ஒரு வழியாக பல எதிர்பார்ப்புகளைத் தாண்டி உச்ச நட்சத்திரத்தின் படம் வெளியாகி விட்டது.
அரங்கங்கள் நிரம்பி வழியும் கூட்டம்.
திக்குமுக்காடும் திரையரங்குகள்.
முதல் நாள் என்பதால் மட்டுமல்ல, மீதி வரும் மூன்று விடுமுறை நாட்களுக்கும் இருக்கைகள் முன்பதிவு முடிந்து விட்டது.
சரி இந்தக் கூலி வாங்கிய பணத்திற்கு திருப்தியாக வேலையைச் செய்தாரா என்பதைப் பார்ப்போம்.
கதை. எதிர்பாராத புதிய கதையெல்லாம் இல்லை. கதாநாயகனுக்கும் வில்லனுக்கும் சண்டை, அதுல உடைஞ்சது சுருதிஹாசன் மண்டை.
அப்புறம் எப்படி ரஜினி ஜெயிச்சாரு? எதுக்காக இந்த சண்டை, எப்படித் துவங்கியது என்பது தான் கதையின் பின்னனியும், சுவாரஸ்யமும்.
ரஜினி, நாகார்ஜூனா, அமீர்கான், உபேந்திரா, சத்யராஜ், சௌபின், சுருதிஹாசன் இவ்வளவு பேர் இருக்காங்க. கதை என்ன கதை? திரைக்கதை எப்படி அமையும், இத்தனை பேரையும் எங்கே எப்படி வைப்பது என்பது தான் சவால்.
அந்த சவாலை சமாளித்திருக்கிறார் லோகி.
திரைக்கதையில் பெரிய மேஸ்திரி என்பதை மீண்டும் ஒருமுறை இந்தப்படத்தில் பூசி மொழுகி நிரூபித்திருக்கிறார்.
இவரது மாநகரம், கைதி, விக்ரம் ஆகிய திரைப்படங்களுடன் ஒப்பிடும் போது இது சுமார் தான் என்றாலும், இந்தக் கதைக்களத்திற்கு இந்தத் திரைக்கதை ஏற்றுக்கொள்ளும் ரகம் தான்.
கொஞ்சம் படத்தின் நீளம் குறைந்திருந்தால் இன்னும் சுவாரஸ்யமான படமாக அமைந்திருக்கும்.
அது தான் மிகப்பெரிய குறை. லோகேஷ் கனகராஜை ஓரிரவு திரைக்கதையில் நறுக்கென ரசித்துப் பழகிவிட்டதால், படம் 2.45 மணி நேரம் ஓடுவது சற்று நெளிவை ஏற்படுத்துகிறது.
விக்ரம் படத்தில் ஏஜென்ட் டீனா பெற்ற விசில் சத்தத்தை, இங்கே கதவுகளுக்குப் பின்னால், அண்ணன் எப்பக் கூப்புடுவாரு என்று காத்திருந்து தொபுக்கென்று வெளியே வரும் உபேந்திரா பெறவில்லை.
படத்தின் இரண்டாம் பாதியில் சில காட்சிகள் இப்படி மொக்க வாங்கியும், சில காட்சிகள் கதையின் பின்புலத்தை விவரிக்கும் ரகமாகவும் நகர்ந்த காரணத்தால் இரண்டாம் பாதி சரியில்லை என்ற ரீதியில் விமர்சனங்களைப் பெறுகிறது.
ஆனால் உண்மையிலேயே நல்ல திருப்பங்களோடு, கதாநாயகன் வில்லன் கண்ணாமூச்சி விளையாட்டு கொண்டு திரைக்கதை சுவாரஸ்யமாக நகர்வது இரண்டாம் பாதியில் தான்.
முதல் பாதி படம், படத்தின் வில்லன்களைப் பற்றியும், கதாநாயகனைப் பற்றியும் விளக்கம் கூறியும், ஒரு சில சண்டை மற்றும் மாஸ் காட்சிகளோடு அமைந்திருந்தது. அது பரபரவென்று நகர்ந்த காரணத்தால் எதிர்மறை விமர்சனம் பெறவில்லை.
ஆனால் மெனக்கெட்டு, சுவாரஸ்யமான திருப்பங்களை அமைத்து, கதையின் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் முக்கியத்துவமானத்தாக மாற்றி ரஜினிக்கு சமமாக அனைவரும் நடித்த பகுதி இரண்டாம் பகுதி தான்.
இதுதான் பேலஸ் இங்கதான் ராஜபரம்பரையைச் சார்ந்தவங்க இருக்காங்க என்பதைப்போல,
இது தான் ஹார்பர், இங்கதான் வில்லான் இருக்காரு.
99 வருஷம் குத்தகைக்கு எடுத்துருக்காரு. அவருக்கு ஒரு விசுவாசி, சௌபின்.
காவல்துறை உளவாளி காளி வெங்கட்டை தூக்கிலிட்டு, இன்னொரு வகை காவல் துறை அதிகாரி இவனைப் போலவே நம் கூட்டத்தில் இருக்கிறார். அவரைப் பிடித்துத் தந்தால் 2 கோடி பணம் என்று லோகேஷின் வழக்கமான, கூட்டமான வில்லன் குழுமம் நிறைந்த காட்சி தான் படத்தின் முதல் காட்சி.
முதல் காட்சியே இது ஏற்கனவே பார்த்த மாதிரி இருக்கே என்ற உணர்வை ஏற்படுத்துகிறது.
அடுத்த 2.30 மணி நேரத்தில் கிட்டத்தட்ட 1 மணி நேர காட்சிகளும் யூகிக்கும் படியாக அமைந்திருப்பது படத்தின் பலகீனம்.
நாகார்ஜூனா சம்பந்தப்பட்ட அத்தனை காட்சிகளும் நல்ல ரகம்.
நாகார்ஜூனாக்கும், ரஜினிக்கும் ஏற்கனவே பழைய பகை இருந்தும் அவர் இவரை மறந்து விட்டார் என்பது அபத்தம்.
அமீர்கான் ரஜினியை ஞாபகம் வைத்திருந்தால் நாகார்ஜூனாவும் கண்டிப்பாக ஞாபகம் வைத்திருக்க வேண்டும் தானே? எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு என்று ரயில் சிநேகிதன் போல யோசிப்பது நகைப்பு.
இடைவேளை காட்சி அருமையான ரகம். மாஸ்.
ரஜினி – சத்யராஜ் காட்சிகள் நல்ல நட்பு.
சத்யராஜ் ஏன் எதில் எப்படி சிக்கிக் கொண்டார் என்ற கதையின் பின்புலம் ஒரு சின்ன நாடகத்தனத்துடன் அமைந்திருந்தது. அதுவே இரண்டாம் பாதியிலும், சில ரஜினி, சுருதிஹாசன் காட்சிகளிலும் தொடர்ந்த்து சின்ன சலிப்பு.
இவ்வளவு பெரிய வில்லன் குரூப் இந்த சின்ன வேலையை இவர்களிடமா ஒப்படைப்பார்கள்?
ஒட்டு மொத்தத்தில் ஒரு நல்ல படம்.
சற்று நீளமான நல்ல படம்.
கூலி – சிறப்பான வேலை.
ஆனால் பொறுமையை சோதித்தார்.
பல இடங்களில் அனிருத்த ஏம்ப்பா மறுபடியும் சேத்துக்கிட்டீங்க என்கிற மாதிரி இருந்தது.