தொழிலாளர் நலன் என்ற வார்த்தை இப்போதெல்லால் மிகப்பெரிய நிறுவனங்களை மிரட்டுவதற்காகவும், பணம் பறிப்பதற்காகவும் ஒரு சிலருக்கான ணுக போகங்களை அனுபவிப்பதற்குமான வார்த்தையாகிப் போனது.
உண்மையிலேயே தொழிலாளர் நலம் அல்லது ஊழியர்கள் நலன் என்பதை இப்போதெல்லாம் ஒரு கிள்ளுக்கீரையாகத் தான், ஒரு சம்பிரதாய வார்த்தையாகத்தான் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களிலிருந்து சிறிய முதலாளிகள் வரை பயன்படுத்துகிறார்கள்.
சமீபத்திய ஒரு செய்தி.
டி.சி.எஸ், அதாவது டாடா கன்சல்டன்சி சர்வீஸஸ் எனப்படும் ஐடி நிறுவனம் , வரும் ஆண்டில் 2 சதவீத ஊழியர்களை, (6 லட்சத்தில்) , 12000 பேரை பணியிலிருந்து நீக்கப் போவதாக அறிவித்திருக்கிறது.
அப்படி பணிநீக்கம் செய்யப்படுபவர்களுக்கு இரண்டு ஆண்டு சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பணி நீக்கமானது வேலைக்கு இணைந்து ஒரு ஆண்டு இரண்டு ஆண்டு ஆன ஆட்களை நீக்குவது அல்ல.
வேலைக்குச் சேர்ந்து பல வருட அனுபவம் பெற்ற மூத்த ஊழியர்களைத் தான் பெரும்பாலும் பணி நீக்கம் செய்வார்கள்.
அதில் பலர் இந்த வேலை , இந்த சம்பளம் இந்த வாழ்க்கைமுறை என்று இதிலேயே ஊரில் போய் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
அவர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட பின் கையிலிருக்கும் அந்தப் பணத்தைக் கொண்டு வேறு ஏதாவது தொழில் செய்து வாழும் அளவிற்கெல்லாம் பலருக்கும் தைரியம் இருக்காது.
மேலும் இந்த சம்பளத்தை நம்பி, சம்பளத்தில் பாதிக்கும் மேல் கடன் அட்டை செலவு, மாதத் தவணை கட்டுபவர்களும் இருப்பார்களே?
இத்தனையும் அந்த இரண்டாண்டு சம்பளத்தை வைத்து சரிசெய்ய முடியுமா?
இவர்கள் மூத்த ஊழியர்கள் , அதிக சம்பளம் வாங்கியவர்கள் என்பதாலேயே எளிதாகப் புதிய வேலையும் கிடைக்காது.
மேலும் பணிநீக்கம் செய்யப்பட்டவர்கள் என்ற ஒரு முத்திரை , புது வேலை தேடுவதற்குத் தடையாகத்தான் இருக்கும்.
இதுவே பெரிய புகழ் பெற்ற கார்ப்பரேட் நிறுவனம் என்பதால் இப்படி பணிநீக்கம் செய்யும் போது ஓரளவு நியாயமாக இரண்டு வருட ஊதியத்தை அளித்து பணிநீக்கம் செய்கிறார்கள்.
பல நிறுவனங்களிலும் எதிர்பாராத நேரத்தில் எந்த அறிவிப்பும் இன்றி பணிநீக்கம் என்பது சர்வ சாதாரணமாகிப் போனது.
குறிப்பாக தனியார் பள்ளி , கல்லூரிகளில்.
மேலும் நியாயமான ஊதியமும் வழங்கப்படாமல் குறைந்த ஊதியத்தை நிர்ணயித்து, கடுமையான வேலை வாங்கும் முறையும், இங்கே நடைமுறையில் உள்ளது.
தொழிலாளர் நலனில் முதல் கொள்கை என்பது பணி நிரந்திரம்.
காலணிகளைப் போல, உபயோகித்துப் பழசீன உடன் கழட்டி எறிவது என்பது கண்டிக்கப்பட வேண்டும்.
திடீரென இழுத்து மூடப்படும் நிறுவனங்களின் முதராளியின் பணம் முடக்கப்பட்டு அந்த நிறுவனத்தின் ஊழியர்களுக்கு நியாயம் வழங்கப்பட வேண்டும்.
தொழிலாளர் நலன் என்பது சம்பிரதாய வார்த்தை அல்ல.
படித்த அடிமைகளாக நம் பட்டதாரிகள் வாழும் அவல நிலை மாற வேண்டும்.
உழைப்பில்லாமல் உயர்வில்லை.
உழைப்பவனுக்கே முதலுரிமை.
ஊழியர்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் அநீதியும் களையப்பட வேண்டும்.