அங்கே இடிக்கப்பட்டது கட்டிடமல்ல, பலரது நினைவகளின் கோட்டை.
தரைமட்டமாக்கப்பட்டது தளமல்ல. பலரின் எதிர்பார்ப்புகள்.
நொறுக்கப்பட்டது செங்கற்கள் மட்டுமல்ல.பலரது இதயங்கள்.
என்னாங்க இது இவ்வளவு பில்டப்பு என்று யோசிக்கிறீர்களா?
சென்னை வடபழனியில் இரண்டு பேமஸ் என்று வடிவேலு சொல்லுவார்.
ஆனால் வடபழனி என்றால் இதையும் குறிப்பிடாமல் இருந்து விட முடியாது.
ஏழைகளின் தோழி, சினிமா ரசிகர்களின் அன்புத்தாய், நடுத்தர மக்களை அன்போடு அரவணைக்கும் தங்கத் தாரகை, ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம்.
பல நாட்களாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று கட்டிடமே இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது என்ற செய்தியை எனது நண்பன், என்னோடு அந்தத் திரையரங்கில் இனிமையான தருணங்களைப் பகிர்ந்து கொண்ட நண்பன், வடபழனியை விட்டு காலி செய்து பத்தாண்டுகளுக்குப் பிறகும் இன்றும் நொறுங்கிய மனதோடு வடபழனி ஏவிஎம் ராஜேஸ்வரி திரையரங்கம் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டது என்ற செய்தியை அனுப்பியதும், அந்த நினைவுகளின் வலியை என்னால் தாங்கிக் கொள்ள இயவில்லை.
எல்லாத் திரையரங்குகளையும் போலத்தானே? என்ன அப்படி சிறப்பு என்று கேட்பவர்களுக்கு இதோ எந்தன் பதில்.
சென்னையின் சாதாரண புதுப்பிக்கப்படாத திரையரங்குகளில் கூட சினிமா காட்சி கட்டணம் 100 முதல் 120 ரூபாயாக இருந்த நேரத்தில் ராஜேஸ்வரி திரையரங்கில் மட்டும், முதல் வகுப்பு 40 ரூ.
பால்கனி 70 ரூ என்று கட்டணம் இருந்தது.
இருசக்கர வாகன காப்பகத்திற்கு 10 ரூ.
பண்டங்கள், 20 முதல் 50 ரூபாய் வரையிலான, அனைவரும் வாங்கி உண்ணும் அளவிற்கான நல்ல விலை குறைந்த எளிமையான பண்டங்கள்.
திரையின் அளவு 70 mm. ( பெரிய திரை)
7.1 டால்பி ஒலி அமைப்பு எனப் பல்வேறு நவீன வசதிகளுடனான திரையரங்கில் இந்தக் கட்டணத்தை அவர்கள் ஒரு சேவை என நினைத்து விதித்திருந்தார்கள்.
புகை பிடிப்பவர்கள், இடைவேளையில் வெளியே இருந்த மைதானம் போன்ற பகுதியில் புகைப்பார்கள். அதனால் அவர்களுக்கும் கொண்டாட்டம் தான்.
நடுத்தர மக்கள் குடும்பத்தோடு வார வாரம் படம் பார்க்க ஏதுவான திரையரங்கம் என்றால் அது மிகையல்ல.
நான் வடபழனியில் தங்கியிருந்த 4 வருடங்களில் 100ல் 65 சதவீதப் படங்கள் இந்தத் திரையரங்கில் தான் கண்டிருப்பேன்.
எனது முந்தைய அலைபேசியில் ராஜேஸ்வரி திரையரங்கில் இருசக்கரவாகன கட்டணம் வசூலிப்பவரின் அலைபேசி எண் பதியப்பட்டிருந்தது.
பெரிய எதிர்பார்ப்புள்ள படங்களுக்கு அவரிடம் சொல்லிவிட்டால் எனக்காக நுழைவுச்சீட்டுகளை எடுத்து வைத்து விடுவார்.
Rajeswari bhai என்பதை Raheswari Bhai என்று தவறுதலாகப் பதிவிட்டிருப்பேன் .
மன்னிக்கவும் இந்த அலைபேசியிலும் அது இருக்கிறது.படம் கீழே!

இதற்கு மேல் விளக்கமாக நான் என்ன சொல்வது.இதிலேயே எனக்கும் அந்தத் திரையரங்குக்குமான தொடர்பு விளங்கியிருக்கும் அல்லவா.
இரவுக் காட்சிகள் முடித்து விட்டு சூர்யா மருத்துவமனை சிக்னலில் யூடர்ன் செய்யும் போது காவல்துறை சோதனையில் பலமுறை மாட்டியிருக்கிறோம்.
இரவுக்காட்சிக்கு செல்லுமுன் இந்தத் திரையரங்க வாசலின் அருகேயுள்ள தள்ளுவண்டியிலே பலமுறை உணவருந்தியிருக்கிறோம்.
வீரம், தோழா , தர்மதுரை , எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன், என்னை அறிந்தால், என பல படங்கள் அங்கே பார்த்த பசுமையான நினைவுகள் இன்னும் என் நெஞ்சிலிருந்து அகலவில்லை.
தெறி படத்திற்கு தாமதமாக போன் செய்து எப்படியாவது டிக்கெட் வாங்கித் தாங்க பாய் என்று அந்த பாயைத் தொந்திரவு செய்த நினைவுகளும் இன்னும் அப்படியே தான் மனதில் இருக்கிறது.
இன்னும் எத்தனை எத்தனையோ நினைவுகள் இந்தத் திரையரங்கு சம்பந்தப்பட்டது.
வடபழனியில் பேச்சுலராக இருந்த போது மட்டுமல்ல.
திருமணமான பிறகும் எனது மனைவியிடம் இந்தத் திரையரங்கின் அருமை பெருமைகளைக் கூறி ராமாபுரத்தில் இருந்து இந்தத் திரையரங்கிற்கு இருவரும் அடிக்கடி வந்துபோனது உண்டு்.
வடபழனி மற்றும் சுற்றுவட்டாரத்தில் வசிக்கும், வசித்த பல ல
ஆயிரம் சினிமா ரசிகர்களின் இதயம் கவர்ந்த ராஜேஸ்வரி திரையரங்கு இன்று தரைமட்டமானது என்பது தாங்க முடியாத உண்மை.
மேலும் இந்தத்திரையரங்கின் பெயர்ப்பலகையே சிறப்பு தான்.
கட்டுமானப் பொறியியல் படிக்கும்,படித்த பொறியாளர்களுக்கு அது விளங்கும்.நான் வகுப்பில் பாடம் எடுத்தபோதும் அதை உதாரணமாகப் பலமுறை சொல்லியிருக்கிறேன்.
எழுதிக் கொண்டே இருந்தாலும் ஓயாது .
நீங்கா நினைவுகளுடனும், கனத்த இதயத்துடனும் ராஜேஸ்வரி திரையரங்கின் ரசிகன்.