைகாரனுக்கும் கூட வித்தியாசமில்லை.
இவ்வளவு ஏன், சில காலத்திற்கு முன்பு ஒரு பள்ளி ஆசிரியை சாதியை மையப்படுத்திப் பேசி பள்ளி மாணவனிடம் பாடம் கற்ற கேவலத்தை நாம் பார்க்கத் தானே செய்தோம்!
சென்னை மும்பை போன்ற நகரில் ஒரு வேளை சோற்றுக்கு ஓடி ஓடாய் தேய்ந்து உழைத்துத் தானும் முன்னேறி நகரத்தையும் முன்னேற்றிய மக்கள், இன்று இந்த அளவில் சாதி பார்ப்பதில்லை என்பது மனதிற்கு ஆறுதல்.
சொந்த ஊர், சொர்க்க பூமி என்று சொல்லிக் கொண்டு அப்பன் ஆத்தாள் சம்பாதித்ததைத் தின்னு கொழுத்து , செய்வதற்கு வேலை வெட்டி இல்லாமல் தண்டக் கருமாந்திரமாய் பூமிக்கு பாரமாக சாதிப்பெருமை பேசிக்கொண்டு சக மனிதரைத் தாழ்த்தித் தன்னை உயர்த்திக் காட்டும் கேவலமான புத்தி இன்னும் சில பகுதிகளில் அதுவும் , திருக்குறளை உலகிற்கே போதித்த தமிழ்நாட்டில் இந்த நிலை நீடிப்பது வேதனை
ஈவு இரக்கமற்று இந்தக்காரியத்தைச் செய்தவருக்கு ஈவு இரக்கமில்லாமல் தண்டனை அளிக்கப்பட வேண்டும்..அந்த தண்டனை வருங்காலங்களில் இதுபோன்ற செயல்களில் யாரும் ஈடுபடாத வண்ணம் பயத்தை உருவாக்க வேண்டும்
இன்னொரு ஆணவப்படுகொலை நிகழக்கூடாது.!