ஒரு படம் பார்க்கும் போது அந்தப்படத்தைப் பற்றிப் புகழ்வதோ அல்லது குறை சொல்வதோ தான் வழக்கம்..
ஆனால் இன்று நான் அந்த வழக்கத்திலிருந்து மாறுபடுகிறேன்.
ஏனென்றால் நமது மொழியில் இதைவிட சிறப்பான பிரம்மாண்டமான, தரமான திரைக்கதையுடன் உருவான அருமையான படம் ஒன்று நமது மக்களால் பெரிதாகக் கொண்டாடப்படவில்லை.
ஆனால் இன்று இந்தப்படத்தை ஒவ்வொருவரும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுகிறோம்.
இன்றைய படம் காந்தாரா. நாம் கொண்டாடத் தவறிய படம் ஆயிரத்தில் ஒருவன்.
நான் காந்தாரா படத்தை குறையாகச் சொல்லவில்லை. ஆனால் இதை விட எல்லா விதத்திலும் பல மடங்கு சிறப்பாக அமைக்கப்பட்டிருந்த ஒரு தமிழ்ப்படத்தை நாம் கொண்டாடத் தவறிவிட்டோம் என்று ஆதங்கப்படுகிறேன்.
என்ன இல்லை ஆயிரத்தில் ஒருவனில்?
இந்தப்படத்தைக் காட்டிலும் பல மடங்கு ரசிக்கத் தகுந்த திரைக்கதை அமைப்பு, இசை, நடிகர்களின் நடிப்பு, சண்டைக்காட்சிகள், பாடல்கள் என எல்லாவிதத்திலும் இதைவிட மிகச்சிறப்பான படம்.
சரி அதைப் பேசி பலனில்லை.
இந்தக் கதையைப் பற்றிப் பேசலாம்.
கதை- ஒரு குறிப்பிட்ட பகுதியை அபகரிக்க நினைக்கும் ஒரு கூட்டம், மறுபுறம் தடுக்கும் கதாநாயகனின் கூட்டம்.
அவதார் பட கதை. மன்னிக்கவும், வியட்நாம் காலணி படத்தின் கதை.
முந்தைய காந்தாரா வில், எதிரிகளான ஊர்த்தலைவரைத் தூக்கிவிட்டு, ஒரு சில அரசர்களை அதில் கற்பனை செய்தது தான் இந்தப் பகுதி.
அதை அவர்கள் தெளிவாகக் குறிப்பிட்டும் சொல்லிவிட்டார்கள்.
அந்த இடத்தின் வரலாறு, தெய்வீக சக்தி, அதை அபகரிக்கத் தலைமுறை தலைமுறையாகப் போராடும் ஒரு எதிரிக்கூட்டம் என்ற அடிப்படை தான் படம்.
இந்த பாகத்தில் மக்கள் மிகப் பெரிதாகக் கவரப்பட்டதற்குக் காரணம், இறை போதனை.
முதலில் அந்தப் பகுதி எப்படி உருவானது என்பதை சொல்லத் துவங்குவதில் இருந்து, அந்தப் பகுதிக்கு ஒரு ஆபத்து வரும் எனில் சிவபெருமானின் கணங்களும், ஏன் சிவபெருமானே கூட இறங்கி வருவார் என்று காட்சியப்படுத்தப்பட்ட விதமும் பிரமாதம்.
தியேட்டர்களில் மிகத் துல்லியமான பெரிய திரையில், நல்ல ஒலி வடிவமைப்பில் பார்க்கும் போது, நம்ம ஊர்களில் திருவிழாக்களில் முனியசாமி/ கருப்பசாமி ஆடுபவர்களுக்கு மேள தாளம் அடிக்கும் போது எப்படி உணர்வு கொந்தளிக்கிறதோ, அதுபோல ஒரு புல்லரிப்பு நமக்கும் ஏற்படுகிறது.
அதிலும் கதாநாயகனுக்கு சாமி வந்து சண்டையிடும் காட்சிகள், குறிப்பாக சிவபெருமான் இறங்கி வந்து கதாநாயகன் ரூபத்தில் காட்சி தரும் காட்சியில் எல்லாம் உச்சகட்டம் மயிர்கூச்செறிவு.
சிறிது பலவீனமாக இருந்தாலும் பாதிக்கப்பட்டு சாமியாடத்துவங்கி விடுவார்கள்.
இது நிகழ்ந்தும் இருக்கிறது.
ரிஷப் ஷெட்டி மற்றும் படக்குழுவின் வெற்றி சிவபெருமானும் அவரது கணங்களும் அளித்த வரம் தான். (காட்சி அமைப்புகள்)
ஒரு சினிமா ரசிகனை நகைச்சுவையான முதல்பாதி திரைக்கதை, பிரம்மாண்டமான கண் சிமிட்டாமல் பார்க்க வைக்கும் சண்டைக்காட்சிகள் ஆகியவற்றால் கவர்கிறார்கள். படத்தின் முதல்பாதி சற்றே நீளம் என்றாலும், நகைச்சுவையான கதாபாத்திரங்களின் வடிவமைப்பும், தடபுடலான சண்டைக்காட்சிகளும் அதை மறக்க வைக்கின்றன. அதிலும் அந்த குலசேகர ராஜா கதாபாத்திரம் அதகளம்.
இரண்டாம் பாதியில் கதை சூடுபிடித்து நாம் எதிர்பாராத திருப்பங்கள் திரைக்கதையில் ஏற்பட்டு, போதாக்குறைக்கு கதாநாயகனுக்கு சாமி வந்து சண்டையிடும் காட்சிகள் என்று படம், மடையிலிருந்து புறப்பட்ட வெள்ளம் போல கட்டுக்கடங்காத உணர்ச்சி தூண்டல்களைத் திரும்ப திரும்ப நமக்கு ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது.
இதை பாகுபலியில் பார்த்து விட்டோம், இதை அந்தப்படத்தில் பார்த்து விட்டோம், இது இந்தப்பட கதையாச்சே என்பதெல்லாம் முதல் பாதி படம் ஓடிக்கொண்டிக்கும் போது தான்.
இரண்டாம் பாதியில் நாமும் காந்தாராவின் ஒரு பிரஜையாகத்தான் மாறிப்போகிறோம்.
நம் கையிலிருக்கும் பாப்கார்ன், டோநட், டீ சர்ட், ட்ராக் பாண்ட்களை மறந்து நம்மை காந்தாரா மக்களாக மாற்றியதில் வெற்றி பெற்றிருக்கிறது இந்த அணி. படத்தின் ஒரு காட்சியில் விருந்து நிகழும் இடத்தில் 20 லிட்டர் தண்ணீர்கேன் ஒன்று தென்படுகிறது.
பராவல ப்ரோ எவனோ அந்தக்காலத்துலயே தண்ணி கேன் போடப் போயிருப்பான் போல என்று நம்மை நாமே ஆறுதல் செய்து கொள்கிறோம்.
சூலத்தைக் கையில் பிடித்த மறுகணம் ஒரு பெரிய பாம்பு கால் வழியாக ஏறி கழுத்தருகே சுற்றி நின்று படம் எடுக்கும் போது, நம்மால் ரிஷப் ஷெட்டியைப் பார்க்க இயலாமல், அவருள் குடிகொண்ட சிவபெருமானை உணரவைத்த கிராபிக்ஸ் காட்சியும், ஒலி அமைப்பும் தீர்மானித்திருக்கிறது இந்தப் படத்தின் வெற்றியை.
ஒருவேளை முந்தைய காலகட்டம் போல, கிராமம் கிராமமாக, தெருவில் திரை கட்டி இந்தப்படத்தைக் காண்பித்தால் பலரும் சாமியாடலாம். ஏன் பலர் இந்து மதத்தையும், சிவபெருமானையும் இன்னும் தீவிரமாக விரும்பத் துவங்கலாம். மதம்மாறிய சிலர் யோசிக்கக் கூட செய்யலாம்.
நம் தெய்வங்கள் இப்படி இருக்க நாம் ஏன் மதம் மாறினோம் என்று.
கதாநாயகனான, இயக்குனரான ரிஷப் ஷெட்டி அதில் வென்று விட்டார்.
ஒரு படத்தை எத்தனை படத்தின் சாயலிலும், எங்கெங்கிருந்தோ சேகரிக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்ப திரைக்கதை கொண்டும் எடுத்திருந்தாலும், ரசிகர்களை/ மக்களைக் கவர்ந்து விட்டார். சினிமா வெற்றி என்பது அதுதான்.
கதாநாயகி, குலசேகரா அரசன், பழங்குடி இன மக்கள் உள்ளிட்ட கதாபாத்திரங்களும், கதையின் திருப்பங்களும், சண்டைக்காட்சிகளும் ஒரு நல்ல சினிமா ரசிகனையும் திருப்தி படுத்தத் தவறவில்லை….
இந்த பட்ஜெட்டில் இப்படி ஒரு அருமையான படத்தை எடுத்ததே ஒரு வெற்றி தான்.
காந்தாரா – ஈர்ப்பு அதிகம்! ( 9.834 மீ/செ2)