கூலி படத்திற்கான முன்பதிவுகள் துவங்கிவிட்டது.
இனி ஒருவாரத்திற்கு சின்ராச கையில பிடிக்க முடியாது என்பது போல, ரஜினி ரசிகர்களைக் கையில் பிடிக்க இயலாது.
பலதரப்பட்ட மக்களும், குறிப்பாக கூலி வேலை செய்பவர்களும் தங்களால் இயன்ற அளவிற்கு செலவு செய்து இந்தப்படத்தை நிச்சயம் பார்க்காமல் இருக்கப் போவதில்லை.
கட்டாயம் படம் ஓரிரு நாட்களில்100 கோடி வசூலைத் தாண்டும் என்பது இப்போதே தெரிந்து விட்டது.
மொத்த வசூல் 400 கோடியா? 600 கோடியா அல்லது ஆயிரம் கோடியா என்பது தான் அடுத்து நாட்களில் பெரிய எதிர்பார்ப்பு.
முதல் நாள் படத்திற்கான முன்பதிவு இணைதளங்களில் நேர்மையான முறையில் நிகழவில்லை.
பெரும்பாலான திரையரங்குகளில், இணைய முன்பதிவை தடுத்து வைத்து விட்டு, தங்கள் மனம் போன போக்கில் விலையை நிர்ணயித்து விற்பனை செய்கிறார்கள்.
இது இந்தப்படத்திற்கு மட்டுமல்ல, அஜித் விஜய் துவங்கி சிவகார்த்திகேயன் படம் வரைக்கும் இந்தப் போக்கு தான் .
முதல் நாள் நியாயமான கட்டணம் அதாவது, முதல் ஓரிரு இருக்கைகளில் 60 ரூ, பின்னாடி இருக்கைகள் ரூ. 110- 190 ( திரையரங்க அந்தஸ்துக்கு ஏற்ப)
இந்த மாதிரியான தொகை வசூலிக்கப்படுவது இல்லவே இல்லை.
காலை முதல் காட்சி 2500-3000 ரூ துவங்கி , இரவுக்காட்சி வரை 500 ரூ வரைக்கும் கூட்டத்திற்கு ஏற்ப , தேவைகளின் எதிர்பார்ப்பைப் பொறுத்து கொள்ளை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
ஒரு படம் வெற்றி பெற்று பல கோடி சம்பாதித்த பிறகு அந்த தயாரிப்பாளர்கள், அந்த இயக்குனருக்கும், நடிகருக்கும் விலை உயர்ந்த கார்களைப் பரிசாக வழங்குவது அவர்களின் நற்பண்பு.
ஆனால் இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம், மூலக்காரணம் அந்தப்படத்தை ரசித்து வெற்றி பெறச் செய்வது அப்பாவி ரசிகர்கள் தான்.
அத்தகைய ரசிகர்களுக்கு லாபத்தில் பங்கு தரவோ, நற் தொண்டுகள் செய்யவோ கூட அவசியமில்லை.
ஆனால் தனது துறையில் இருக்கும் சீர்கேட்டைக் காளைத்தாலே மக்களுக்கு நிறைய நிறைய பணம் மிச்சாகும்.
ஒன்றும் பெரிதாக செய்யத் தேவையில்லை.
நியாயமான விலையில் பாமரனுக்கும் இருக்கை கிடைக்க ,அதாவது நேர்வழியில் கிடைக்க வழி இருக்குமானால் சிறப்பு.
ஆனால் அப்படிச் செய்தால் தேவை குறைந்து விட்டது என்ற பேச்சு வந்து விடும்.
முதல் நாள் டிக்கெட் கிடைக்காமல் போனால் தானே தலைவருக்கு மவுசு?
மீண்டும் மீண்டும் முதல் நாளில் சத்யம் திரையரங்கிலும் , பிவிஆர் சினிமாக்களிலும் பெரிய புள்ளிகள் தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்திப் படம் பார்க்க, பாமரனுக்கு அங்கெல்லாம் டிக்கெட் கிடைக்காது.
அடு்த்தகட்ட திரையரங்குகளில் 300,400 500 என்று விலை.

அதை விலைகொடுத்து வாங்க இயலும் ரசிகர்கள் வாங்கி விடுகிறார்கள்.
முடியாதவர்கள் வருத்தத்தில் தான் அந்த நாளைக் கடக்கிறார்கள்.
ஆனால் தலைவருக்கு ஏதாவது ஆனால், பால்குடம் எடுத்து வேண்டிக் கொள்வது அந்தப் பாமரன் தான்.
நான் கூலி வேலை பார்த்தேன், வாழ்க்கையில ரொம்ப கஷ்டப்பட்டேன் என்று சொல்லிவிட்டு தனது கோடி ரூபாய் காரில் ஏறிப் போன பிறகும் தலைவா தலைவா என்று கத்திக்கொண்டும் வாழ்த்திக் கொண்டும் இருப்பதும் அவன் தான்
அவனுக்கு மட்டும் விடியலே கிடையாதா?
கடைசி வரை கூலி தானா?
இது ரஜினி என்ற நடிகரை மட்டும் குறிப்பிட்டு அல்ல.
ஒட்டுமொத்த சினிமா உலகும் இப்படித்தான் இருக்கிறது.
உச்ச நடிகர் இவர் என்பதால், சீர்திருத்தம் இவரிலிருந்து துவங்கினால் நல்லது.