அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.
இதை நாம் அன்றாடம் உபயோகித்திருந்தாலும் பெரும்பாலும் உணவின் அளவைக் குறிப்பிடவே உபயோகித்திருப்போம் அல்லது உண்மையிலேயே அது உணவின் அளவைக் குறிப்பதற்கு மட்டும் என்றே நினைத்திருப்போம்.
அது தவறு.
உண்மையிலேயே அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது உணவுப் பழக்கத்தில் மட்டுமல்ல. அன்றாடம் நாம் செய்யும் அனைத்திலும் தான்.
இன்று ஒரு காணொளி பார்க்க நேர்ந்தது.
தனுஷ் நடித்து வெளிவர இருக்கும் இட்லி கடை என்ற படத்தின் பாடல் வெளியீட்டு விழாவாக இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
அந்த விழாவிற்கு உள்ளே அனுமதிக்கவில்லை, தனுஷை பார்க்க விடவில்லை என்று சில இளைஞர்கள் ஆத்திரப்பட்டு, ஊடகங்களில் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார்கள்
அவர்கள் பேசியதாவது,
நாங்கள் காலையிலிருந்து உணவருந்தாமல் காத்திருக்கிறோம், பல வெளியூர்களிலும் இருந்து வேலை விட்டுவிட்டு சில ஆயிரம் பணம் செலவு செய்து கஷ்டப்பட்டு வந்திருக்கிறோம், அதோ அங்கு ஒரு ரசிகர் அவரது குட்டிக் குழந்தைக்கு முதன் முதலாக தனுஷைக் காட்டுவதற்காகக் காத்திருக்கிறார்.
ஆனால் எங்களை எல்லாம் உள்ளே விடவில்லை என்று தன்னுடைய ஆத்திரம் தீர சுற்றி சுற்றி நடந்து கொண்டே பேசிக் கொண்டிருந்தார்.. அவருக்குப் பின்னால் சில இளைஞர்கள் இவரை ஆமோதிக்கும் விதமாகக் கத்திக் கொண்டிருந்தார்கள்.
ஒரு நல்ல சினிமா ரசிகனாக , சினிமாவை ரசிப்பது ஒரு பொழுதுபோக்குக்காக 50,100 கொடுத்து படம் பார்ப்பது என்பது ஏற்றுக்கொள்ளத் தகுந்தது.
அதையும் தாண்டி, ஒரு குறிப்பிட்ட கதாநாயகன்/ நாயகியின் ரசிகனாக ரசிகையாக அந்தப்படத்தை ஒருமுறைக்கு மேல் பார்ப்பது, பணம் அதிகமாகக் கொடுத்து முதல் நாள் முதல் காட்சி பார்ப்பது என்பதே அறிவின்மை தான்.
ஆனால் ஒரு சாதாரண மனிதனாக , ஒரு ரசிகனாக அன்றாட வாழ்வில் திரும்ப திரும்ப அலுத்துப் போய் மன அழுத்தத்துடன் வேலை பணம் என்று ஓடிக்கொண்டிருக்கும் சூழலில், சிறிது பணம் அதிகமிருப்பவர்கள் இது மாதிரி முதல் நாள் முதல் காட்சி என்பதை தனக்கான ஒரு மனமகிழ்ச்சியாகக் கருதி செய்வார்கள் எனில் அது அவர்களது விருப்பம்
இதில் அறிவின்மை என்பதைத் தாண்டி ஒரு தனிமனித மகிழ்ச்சி சுதந்திரம் என்று கருத்து ரீதியாக சரி, போகட்டும் என்று விட்டுவிடலாம்.
ஆனால் அதையும் தாண்டி, ஒரு கடவுளை பாவிப்பது போல, அந்த சினிமா கலைஞர்களை பாவித்து அவர்களைக் காண்பதற்காக கால்கடுக்க நிற்பது, பாலாபிஷேகம் செய்வது, சூடன் காட்டுவது, மாலை அணிவிப்பது, இதோ மேற்சொன்ன பாடல் வெளியீட்டு விழா சம்பவம் போல, தனுஷை ஒருவாட்டி பார்ப்பதற்காக, ஊரிலிருந்து சில ஆயிரம் செலவு செய்து வேலையை விட்டு வந்திருப்பது எல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம் என்றே குறிப்பிடலாம்.
ஒரு படத்தை அதிக பணம் கொடுத்துப் பார்ப்பதே அறிவின்மை தான்
அதையும் தாண்டி இது மாதிரி என் குழந்தை தனுஷை ஒரு முறை பார்க்க வேண்டும் என்று காலையிலிருந்து உணவருந்தாமல் நிற்பதெல்லாம், கோமாளித்தனம்.
நாம் வாழும் அன்றாட வாழ்வின் அடிப்படை பிரச்சினைகள், அரசியல் சூழல், சமுதாயம் , சுற்றுச் சூழல், பொருளாதாரம், வேலையின்மை, தகுதியான ஊதியமின்னை இப்படி பல சிக்கல்களையும் சந்தித்துக் கொண்டு அன்றாடம் மனதில்புழுங்கிக் கொண்டிருக்கும் மனிதர்கள் மத்தியில் தனுஷைப்பார்க்க முடியாமல் தவித்துப் போய், கொதித்துப் போய் பேட்டி தரும் இவர்களை ஒப்பிடும்போது.
உனக்கென்னப்பா நீ் பைத்தியம், என்ன வேணாலும் செய்யலாம், எதப்பத்தியும் கவலை இல்லாமல் உன் இஷ்டத்துக்கு ஜாலியா இருக்கலாம் ” என்பது தான் நியாபகம் வருகிறது.
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு.
ஒரு ஆசிரியர்,ஒரு ஆம்பலன்ஸ் டிரைவர், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் ஒரு இராணுவ வீரர் , ஒரு காவலர் இப்படி அன்றாடம் நமக்காக சேவை செய்யும் மனிதர்களை விட இந்தக் கூத்தாடிகள் எந்த விதத்தில் உயர்ந்து விட்டார்கள் என்று அவர்களைத் தலையில் வைத்துத் தாங்குகிறீர்கள்?
திருந்தலாமே?
அளவோடு இருந்தால் எல்லாம் சுகம் தன்னே!