பறவைகள் மட்டுமல்ல மனிதர்களும் பலவிதம் தான்.
இந்த பூமியானது பல விதமான மனிதர்களை உள்ளடக்கியது என்பதை நேற்று நடந்த இருவேறு சம்பவங்களின் மூலமாக அறிந்திட முடிகிறது.
முதலாவது, நமது சென்னை மாநகரில் கண்ணகி நகரில் வசிக்கும் ஒரு தூய்மைத்தொழிலாளி பெண், காலை எழுந்து பணிக்குச் செல்லும் போது, தேங்கிக் கிடந்த மழைநீரில் காலை வைத்து, மழைநீரில் கசிந்திருந்த மின்சாரம் காரணமாக, உடலில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்திருக்கிறார்.
இது இன்று நேற்று நடக்கும் நிகழ்வல்ல.
மழைநீரில் மின்சாரம் கசிவதும் அதனால் சில உயிர்கள் போவதும் நாம் தொடர்ச்சியாகப் பலமுறை கேள்விப்பட்டிருக்கக் கூடிய ஒரு செய்தி தான்.
ஏன் ஒரு சினிமாவிலும் கூட இதை மையமாகக் கொண்டு ஒரு காட்சியமைப்பு உருவாக்கப்பட்டிருக்கும்.
இறந்து போன குழந்தையின் தகப்பன், நீதிமன்றத்தில், இது சம்பந்தப்பட்ட பலதுறைகளில் ஏதாவது ஒரு துறை, தனது பணியை சரியாகச் செய்திருந்தால் இந்த இழப்பு நிகழ்ந்திருக்காது என்று வாதாடுவார். ஆனால் பாவம் இது வெறும் விபத்து என்று முடித்து விடுவார்கள்.
அதே போன்ற நிகழ்வு தான், இந்தத் தூய்மைப் பணியாளர் உயிரிழப்பு சம்பவமும். முந்தைய தினமே இருமுறை மின்வாரியத்திற்குப் புகார் அளிக்கப்பட்டிருந்தும் கூட, அவர்கள் இதைக் கண்டுகொள்ளாமல் சரிசெய்யாமல் விட்ட காரணத்தினால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருக்கிறது.
தான் அரசுப்பணியில் இருக்கும் காரணத்தால், தன்னை எதுவும் செய்திட இயலாது என்ற திமிரில் அலட்சியத்தில் இவ்வாறு ஒரு புகாரை உடனடியாக சரிசெய்யாத காரணம் தான் இந்த உயிர் பறிபோக முக்கியமான காரணம்.
இப்படி ஒரு சாரார், வேலையில் அலட்சியம் காட்டும் ஆட்களாக இருந்தபோதிலும் இன்னொரு புறம் கடமைக்காகத் தனது உயிரையும் துட்சமாக மதித்துக் கடமையை நிறைவேற்றும் ஆட்களும் இருக்கிறார்கள்.
இது ஒரு செவிலியரின் கதை. செவிலியர்கள் என்றாலே தேவைதைகள் தான், தியாகிகள் தான் என்றாலும் இவர் செய்தது அதை விட ஒரு பங்கு அதிகம்.
இமாச்சலப்பிரதேசத்தில் பணிபுரியும் செவிலியர் கமலா என்பவர் பற்றியது தான் இந்தச் செய்தி.
அந்த மாநிலத்தில் உள்ள மலைக் கிராமத்தில் இரண்டு மாதக் குழந்தைக்குத் தடுப்பூசி போட்டாக வேண்டிய கடமை.
நம்மூர் மாதிரி பிள்ளையை ஆஸ்பத்திரிக்குத் தூக்கிச் சென்ற பிறகு, அய்ய, செவ்வாய்க்கிழமை தான் தடுப்பூசி போடுவோம், நீ இன்னா புதன் கிழமை வந்திருக்க, போய் அடுத்த வாரம் வா என்ற திட்டங்கள் அங்கில்லை போல. அங்கே மருத்துவ ஊழியர்கள் வீடு தேடிச் சென்று தடுப்பூசி போடுவார்களாம்.
அந்த மலை கிராமத்தை அடைய ஒரு சிற்றாரைத் தாண்டித்தான் சேர வேண்டும் போல. சமீபத்தில் பெய்த மழை காரணமாக அந்தச் சிற்றாறு, காட்டாறாக ஓடுகிறது.
அந்தக் கடுமையான வெள்ளத்தைப் பொருட்படுத்தாமல் ஒற்றை ஆளாக மனதைரியத்துடன், உயிரை துட்சமாக மதித்து, அந்தப் பெண் அந்தக் குழந்தைக்குத் தடுப்பூசி செலுத்தியிருக்கிறார்.
இப்படியும் ஒரு சிலர் இருக்கத்தான் செய்கிறார்கள்
இதனால் தான் உலகம் இன்னும் அழியாமல் சுழன்று கொண்டிருக்கிறது போல.
நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு பெய்யுமென பெய்யுமா மழை என்பது நினைவில் வருகிறது.