2026 சட்டமன்றத் தேர்தலுக்காக இரண்டு கட்சிகள் கடுமையான பல நடவடிக்கைகளில் இறங்கியுள்ள நிலையில், இன்று ஒருவர், சிங்கம் தனியா வரும், அதைவிடப் பெரிய மிருகங்களைக் குரல்வளையில் கவ்வி வேட்டையாடும், பார்க்கத்தான் போகிறீர்கள் என்று சொல்கிறார்.
சரிதான், தவெக தலைவர் விஜய் அவர்கள் தான்.
பட்டாசு கிளப்பும் பேச்சு என்றால் அது மிகையல்ல.
தமிழக அரசியலுக்குத் தேவையான பேச்சுக்குத் தயாராகி விட்டார்.
ஆனால் களப்பணி? பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஆனால் இன்று அவரது பேச்சில் ஒரு பெரிய நம்பிக்கையும் உற்சாகமும் இருந்தது.
அரசியலில் இது ரொம்ப முக்கியம். இவரது பேச்சிலேயே பலருக்கு, இவர் மீது ஒரு நல்ல அபிப்ராயமும் இவர்தான் வெல்வார் என்ற நம்பிக்கையும் பிறந்தாலே ஓட்டுப் போடும் தருவாயில் ஒரு நிமிடம் யோசிக்க வைத்து விடும்.
அவர் மட்டுமல்ல, அவரது கட்சி நிர்வாகிகள் உட்பட இன்றைய பேச்சில், ஆளும்கட்சியான திமுக வையும், விஜய் அவர்கள், திமுக ஆட்சி, பாஜக ஆட்சி, முதல்வர் மற்றும் பிரதமரை நேரடியாக வசை பாடியது, அரசியலில் அவர்கள் நுழைந்திருப்பதற்கான படியாக உணரப்படுகிறது.
கட்சியின் சில நிர்வாகிகள், நடப்பு ஆட்சியைப் பற்றிப் பேசியது சரி என்றாலும் புஸ்ஸி ஆனந்த் உட்பட சிலர், பள்ளிக் குழந்தைகள் போல, பட்டிமன்ற பேச்சுக்கு மனப்பாடம் செய்து வந்து ஒப்பிப்பது போல, அண்ணா விஜய் வானத்திலிருந்து வந்தார் என்று விஜய் புகழ் பாடிவிட்டு சென்று விட்டனர்.
இவர் தயாரிக்கும் வேட்பாளர் பட்டியல் அந்த ரகத்தில் இருந்தால் சிக்கல் தான். ஆனால் அதையெல்லாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.
இன்றைய பேச்சின் சாராம்சத்தில் இவர் திமுக வை அரசியல் எதிரி என்றும், பாஜகவை கொள்கை எதிரி என்றும் விமர்சித்தார்.
அதிமுக கட்சி எம்.ஜி.ஆர் அவர்களால் அரும்பாடு பட்டு உருவாக்கப்பட்டு இன்று மோசமான கூட்டணியில் சிக்கித் தவிக்கிறது என்றும் வருந்தினார்.
கேப்டன் விஜயகாந்த் அவர்களைப் புகழ்ந்த தோரணையில், இவர் தேமுதிவை கூட்டணிக்கு இழுக்கப் பார்க்கிறாரோ என்று தோன்றுகிறது.
மேலும் தவெக விற்கும் திமுக விற்கும் தான் போட்டி என்று துணிச்சலாக அறிவித்திருக்கிறார். ஆக இவர், நாம் தமிழர், அவ்வளவு ஏன், அதிமுக வை கூட எதிரியாகக் கருதவில்லை என்ற கணக்கில் நிற்கிறார்.
எம்.ஜி.ஆரின் ஓட்டுகள் தனக்கு விழும் என்று நினைக்கிறாரா தெரியவில்லை.
பல எதுகை மோனை, பல கோர்வை வசனங்கள் பேசினார். நல்ல ஆக்ரோஷமான பேச்சு.
குறிப்பாக, இது நல்லது செய்யும் கட்சி நல்லவர்களுக்கான கட்சி என்று இவர் நீளமான வசனம் பேசி முடிக்க, கேமரா, விஜய் அம்மா ஷோபாவிடம் திரும்ப, அவர் களுக்கென சிரித்து விட்டார்?

என்னம்மா நீங்க இப்படி பண்ணீட்டீங்களே மா?
ஆனால் மற்றபடி மாநாடு ஏற்பாடுகள் சிறப்பு.
பேச்சில் தீப்பொறி இருந்தது.
இந்தக்கூட்டம் ஓட்டாக நிச்சயம் மாறும் என்று அவர் நம்பிக்கை தெரிவிக்கிறார்.
பார்க்கலாம். 2026 ல்.