வெள்ளிக்கிழமை பேருந்துகள் கனவையும், ஞாயிற்றுக்கிழமை பேருந்துகள் நினைவுகளையும் சுமந்து செல்லும்!
யார் எழுதியதோ தெரியவில்லை
ஆனால் மிக ஆழமான வார்த்தைகள்.
யதார்த்தமாக இந்த வார்த்தைகளைக் கடந்து விட முடியாது.
ஆழந்து அனுபவித்து நினைவுகளின் வலியை உணராமல் இப்படி ஒரு பெரிய விஷயத்தை ஒரு வாக்கியத்தில் சொல்லி விட இயலாது.
எனது சொந்த அனுபவத்தில் , ஒவ்வொரு முறையும் சொந்த ஊருக்கு வந்து விட்டுத் திரும்பும் போது மனதில் அந்த நினைவுகளின் வலி இல்லாமல் இல்லை.
அதிலும் வயதாக ஆக, ஊருக்கு வருவது என்பது மிக முக்கியமான காரண காரியங்களுக்காகவே அல்லாமல், நினைத்த நேரத்தில் வருவது என்பது நடக்காத ஒன்று.
சில சமயங்களில் நமது நெருங்கிய சொந்தங்களின் விஷேசங்களுக்கோ, ஏன் இறப்பிற்கோ கூட ஊருக்கு வர இயலாத அவல நிலை ஏற்படுகிறது.
அதையெல்லாம் தாண்டி பதிவாக இந்தப் பண்டிகை, இந்த நாளுக்கு ஊருக்கு கட்டாயம் வருவோம் என்று ஒவ்வொருவருக்கும் ஒரு நாள் இருக்கும்.
வருடத்திற்கு ஒரு தடவையோ அல்லது இரண்டு தடவையோ தான் அந்த வாய்ப்பு.
அப்படியான எனது வாய்ப்புகள், தசரா திருவிழா , பொங்கல் பண்டிகை என்றாகி விட்டது.
அதிலும் தசரா திருவிழாவிற்கு என் தெருவில் உள்ள அனைத்து சொந்த பந்தங்களும் தவறாமல் கலந்து கொண்டு ஊர்கூடி திருவிழா கொண்டாடுவோம்.
அந்தத் திருவிழா பற்றி சென்ற ஆண்டு கட்டுரை கூட எழுதியிருந்தேன்.
இரண்டு மாதங்களுக்கு முன்பே ஊருக்கு தசராக்குப் போவதற்கான ஆயத்தங்கள் , ரயில் பயண முன்பதவில் துவங்கி அந்த நாளுக்காக மனம் ஏங்கிக் கொண்டே இருக்கும்.
அந்த நாள் வந்தவுடன் மனதில் ஏற்படும் மகிழ்ச்சியை வார்த்தைகளால் வெளிப்படுத்த இயலாது.
ஆனால் அந்த மூன்று அல்லது நான்கு நாட்கள் முடியப்போகும் தருணத்தில் மனதில் ஏற்படும் இனம் புரியாத ஒரு கவலையும் ஏக்கமும், காலங்கள் கழிந்தாலும் எத்தனை வயதானாலும் தீர்ந்த பாடில்லை.
ஞாயிற்றுக்கிழமை ஊர் திரும்ப வேண்டும் என்ற கவலை சனிக்கிழமை மதியமே தொற்றிக் கொண்டு ஒரு படபடப்பை உண்டு செய்கிறது.
ஞாயிற்றுக்கிழமை வேலைக்குச் செல்ல வேண்டிய உறவுக்கராரரும் , மச்சானும் சனிக்கிழமை இரவு சந்திக்கும் போது சொல்லும் வார்த்தைகள் மனதிலிருந்து வரும் காயம்
மாப்ள ஊருக்குப் போகும் போது போன் பண்ணு, அடுத்து வாய்ப்பிருந்தா வா, அடுத்து எப்ப வருவ?
தீபாவளிக்கு டிக்கெட் போடலியோ?
சரி மாப்ள வேற எதும் வாய்ப்பு இருந்தா வந்துட்டுப் போ என்ற வார்த்தைகள் சொல்பவருக்கும் கேட்பவருக்கும் கண்களில் நீரை வரவழைக்காமல் இல்லை.
பிறக்க ஒரு ஊர் , பிழைக்க ஒரு ஊர் என்ற வாக்கியம் மிக எளிதாக கடந்து செல்லக்கூடியது அல்ல.
ஒவ்வொரு முறையும் ஊருக்கு வந்து செல்லும்போது ஊரிலேயே தங்கி வேலை செய்யும் நண்பர்களை ,சொந்த பந்தங்களைப் பார்க்கும் போது, இவனைப் போல நமக்கு தலையெழுத்து அமையவில்லையே என்ற வருத்தம் மனதைக் காயப்படுத்தாமல் இல்லை.
ஆனால் இதெல்லாம் இப்போதைக்கு சரியாகாது என்று மூளை உணர்த்தினாலும், விடுமுறை நாட்களில் விடுமுறையை அனுபவித்துக் கொண்டிருக்கும் போதே, பணியிடத்திலிருந்து ஒரு அழைப்பு, அடுத்த மாதத் தவணைக்கான ஒரு குறுந்தகவல் வரும்போது இதையெல்லாம் நாம் சமாளிக்கத் திரும்ப நம் ஊரை விட்டுப் பயணிக்கத் தான் வேண்டும்
நாம மட்டுமா?
நம்மைப்போல் இன்னும் லட்சோப லட்ச மக்களும் மனதில் வலியுடன் தானே ஞாயிற்றுக்கிழமை பயணத்தை மேற்கொள்கிறார்கள்?
நமக்கு மட்டும் என்ன?
என்று மூளை கேள்வி எழுப்பினாலும்
மனசு ஒரு குழந்தை சார்.
அது சொல்றத கேட்காது.
இங்க இருந்த இந்த உடம்பு பயணம் பண்ணிப் போயிட்டா கூட, மனசு இன்னும் இங்கேயே தான் இரண்டு மூன்று நாட்களுக்கு சுற்றிக் கொண்டிருக்கும்.
திரும்ப வேலை அலுப்பு, பணப்பிரச்சினை என்று மூளை வெறி ஆகும் தருணத்தில் தான் இந்த மனசு சொந்த ஊரை விட்டு அங்கே வந்து சேரும்.
எங்களுக்கு மட்டும் என்ன ஆசையா?
உடல் ஓரிடத்திலும், மனம் ஓரிடத்திலும் என்று வாழ.
எல்லாம் நடைமுறை .
பழகிக் கொள்வோம்.
மனம் எனும் குழந்தை அது பாட்டுக்கு அழட்டும்.
ஆறுதல் சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை.