அப்புறம் என்னங்க வண்டியெல்லாம் கழுவி மாலை போட்டு பொட்டு வெச்சு பூஜைக்குத் தாயாரா?
ஆமாங்க இன்னைக்கு சரஸ்வதி பூஜை/ ஆயுத பூஜை ஆச்சே?
படிக்கிற பிள்ளைங்க புத்தகங்களையும், தொழிலாளிகள் தங்கள் ஆயுதங்களையும், அனைத்து தரப்பு மக்களும் தங்கள் சைக்கிள் உட்பட்ட அனைத்து வாகனங்களையும் தெய்வமாக பாவித்து அலங்கரித்து பூஜை செய்வது வழக்கம் தானே?
ஆனால் ஒரு விஷயம் இங்கு உணரப்பட வேண்டும்.
ஒரு குழந்தை சரஸ்வதி பூஜை அன்று புத்தகங்களை பூஜை செய்தால் மட்டும் தேர்வில் தேர்ச்சி பெற முடியாதோ அதே போல, நமது வாகனங்களுக்கு சரஸ்வதி பூஜை அன்று பொட்டு வைத்து மாலை போட்டு சூடன் காட்டுவதால் மட்டும் , வாகனம் பழுதாகாமல் நல்லவிதமாக இயங்காது.
அதை முறையாகப் பராமரிக்க வேண்டும்.
அதாவது குழந்தைகள் அன்றாடம் புத்தகத்தில் இருப்பதைப் பயில்வது போல, வாகன ஓட்டிகள் அன்றாடம் தனது வாகனத்தை கவனித்து, அதில் ஏதாவது குறைபாடுகள் தோன்றினால் அதை முறையாகப் பராமரிக்க வேண்டும்.
இருக்கைகள், அலங்கார விளக்குகள் எல்லாம் ஒரு பொருட்டல்ல.ஆனால் வண்டியின் இன்ஜின் ஆயிலை முறையாக, குறிப்பிட்ட காலத்தில் மாற்றுவது, சஸ்பென்சன் (அதிர்வுதாங்கி) சரியாக உள்ளதா, பிரேக் சரியாக உள்ளதா, ஹெட்லைட் எனப்படும் முதன்மை விளக்கு , டெயில் லாம்ப் எனப்படும் அபாய விளக்கு இதிலெல்லாம் சமரசம் கூடாது.
அதை முறையாகப் பராமரிக்காவிட்டால் , அது பெரிய விபத்தில் சென்று முடியலாம்.
இன்னொரு முக்கியமான விஷயம், அதிகமானோர் முறையில்லாமல் செய்யும் விஷயம், டயர்களை நேரத்திற்கு மாற்றாமல் தேய்ந்த டயர்களைக் கொண்டே பயணிப்பது.
இதன் ஆபத்தை உணராமல், செலவுக்கணக்கை மனதில் ஏற்றிக்கொண்டு டயர்களை மாற்றாமலே பயணம் செய்வது பெரும் முட்டாள்தனம்.
அப்படி பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்றால், டயர் தேய்ந்த வண்டியை விட்டுவிட்டு பொதுப் போக்குவரத்தை உபயோகிக்கலாம்.
இப்படி முறையாக வண்டியைப் பராமரிப்பதை விடுத்து, சரஸ்வதி பூஜை அன்று சூடன் காட்டுவதில் எந்தப் பயனும் இல்லை.
வயதான பெற்றோரை இருக்கும் போது காப்பாற்றாமல் இறந்த பிறகு தர்ப்பணம் கொடுப்பது , காகங்களுக்கு சோறு வைப்பது என சாங்கியங்களை செய்து செய்து பழகிப்போன இந்த சமுதாயம், வாகனங்களிலும் அதே பாணியைத்தான் பின்பற்றுகின்றன.
சாங்கியங்களைச் செய்வது அவரவர் விருப்பம்.
ஆனால் வெறும் சாங்கியங்களால் மட்டும் எந்தவொரு பயனும் கண்டிப்பாக இல்லை.
அவசியமானது பூஜை மட்டுமல்ல, பராமரிப்பும் தான்.
பராமரிக்கலாமா?
வாகனத்தை மட்டுமல்ல.
வாழ்கையின் அடிப்படையான உடலையும் தான்.
ஒரு வாகனத்திற்கு எப்படி முறையான நேரத்தில் முறையான பராமரிப்பு அவசியமோ, அது போல நமது உடலுக்கும் பராமரிப்பு என்பது மிக மிக அவசியமான ஒன்று.
காலை விடிந்ததும் வேலைக்குப் போய், பொழுது அடைந்து தான் வீட்டிற்கு வருகிறோம்.
இந்தச் சூழலில் உடலைப் பராமரிக்க என்று தனிநேரம் ஒதுக்க இயல்வதே இல்லை என்ற புலம்பல் நம்மில் 85 சதவீதம் பேருக்கு பொதுவான ஒன்றுதான்.
ஆனால், நமது உடலும் வாகனங்களைப் போலத்தான், சரியான நேரத்தில் இன்ஜின் ஆயில் மாற்றாத வண்டி பழுதாவதைப் போல, தேவையான பயிற்சிகளும், பராமரிப்பும. இல்லாதபட்சத்தில் உடலும் ஒரு கட்டத்தில் பழுதாகித்தான் போகும்.
இந்த சரஸ்வதி பூஜை தினத்தை வெறும் சம்பிரதாய சாங்கிய தினமாக அல்லாமல், எதற்கு என்ன தேவையோ அதைச் செய்வதற்கு உறுதி கொள்வோம்.
வருடத்தில் ஒரு நாள் அல்ல, வருடம் முழுக்க நம்மை, நமது வாகனத்தை, நமது புத்தகங்களை சரஸ்வதி பூஜை அன்று பராமரிப்பது போல, பேணிப் பராமரிப்பது தான் புத்திசாலித்தனமான செயல்..
சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை நல்வாழ்த்துகள்!