இந்தியா என்பது இறையாண்மை பூண்ட ,சமதர்ம, சமயசார்பற்ற, மக்களாட்சிக் குடியரசு என்பது நமது அரசியலமைப்பு நமக்குக் கற்றுக் கொடுத்தது.
ஒரு இந்தியக்குடிமகன் சமயசார்பற்று, மொழி , சாதி என்ற பிரிவினைக்கு அப்பாற்பட்டு இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் குடியேறலாம், தொழில் செய்யலாம் என்பது நமது அரசியலமைப்பு நமக்குத் தந்த அடிப்படை உரிமை.
இந்த அடிப்படை உரிமையானது இந்திய நாடு குடியரசு நாடாக அறிவிக்கப்பட்ட போது நமது அரசியலமைப்பை உருவாக்கித் தந்த சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கர் உட்பட்ட குழு நமக்குத் தந்த உரிமை.
இதைப் பாதுகாக்க வேண்டியது அரசாங்கம் மற்றும் உச்சநீதிமன்றத்தின் கடமை.
ஆனால் இந்தியா குடியராகி 75 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒரு மதசார்புடைய கட்சியின் சட்டமன்ற உறுப்பினரின் மகன் ஒரு சிறிய கூட்டத்தைக்கூட்டி இந்தியாவிலுள்ள மத்தியப்பிரதேச மாநிலத்திலுள்ள இந்தூரில் உள்ள பிரபல சந்தையான ஷீதலா மாதா சந்தையில் உள்ள 501 கடைகளிலும் இனி இஸ்லாமியர்கள் பணியில் அமர்த்தப்படக்கூடாது மற்றும் எந்த ஒரு கடையையும் இஸ்லாமியருக்கு வாடகைக்கு விடக்கூடாது என்று அறிக்கை விட்டு அதை நிறைவேற்றவும் முடிகிறது என்றால், இந்திய அரசியலைமப்புச் சட்டம் மற்றும் நீதித்துறை மீதான மதிப்பு என்ன ஆனது என்ற கேள்வி தான் எழுகிறுது.
இப்படி ஒரு சட்டம் இயற்றக் காரணம் லவ் ஜிகாத்.
அதாவது இந்துப் பெண்களை இஸ்லாமிய இளைஞர்கள் திருமணம் செய்து அவர்களை இஸ்லாமியர்களாக மாற்றி விடுகிறார்களாம்.
அதனால் இஸ்லாமியர்களை அந்த சந்தைக்குள் அனுமதிக்க மாட்டார்களாம்.
முதலில் ஒரு பொது வெளியில் மதத்தின் பெயரால் பிரிவினை பேசுவதே தவறு.
அதிலும் இன்னொரு மதத்தினரின் மீது பழிசொல்லும் விதமாக லவ் ஜிகாத் என்ற வார்த்தைகளை உபயோகிப்பது அதைவிடத் தவறு.
இதையெல்லாம் முளையிலேயே கிள்ளி எறியாவிட்டால் இந்தியா என்பது இன்னும் சில ஆண்டுகளில் மதவாத நாடாகத்தான் மாறி இருக்கும் என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை.
கண்டிப்பாக இந்திய அரசியலமைப்புக்கு எதிராக ஒரு மதத்தினரை அவமதிக்கும் விதமாகப் பேசிய அந்தக் கட்சிப் பிரமுகரின் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், எடுக்கப்படும், மக்கள் கொண்டுள்ள நீதித்துறையின் மீதான நம்பிக்கை காப்பாற்றப்படும் என நம்பலாம்.




