Categories
கருத்து தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

இப்படி இம்சை செய்யலாமா?

ஊருக்குப் போய் வரும் வருத்தத்தைப் பற்றிய கட்டுரையை முந்தைய நாள் எழுதியிருந்தோம்.
இந்த வருத்தத்தில் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் விதமாக பேருந்து கட்டணங்கள், கூட்ட நெரிசல், வாடகைக் கார் ஆட்டோ கட்டணங்கள் நம்மை மேலும் பாடாய்ப்படுத்துவது உண்மை தான்.

நான் கல்லூரியில் படித்த காலத்தில் ஊரிலிருந்து கோவை செல்வது ஒரு பெரிய அக்கப்போர் என்றால் கோவை சென்ற பிறகு அங்கிருந்து எனது கல்லூரிக்கு மாநகரப்பேருந்தில் செல்வது அதை விடக்கொடூரமானது.

ஊரிலிருந்து கோவை செல்லும் போதாவது, சில நேரம் முன்பதிவுப் பேருந்து அல்லது சில நேரம் பக்கத்து வீட்டு அண்ணன் துணையுடன் நோகாமல் இடம்பிடித்துச் சென்று விடுவேன்.
ஆனால் விடிகாலை காந்திபுரம்/சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து எங்களது கல்லூரிக்குச் செல்ல மாநகரப் பேருந்துக்கு ஒரே அடி தடியாகத்தான் இருக்கும்.
அதில் எனது பொதியையும் சுமந்துகொண்டு ஏறிச் செல்வதற்குள் ஏன்டா , திரும்ப வந்தோம் என்று ஆகிவிடும்.

ஏற்கனவே இருக்கும் வருத்தம் போதாது என்று இது இன்னும் அதிகமான கோபத்தையும், ஆத்திரத்தையும் வரவழைக்கும்.

ஊருக்குக் கிளம்பும் போது விடுதியிலிருந்து கூட்டமாகக் கிளம்பும் காரணத்தால், 4-5 பேர் இணைந்து கால் டாக்ஸியில் பயணித்து விடுவோம்
அதனால் எந்த சிரமமும் தெரியாது.

மதுரை ஆரப்பாளையத்திலிருந்து மாட்டுத்தாவணி மாறும் மாநகரப்பேருந்தில் நசுங்கிப் பிதுங்கி விடுவோம்.ஆனால் ஊருக்குச் செல்லும் ஆர்வம் நமது கஷ்டத்தை மறக்கடித்து விடும்.

சென்னை வந்தபிறகு நான் மாநகரப் பேருந்துகளில் பயணிப்பதே குறைந்து விட்டது.

எப்படியாவது நண்பர்களுடன் இருசக்கர வாகனத்தில் அல்லது வாடகை ஆட்டோக்களில் பயணித்து சமாளித்து விடுவதால் இந்தக் கூட்ட சிக்கல் இல்லை.

ஆனால் பணவிரயம் உண்டு.

ஆம்னிப் பேருந்து கட்டணமும், வாடகைக் கார் கட்டணமும் விடுமுறை சமயங்களில் தான் எகிறி விடுமே?

பல நாட்கள் கழித்து இன்று ஒரு சம்பவம் இதையெல்லாம் எனக்கு நினைவுபடுத்தும் விதமாக அமைந்தது.

காலை தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து எனது இருப்பிடமான கோவிலம்பாக்கத்தற்கு ஓலா செயலியில் கார் ஒன்றை வாடகைக்குக் கேட்டிருந்தேன்.
மொத்தத் தொகை 240 ரூ காட்டியது.

அந்த ஓட்டுனரைத்தொடர்பு கொண்ட போது 350 ரூ கொடுத்தால் கொடுங்கள் என்றார்.

என்னங்க 110 ரூ அதிகமா கேக்குறீங்க? என்று கேட்டேன். (கிட்டத்தட்ட மொத்தத் தொகையில் 50 சதவீதம்).

இன்று சூழ்நிலை அப்படி , அப்படித்தான் சார் கேட்க முடியும் என்றார்.
இல்லங்க, வேண்டாம், நீங்க என்னுடைய கோரிக்கையை நிராகரித்து விடுங்கள் , நான் வேற வண்டியில் போகிறேன் என்றேன்.

பைனலா எவ்ளோ தருவீங்க என்றார்.
நான் தான் முன்னையே சொன்னனே 300 ரூ, தரேன் என்றேன்.
அவர் 350 கேட்ட போது , நான் 300 ரூ தருவதாகக் கூறினேன்.

திரும்ப அவர் விடாம , சரி 320 ரூ கொடுங்க, வரேன் என்றார்.

சரி விடிகாலை கண்விழித்து ஓட்டுகிறார்கள், 80 ரூபாய் என்பது அவர்களின் கடுமையான உழைப்பிற்கான ஒரு உந்துதலாக இருக்கட்டும் என்று ஒப்புக்கொண்டேன்.

ஒரு 5 நிமிடம் கழித்து மீண்டும் அவரிடமிருந்து போன்.
அண்ணா எங்க நிக்குறீங்க என்றார்

இந்தியன் வங்கி ஏடிஎம் பக்கத்துல தாம்ப்பா , என்றேன்.

உள்ளலாம் வரமுடியாதுனா, திருப்புறது கஷ்டமா இருக்கும், வெளியில வாங்க என்றார்

இல்லங்க, என்கிட்ட 6 பை இருக்கு, ஆளுக்கு 3 பையெல்லாம் தூக்கிக்கிட்டு வெளில வரமுடியாதுனு தான் நான் டாக்ஸி புக் பண்ணேன்.
நாங்க உள்ள வாங்க என்றேன்.
( முன்பதிவு செய்யப்பட்ட இடத்திற்கு தான் வரச்சொன்னேன். நூற்றுக்கணக்கான வண்டிகள் வந்து போய் ஆட்களை ஏற்றிக்கொண்டு தான் இருந்தது)

அதெல்லாம் கஷ்டம்னா, உள்ள வந்து வண்டியெல்லாம் திருப்புறது கஷ்டம் நீங்க வெளில வாங்க என்று மீண்டும் சொன்னதையே சொன்னார்.
என்னப்பா சொல்ற, இப்பதான் ஒரு ஜாகுவார், ஒரு பிஎம்டபுள்யூ ( பெரிய நீளமான விலையுயர்ந்த கார்கள்) உள்ள வந்து போச்சு.
அவங்க எல்லாம் திருப்புறாங்க, உன்னோட வண்டி என்ன அதை விடப் பெருசா என்று கேட்டதும் கோவித்துக் கொண்டு போனை ஆப் பண்ணி விட்டு , வாடகை ஒப்பந்தத்தையும் ரத்து செய்து விட்டார்.

ஓலா தரும் பணம் போதாது என்றால் அதில் ஓட்டுவது அவருடைய தவறு.
சரி அது நியாயமான தொகையாக இருக்காது என்பதால் தான் நான், அதிகமாக 60 ரூ தர ஒப்புக்கொண்டேன்
அதுவும் போதாமல் கொள்ளை லாபம் எடுக்க நினைத்தது அவருடைய தவறு.

இன்னொரு முக்கியமான விஷயம், என்னால் ரயில் நிலையத்தை விட்டு வெளியே வரை செல்ல முடியும் என்றால் நான் 20 -30 ரூ கொடுத்து மாநகரப் பேருந்திலேயே பயணித்து விடலாமே?

உள்ளே வந்து திருப்புவது கஷ்டம் என்றால் வந்து ஆள் ஏற்றிக் கொண்டு செல்பவர்கள் எல்லாம் பைத்தியக்ககாரர்களா?

இவருக்கு அப்படி கஷ்டமாக இருந்தால் வீட்டிலேயே வேலை செய்யாமல் இருந்திருக்கலாமே?

எதற்காக கார் ஓட்ட வர வேண்டும், எதற்காக கஷ்டப்பட வேண்டும்?

உழைக்கும் மக்கள் என்று நாம் தட்டிக் கொடுத்தாலும், சிலர் இதுபோல சூழ்நிலைத் திருடர்களாக, ஊரை ஏய்த்து , நோகாமல் சொகுசாக சம்பாதிக்க நினைக்கிறார்கள்.
இதனால் தான் இன்றளவிலும் கூட , பொதுமக்களில் சிலர் வாடகை வாகனங்களை பயன்படுத்த யோசிக்கிறார்கள்.

ஓலா தரும் பணம் போதவில்லை என்றால், கூட்டமாக சேர்ந்து ஓலாவிடம் முறையிடலாமே?

இவர்களே ஒரு கூட்டமைப்பை உருவாக்கி நியாயமான விலையில் மக்களுக்கு சேவை செய்யலாமே?

செய்யும் வேலையிலேயே கொள்ளை லாபம் பார்க்க நினைத்தால் சரியாகுமா?

மாதச் சம்பளம் வாங்கும் நான், இந்த மாதம் குளிரடிக்கிறது , வேலைக்கு 10 மணிக்கு தான் வருவேன் என்று சொல்லத்தான் முடியுமா?
அல்லது 35000 பணம் போதாது, கூட 4000 சேர்த்துத் தாருங்கள் என்று சொல்லத்தான் முடியுமா?

ஆனால் , ஓலாவில் ஓட்டுபவர்களுக்கு இந்தச் சலுகை எல்லாம் இருக்கத்தான் செய்கிறது.
பலரும் அதிகமாகப் பணம் கொடுக்கத்தான் செய்கிறார்கள்.
அப்போதும் கூட, நீ அங்க நிக்காத இங்க வா, உன் வீட்டுக்கிட்ட லொகேஷன் போகல, இதோட முடிஞ்சி போச்சு என்று இவர்களில் சிலர் செய்யும் அட்டூழியம் நம்மை முகம் சுழிக்கத்தான் வைக்கிறது.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.