திருக்குறளில் நாம் எவ்வளவோ நல்ல கருத்துகளைக் கேட்டு கடந்து வந்திருப்போம்.
2000 ஆண்டுகளுக்கு முன்பே இப்படி ஒரு நூலை , அதாவது 2000 ஆண்டுக்குப் பிறகும் இன்றைய சூழலில் பயன்படும் கருத்துகளைக் கொண்ட நூலை எப்படி எழுதியிருக்க முடியும் என்று தினம் தினம் நாம் அந்த நூலை நினைத்து ஆச்சரியப்படும் அளவிற்கு நிறைய விஷயங்கள் அதனுள் பொதிந்து கிடக்கிறது.
இன்றைய தினத்தில் டிரெண்டிங்கில் இருக்கும் விஷயங்களைப் பார்க்கலாமா?
முதல் விஷயம்.
ஏய் தாய்க்கெழவி நீளமா பேசாத!
அதாவது சொல்ல வருவதை நறுக்கென சுருக்கமாக சொல் என்பதே அதன் அர்த்தம்.
அந்த வகையில் திருக்குறளை மிஞ்ச இன்னொரு நூல் உருவாக வாய்ப்பே இல்லை.
எப்பேர்ப்பட்ட கருத்துகளை எல்லாம் , 7 வார்த்தைகளில் அடக்கி விட்டார்?
எத்தகைய மாயாஜாலம் அது?
ஏதோ ஒரு படத்தில் தனுஷ் கூட சொல்லுவாரே, திருக்குறள் ஒன்னேகால் அடி தான், ஆனா பவர் அதிகம் என்று.
இந்த மாதிரி அவர், ஏழு வார்த்தைகளில் அடக்கி சொல்ல வந்த கருத்தை சொன்ன விதமும், அவ்வாறாக சொல்ல வேண்டும் என்று யோசித்த விதமும், நம்மை வியப்பில் ஆழ்த்தாமல் இல்லை.
அடுத்தது, வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் கொறையவே இல்ல என்று படையப்பா , படத்தில் வரும் வசனம்.
இது அப்படியே திருக்குறளுக்குப் பொருந்தும் .
இரண்டாயிரம் அல்ல, இன்னும் நான்கு ஆயிரம் ஆண்டுகள் கழித்தும் கூட இதில் உள்ள கருத்துகள், அன்றைய சூழலுக்கு ஏற்றதாகத் தான் இருக்கும்.
அத்தகைய மகிமையை உடையது இந்தத் திருக்குறள்.
சில சினிமாக்கள் வந்த புதிதில் அன்றைய காலகட்டத்தில் ரசிகர்களால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்டிருக்கும், நாளடைவில் அது கிரிஞ்சாகத் தோன்றும்.
அப்படி எந்தக் காலத்திலும் கிரிஞ்சாகப் பெயர் எடுக்காத நூல் திருக்குறள்.
உதாரணமாக இந்தக் காலத்திற்கு ஏற்றாற் போல நாம் பெரிதும் வாசித்திராத ஒரு குறள்.
சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.
பொருட்பாலில் , குடியியல் எனும் அதிகாரத்தில் வரும் 1078 ஆவது குறளான இந்தக் குறளின் பொருளானது
இல்லாதவர்களோ, இயலாதவர்களோ, அனுகி தங்களது இல்லாமையை இயலாமையை சொன்னவுடனேயே உதவுபவர்கள் சான்றோர்கள்.
கயவர்களோ, கரும்பைப்பிழிவது போல, கசக்கிப் பிழிந்தால் தான் இரங்கி வந்து உதவியைச் செய்வார்கள்.
நாம் இந்தக்காலத்தில் அன்றாட வாழ்வில் சந்திக்கும் உண்மை தானே?
உதவி என்பதல்ல, நமக்கு சேர வேண்டியதையே சில நேரங்களில் கசக்கிப் பிழிந்து தான் வாங்க வேண்டியிருக்கிறது.
அன்று இன்று மட்டுமல்ல.
என்றும் பொருந்தக்கூடிய கருத்துகளைச் சொல்வதில் திருக்குறளுக்கு நிகர் எதுவுமில்லை.
ஒப்பற்ற இலக்கியத்தைப் போற்றிக் கொண்டாடுவோம்!