Categories
இலக்கியம் தகவல்

தினுசு கண்ணா தினுசு!

பெயர் என்பது ஒரு மனிதனின், பொருளின், ஜீவராசிகளின் அடையாளம்.

மனிதன் மட்டுமல்ல, உலகிலுள்ள உயிருள்ள உயிரற்ற அத்தனை பொருட்களுக்கும் ஒரு பொதுப் பெயரும், ஒரு தனிப்பெரும் கூட உண்டு.

ஒவ்வொரு பெயருக்கும் ஒரு காரணமும் உண்டு.

உதாரணம்: நாற்காலி.

நான்கு கால்களை உடைய காரணத்தால் அது நாற்காலி என்று அழைக்கப்பட்டது.

சில பெயர்களின் பின்னால் சுவாரஸ்யமான கதைகளும் இருக்கலாம்.

பழைய காதலன் காதலியின் பெயர்களைப் பிள்ளைகளுக்குச் சூட்டுவதைப் போல.

சில பேர் குரு பக்தியின் காரணமாகவோ அபிமானத்தின் காரணமாகவோ அவர்களின் பெயரைக் கூட புனைப் பெயராக வைத்திருக்கலாம்.

கனக சுப்புரத்தினம், தன்னை பாரதிதாசன் என்று அழைத்துக் கொண்டதற்குக் காரணம், பாரதியாரின் மீதான அவரது தீராத பற்று.

அதுபோல ஒரு வித்தியாசமான நாம் அறிந்திடாத ஒரு பெயரையும், அதன் காரணத்தையும் இங்கே குறிப்பிடுகிறேன்.

கறையான் என்பது பெயர்.

நாம் அறிந்த பூச்சி இனத்தின் பெயரல்ல.

இது ஒரு நாவலின் பெயர்.

அட இது என்னடா, யாருக்குமே பிடிக்காத ஒரு பெயராக இருக்கிறதே?
இதை எப்படி அந்த நாவலாசிரியர் தேர்வு செய்தார் என்பதைப் பார்க்கலாம்.

அந்த நாவலாசிரியர் வங்க மொழி எழுத்தாளர், சீர்ஷேந்து முகோபாத்யாய.

அவரது இந்த நாவல் தமிழில் திரு.சு.கிருஷ்ணமூர்த்தி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

சரி,!ஏன் இந்தப் பெயர்?
ஆசிரியர் இந்த நாவலை எழுதி முடித்து விட்டார்.

என்ன பெயர் வைப்பது என்று தெரியவில்லை.

நமது விருமாண்டி திரைப்படம் போல.

பிறகு ஒரு முடிவு செய்திருக்கிறார்.

தனது அபிமானமிக்க அனுகூல் சந்திர்தாகூரின் சத்ரயானுசன் புத்தகத்தை கையில் எடுத்து கண்ணை மூடிக்கொண்டு அதில் ஒரு பக்கத்தைத் திருப்பிப் பார்த்துள்ளார்.

அதில் தென்பட்ட வார்த்தை “கறையான்”.

அதையே தனது நாவலின் பெயராக வைத்து விட்டார்.

இந்த நாவல் கொல்கத்தா நகரப்பின்புலத்தில், ஒரு வேலையை விட்ட, 30 வயதைத் தாண்டிய ஏதும் செய்யா ஒரு இளைஞரைப் பற்றி விவரிக்கிறது.

ஏன் எதற்கு என்று தெரியாமல் ஓடிக்கொண்டிருக்கும் பலரின் மத்தியில் நான் ஏன் வேலை செய்ய வேண்டும் என்ற விதண்டாவாத முடிவெடுத்த இளைஞரின் கோணத்தில் உலகம் எப்படி என்பதை விவரிக்கிறது என்று இது குறித்த விளக்க உரையில் எழுத்தாளர் ராமகிருஷ்ணன் எழுதியிருக்கிறார்.

இது ஒரு தகவலுக்காக.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.