கையில இருக்கு தங்கம், கவலை ஏன்டா சிங்கம்னு ஒரு விளம்பரம் கொஞ்ச நாளைக்கு முன்னாடி ரொம்பப் பிரபலமா ஒளிபரப்பு ஆனது.
அந்த விளம்பரம் வரும் முன்பே அது தான் நிலை.
கையில தங்கம் இருக்கு என்ற தைரியம் எப்போதுமே இந்திய நடுத்தரக் குடும்ப மக்களுக்கு உண்டு.
எனது சொந்த அனுபவத்தில், சமீபத்தில் ஒரு மாதத்திற்கு முன்பு கூட, நான் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது, மருத்துவமனை செலவு பற்றி நான் கவலை இல்லாமல் சொகுசாக மருத்துவ உபசரிப்புகளை அனுபவித்து மகிழ்ந்த காரணம், எனக்கென எனது பெற்றோரும், பாட்டியும்,நானும் சேர்த்து வைத்திருந்த தங்கம் இருக்கிறது என்ற தைரியத்தில் தான்.
இது என்னுடைய நிலை மட்டுமல்ல.
இந்திய நாட்டின் பெரும்பாலான நடுத்தர குடும்பங்களின் தைரியம், சேமிப்பு எல்லாம் தங்கம் தான்.
பெரும்பாலான விவசாயிகள், தொழில் தொடங்க நினைப்பவர்கள், தொழிலுக்கு பண சுழற்சி என பல்வேறு தேவைகளுக்கும் வீட்டிலிருக்கும் தங்கம் தான் ஆதாரம்.
இப்படியிருக்க சமீபத்தில் சில நிறுவனங்கள் உங்ககிட்ட இருக்கிற தங்கத்த வித்துருங்க , வித்துருங்க என்று மாறி மாறி விளம்பரம் செய்தார்கள்.
ஆனால் அவர்களால் பெரிதாக சாதிக்க முடியவில்லை என்று தோன்றுகிறது.
அடகு வைப்பதற்கு பல கடுமையான விதிமுறைகளை வகுக்க நினைத்தது தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள்.
இதற்குக் காரணம், மக்கள் எரிச்சலாகி , தற்காலிக பணத் தேவைக்காக கையிலிருக்கும் தங்கத்தை விற்று விட்டால், தங்கம் பல பெரிய நிறுவனங்களின் கைவசம் இன்றைய விலையில் சென்று விடும்.
இன்னும் ஓராண்டில், ஓராண்டு கூட அல்ல, ஆறு மாதங்களில் தங்கத்தின் விலை இப்போதைய விலையைக் காட்டிலும் ஒன்றரை மடங்கு உயரலாம்.
அப்போது நாம் தங்கத்தை வாங்க முயற்சித்தால் அது நமக்கு மிகப்பெரிய நஷ்டம், அவர்களுக்கு மிகப்பெரிய லாபம்.
இந்த சூட்சமத்தை மனதில் வைத்துக்கொண்டு தான் மக்களிடமிருக்கும் தங்கத்தை எப்படியாவது வெளிக்கொணர வேண்டும் என்று துடிக்கிறது இந்த கட்டமைப்பு.
நம்மிடமிருக்கும் பொருளை வாங்கி, அதை நம்மிடமே இரண்டு மடங்கு லாபத்திற்கு விற்கும் சூட்சமம்.
கையிலிருக்கும் தங்கத்தை விற்பது எந்தவிதத்திலும் புத்திசாலித்தனமான செயல் அல்ல.
உதாரணத்திற்கு நான் இரண்டு ஆண்டுக்கு முன்பு அடகு வைத்த நகை 75000 ரூபாய்க்கு அடமானம் போனது.
இன்று அதே நகையின் அடமான மதிப்பு கிட்டத்தட்ட 2 லட்ச ரூபாய்.
இப்படி விண்ணை முட்டும் விலை உயர்வு அடையும் பொருளை நாளுக்கு நாள் விலை உயரும் பொருளை நாம் அடமானம் வைப்பது கூட தவறு தான்.ஏதாவது சூழ்ச்சி செய்து அமையும் பறிமுதல் செய்ய முயற்சிகள் நிகழலாம்.
கண்டிப்பாக ஒருபோதும் அதை விற்கக் கூடாது.
சமீபத்தில் ஜெரோதா எனும் பங்குச்சந்தை தரகு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி நிதின் காமத், இந்திய குடும்பங்களில் சுமார் 3 லட்சம் கோடி டாலர் மதிப்பிலான தங்கம் முடங்கிக் கிடக்கிறது என்றும், அதை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும் என்றும் அறிக்கை விடுத்திருக்கிறார்.
இது முற்றிலும் மேற்சொன்ன சூட்சமத்தின் விளைவு தான்.
இந்தியக் குடும்பங்களிடம் இருக்கும் தங்கம், அவரவர் உழைத்து சேர்த்து வைத்த சேமிப்பு.
அதை பங்குச்சந்தையில் போடச் சொல்வதற்கோ, வேறேதும் முறையில் அதை உபயோகிக்கலாம் என்று பேசுவதற்கோ யாருக்கும் அதிகாரம் இல்லை.
தங்கம் என்பதும் வீடு மாதிரி அவரவர் சொத்து தான்.
அதை வியாபாரப் பொருளாக்கி மக்களிடமிருந்து பிடுங்கி பெரிய நிறுவனங்கள் அதையே மூலதனமாக வைத்து கொள்ளை லாபம் சம்பாதிக்க முயலும் சூட்சமத்மை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
என் தங்கம் என் உரிமை என்பது இந்த இடத்தில் நாம் உரக்கச் சொல்ல வேண்டும்.