தமிழக ஆளுநராகப் பதவியேற்றதிலிருந்து ஆளுநர் மிகச்சரியாகப் பேசியிருக்கிறார் என்றால் அது நேற்று அவர் ஆரோவில்லில் பேசிய உரையாகத்தான் இருக்கும்.
ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் பல நேரங்களில் இங்கு ஆளும் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிரானவராகவும், முட்டுக்கட்டையாகவும் தான் இருந்திருக்கிறாரே ஒழிய ஆதரவாக எப்போதுமே இருந்தததாகத் தெரியவில்லை.
பல சமயங்களில் ஆளுநரின் தேநீர் விருந்தைப் புறக்கணிக்கும் அளவிற்குக்கூட இந்த மோதல் நிகழ்ந்திருக்கிறது.
இப்போதும் கூட, ஒப்பதலுக்காக அனுப்பப்பட்ட கோப்புகளில் கையெழுத்திடாமல் ஆளுநர் காலம் கடத்துவதாகவும், அது எத்தனை மாத வரைமுறை என்பதற்காகவும் வழக்குகள் நிலுவையில் இருக்கிறது.
அப்படியிருக்க நேற்று ஆளுநர் தமிழ்நாட்டைப் பற்றிப் பேசும் போது, தமிழ்நாட்டில் ஆட்சியிலிருக்கும் கட்சியை விமர்சிப்பதாக நினைத்துக் கொண்டு, தான் ஆதரவாக இருக்கும் ஒன்றிய அரசு சார்ந்த கட்சியை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.
தலித் மக்களுக்கு தமிழ்நாட்டில் இன்னும் பல பிரச்சினைகள் இருப்பதாகவும், அவர்களுக்கென தனி வழி, தனி குடியிருப்புகள் இருப்பதாகவும் பேசியுள்ளார்.
மேலும் பள்ளி வகுப்பறைகளில் கூட தலித் மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாகவும், அவர்கள் மீது சாதி துவேஷம் காட்டப்படுவதாகவும் கூறியுள்ளார்.
இதையெல்லாம் செய்வது யார் என்பதையும் அவரே கூறிவிட்டார்.
வகுப்புவாத சக்திகள் தான் இதைச்செய்கின்றன என்றும் கூறிவிட்டார்.
பாவம் அந்த வகுப்புவாத சக்திகள் , அவர் சார்ந்திருக்கும் கட்சி தான் என்பதை உணராமலேயே உளறிக் கொட்டியிருக்கிறார்.
இதையடுத்து அவர் சொன்னது தான் இன்னும் மிகப்பெரிய நகைப்புக்கு உரியது.
உலகில் எத்தனை மதங்கள் இருந்தாலும் , தர்மம் என்பது ஒன்றுதான், அது சனாதன தர்மம் தான் என்று கூறியிருக்கிறார்.
சனாதன தர்மம் தான் மனிதனை தரம் பிரிக்கும் தர்மம், தமிழக திராவிடக் கட்சிகள் அந்த தர்மத்திற்கு எதிரானவை என்பதையும், அவர் ஆதரவளிக்கும் ஒன்றிய அரசின் கட்சி தான் அந்த சனாதன தர்மத்தை உயர்த்திப் பிடிக்கும் வகுப்புவாத சக்தி என்பதையும் மறந்து விட்டார் போல.
வடமாநிலங்களில் அவர் ஆதரிக்கும் கட்சி ஆட்சிபுரியும் மாநிலங்களில் மாட்டுக்கறி உண்டதற்காக மக்கள் அடித்துக் கொல்லப்படுவது போல, தமிழ்நாட்டில் எந்தவொரு நிகழ்வும் இல்லை என்பது ஆளுநருக்குத் தெரியாது போல.
தமிழ்நாட்டிலும் ஆங்காங்கே ஆணவக் கொலைகள் நிகழ்வது உண்மை தான்.ஆனால் அதை நிகழ்த்தும் கூட்டம் இந்த சனாதன தர்மத்தைப் பின்பற்றும் மக்குக் கூட்டம் என்பதையும் ஆளுநர் உணரவில்லை போல.
தனி வழி , தனி குடியிருப்புகளைப் பற்றிப் பேசிய ஆளுநருக்கு தமிழ்நாட்டின் சமத்துவபுரங்கள் பற்றித் தெரிருந்திருக்கவில்லை போல.
ஆங்காங்கே சிறு சிறு பிரச்சினைகள் இருந்தாலும் ஒற்றுமையாக வாழும் தமிழ்நாட்டு மக்களிடையே பிரிவினையைத் தூண்டும் வகுப்புவாத சக்திகளுக்கு ஆதரவாக இருந்து கொண்டே இந்தப்புறம் வந்து தலித் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்று பேசுவது கபட நாடகம் போலத்தான் தெரிகிறது.
ஆளுநர் பேசிய பிரிவினை தூண்டும் வகுப்புவாதிகள் யார் என்பது அவருக்கே வெளிச்சம்.