மனமிருந்தால் மலையையும் புரட்டிப் போடலாம் என்ற கடந்து வராதோர் இல்லை.
அதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறார் இந்த மனிதர்.
மலையைப் புரட்டவில்லை.
நொறுக்கியே விட்டார்.
தெய்வாத்தா லாகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும்.
திருக்குறளில் பொருட்பாலில் அரசியல் இயலில் 62 ஆவது அதிகாரமான ஆள்வினையுடைமை எனும் அதிகாரத்தில் வரும் இந்தக் குறிளினை நாம் பலமுறை வாசித்திருப்போம்.
இந்தக்குறளை தன் வாழ்நாளில் நிரூபித்துக் காட்டியவர் தான் இந்த மலை மனிதர் தசரத் மான்ஜி.
யார் இவர்?
எதற்காக மலையை உடைத்தார் என்பதைக் காணலாம்.
பீகார் மாநிலத்தில் உள்ள கயா மாவட்டத்தில் அமைந்துள்ள கெலார் என்ற சிற்றூரைச் சேர்ந்த இவர் ஒரு விவசாயி.
தனது மனைவிக்கு உடல்நிலை சரியில்லாத சூழலில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல, தன் ஊரில் இருந்து மலையைச் சுற்றி 80 கிமீ செல்ல வேண்டியிருந்த காரணத்தால், அவர் உயிரிழந்தார்.
1960 களில் மனைவி இறந்து போனால் ,கணவன் பத்தே நாட்களில் புது மாப்பிள்ளை தானே?
ஆனால் இவர் தன் மனைவியை மனதார நேசித்த காரணத்தால் இன்னொரு திருமணம் செய்துகொள்ளப் போவதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறார்.
அதையே ஏற்றுக் கொள்ளாத அந்த ஊர்மக்கள், தன் மனைவியை விரைவில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருந்தால் காப்பாற்றியிருக்கலாம், ஆனால் மலையைச்சுற்றி போக வேண்டி இருந்த காரணத்தால் அவளைக் காப்பாற்ற முடியவில்லை, ஆகவே நான் அந்த மலையை உடைத்து, பக்கத்து ஊருக்கு நேரான பாதையை அமைக்கப் போகிறேன் என்று இவர் சொன்னால் இவரை சும்மா விடுவார்களா?
இவன் பைத்தியக்காரன், இவனது மனைவி இறந்து பேயாகி இவனைப் பிடித்துக்கொண்டு ஆட்டுகிறாள் என்றெல்லாம் இவரை வசைபாடி கேலி செய்து ஒதுக்கிவிட்டார்கள்.
இவரது உண்மையான உணர்வுகளைப் புரிந்து கொண்ட ஒரு சிலர் மட்டுமே இவருக்கு உதவ முன்வந்திருக்கிறார்கள்.
அவ்வப்போது உணவு, கடப்பாறை , மண்வெட்டி போன்ற பொருட்களை வாங்க சிறிய பண உதவி போன்றவற்றைச் செய்திருக்கிறார்கள்.
அந்த சிறிய உதவிகளை வைத்துக்கொண்டு தொடர்ந்து 22 ஆண்டுகளாக அந்த மலையைக் குடைந்து , உடைத்து 3
25 அடி உயரம், 30 அடி அகலம், 360 அடி நீளத்திற்கு பாறையை உடைத்துப் பாதையாக மாற்றியிருக்கிறார்
இதனால் மருத்துவமனைக்கான தூரம் 80 லிருந்து, 13ஆகக் குறைந்துள்ளது.
இந்தக் கதை திரைப்படமாக வந்த பிறகுதான் இவரைப்பற்றிய செய்தியைப் பலரும் அறியலானது.
இந்தி மொழியில் 2015 ல் இந்தப் படம் வெளியானது.
தான் வாழ்ந்தால் போதுமென தன்னலத்தோடு வாழும் மனிதர்கள் மத்தியில் தன் மனைவியைப் போல, இனி யாரும் மருத்துவமனையை அடைய முடியாமல் இறந்து விடக்கூடாது என்று எண்ணி, 22 வருடம் கடுமையாக உழைத்து மலையை மடுவாக்கி தன்னம்பிக்கையால் மலை போல உயரத்தை அடைந்த இந்த மனிதனைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை.
இவரைப்போல இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் நம்மாலான உதவிகளைப் பிறருக்குச் செய்து வாழலாமே!