ஒரு ஆசிரியர், ஒரு இராணுவ வீரர் ,ஒரு காவலாளி, ஒரு விஞ்ஞானி, ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் என இந்த சமூகத்திற்கு நேரடியாக சேவை செய்யும் மனிதர்களுக்கு இல்லாத மரியாதையும் அன்பும் இங்கே சினிமாக் கூத்தாடிகளுக்கு இருப்பது தான் மிகுந்த வேதனை அளிக்கக் கூடிய விஷயம்.
இன்று இத்தனை உயிர்கள் போனதற்குக் காரணம் ஒரு போரட்டமோ, கோரிக்கை ஆர்ப்பாட்டமோ அல்லது கலவரமோ வன்முறையோ அல்ல.
ஒரு உச்சகட்ட சினிமா நடிகரைக் காண வந்த கட்டுக்கடங்காத கூட்டம்.
அவர் அரசியலில் இறங்கிவிட்டார்,கட்சி துவங்கி விட்டார் என்பதால் அவரை மக்கள் முழு அரசியல்வாதியாகக் கருதவில்லை. அந்த மாற்றம் உடனடியாக நிகழ்ந்துவிடப் போவதுமில்லை.
ஒரு நடிகரின் மீதான ஈர்ப்பில் கூடிய பெருங்கூட்டம் தான் இது.
நல்ல கல்வியறிவு உள்ள ஒரு மாநிலத்தில் மக்கள் இப்படி சினிமாக்காரன் மோகத்தின் காரணமாக உயிரிழப்பது என்பது மிகுந்த வேதனைக்குரிய விஷயம்.
இந்த உயிரிழப்பில் எந்த அரசியலும் செய்யாமல் போன உயிர்களுக்கு மதிப்பளித்து இனி அவர்களை மனதார நினைத்துக் கொண்டு இந்தக் கூத்தாடிகளின் மீதான மாய மோகத்திலிருந்தி மக்கள் விடுபட வேண்டும்
தவெக தொண்டர்களாகவே ஆனாலும் சரி, முதலில் தனது மற்றும் தனது குடும்பத்தைப் பாதுகாக்க வேண்டும்.
இப்படி கூட்டத்தில் நசுங்கி சாவதற்கா இந்த அழகான வாழ்க்கை?
அவர் என்ன பிரச்சாரம் தானே செய்யப் போகிறார்.
உண்மையிலேயே நீங்கள் நல்ல ரசிகராக இருந்தால் அவரது சினிமாவைப் பாருங்கள்.
அவரது அரசியலில் நம்பிக்கை இருந்தால் வாக்களியுங்கள்
அதை விடுத்து, இப்படி நேரில் சென்று பார்ப்பேன் என்று கூட்டத்தோடு கூட்டமாக குழந்தைகள் சகிதம் சென்று இப்படி வளர வேண்டிய பிள்ளைகளை பலி கொடுப்பது என்ன நியாயம்?
இனியாவது திருந்தலாமா?
இந்தக்கூத்தாடி மோகத்திலிருந்து விடுபடலாமா?