திருடனாகப் பார்த்துத் திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பாடல் வரிகளைக் கடந்து வந்திருப்போம் நாம்.
இது திருடர்களுக்கு மட்டுமல்ல. ஒட்டுமொத்தமாக தவறு செய்யும் அனைவருக்கும் தான்.
மனிதனாகப் பிறந்து ஆறறிவோடு உலகின் மற்ற ஜீவராசிகளை ஒப்பிடும் போது உட்சபட்ச அதிகாரம் படைத்து உலகை ஆட்டிக்கொண்டிருப்பது போதாதா ?
சக மனிதர்களையும் சங்கடப்படுத்தி , ஏய்த்து , கஷ்டப்படுத்தி தவறு செய்து வாழ்ந்து என்ன சாதிக்கப்போகிறோம்.
அப்படி தவறு செய்து வாழ்ந்த சாதிக்க என்ன இருக்கிறது?
ஏற்கனவே பூமி பாரம் தாங்காமல் தானே இருக்கிறது?
இன்று படித்த இரு வகையான செய்திகள்.
ஒன்று ஆசிரியரை தாக்கிய மாணவர்கள்.
அதாவது பள்ளியில் பதினொன்றாம் வகுப்புப் பயிலும் மாணவர்கள்,5 பேர் இணைந்து ஆசிரியர் அறையின் உள்ளே சென்று மறுநாள் தேர்வின் கேள்வித்தாளை தருமாறு கேட்டிருக்கிறார்கள்.
அதை அவர் மறுக்கவே அவரை அடித்து உதைத்திருக்கிறார்கள்.
இவர்கள் அல்லவா மாணவர்கள்?
இவர்கள் தான் நாளை அரசு ஊழியராகி, ஆசிரியராகி, சமுதாயத்தைக் காக்கப் போகிறார்கள்.
இவர்களுக்கெல்லாம் பெற்றோர் என்பவர்கள் இருப்பார்களே அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஒரு பிள்ளையை வளர்க்கும் போது அது ஆசிரியரை அடித்து உதைக்கும் அளவிற்கு நெஞ்சழுத்தமும், தைரியமும் இருக்கிறது என்றால் அதற்கு நல்லது என்பதைச்சொல்லி வளர்க்கவில்லை என்பதே அல்லவா அர்த்தமாகிறது?
தண்டிப்பதென்றால் அவர்களையும் சேர்த்து தான் தண்டிக்க வேண்டும்.
இன்னொரு செய்தி, மாணவர்கள் காலில் விழுந்து வணங்கவில்லை என்று ஆசிரியர் மாணவர்களை அடித்து வெளுத்த செய்தி.
மாதா , பிதா , குரு , தெய்வம் என்பது கீழிருந்து மேல்நோக்கிய நெறிமுறை மட்டுமல்ல.
மேலிருந்து கீழ்நோக்கிய நெறிமுறையும் தான்.
அதாவது ஒரு மனிதனுக்கு மாதா , பிதா , குரு என்பவர்கள் தெய்வத்தைக் காட்டிலும் மேலானவர்கள், மதிக்கப்பட வேண்டியவர்கள் என்பது மட்டும் கருத்தல்ல.
அதே மனிதனை நல்வழிப்படுத்துவதிலும், வாழ்வில் முன்னேற்றுவதிலும் முதன்மையானவர்களாக தெய்வத்திற்கும் மேலாக மாதா , பிதா ,குரு ஆகியோருக்குக் கடமை இருக்கிறது.
மரியாதை பெற்றுக் கொள்வது மட்டும் அல்ல.
நல்வழிப்படுத்துவதும் அவர்கள் பொறுப்பு.
அதை மறந்து பதவி போதையில் அந்த ஆசிரியை பள்ளி மாணவர்களை அதுவும் 6 வது 7 வது பயிலும் விடலை மாணவர்களை அடித்துத் துன்புறுத்தியிருக்கிறார்.
இவரும் ஆறறிவு படைத்த மனிதர் தான் , அதிலும் ஆசிரியர் வேறு.
இன்னொரு செய்தி.
ஒரு அரசு பெண் அதிகாரி பணியில் சேர்ந்த ஆறே வருடங்களில் கோடிக்கணக்கில் லஞ்சம் பெற்றிருக்கிறார்.
போலியான ஆவணப்பதிவுகளுக்கு ஒப்புதல் அளித்து இந்த லஞ்சப்பணத்தை சம்பாதித்திருக்கிறார்.
தனது வருமானத்திற்கு அதிகமாக, 400 மடங்கு சொத்து சேர்த்திருப்பதாக செய்தி.
இப்படி பூமியைக்கூறு போட்டு சம்பாதித்து என்ன சாதிக்கப் போகிறார்கள்?
மனிதனுக்கு மனிதன் அறிவுரை கூறி திருத்துவதெல்லாம் இந்தக் கலி காலத்தில் ஆகாத ஒன்று.
ஒரு மனிதனைப் பெற்றவர்கள் முதலில் அவனை நல்வழியில் வளர்க்க வேண்டும்.
இன்னொருவனைக் கெடுக்காமல் வாழப் பழக்க வேண்டும்.
தவறு செய்பவர்கள் தானாகப் பார்த்துத் திருந்தாவிட்டால் தவறுகள் என்பது ஓயாது!