Categories
சினிமா

பைசன்- திரை விமர்சனம்

பைசன்- காளமாடன் யாரை முட்டுகிறார்?

பார்க்கலாமா?

கபடி விளையாட்டில் அர்ஜூனா விருது வென்ற திரு.மணத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி, தனது கற்பனையை சிறிது சேர்த்து, தென் மாவட்டத்தில் பிறந்து சாதியக் கொடுமைகளால் வஞ்சிக்கப்படும் பல இளைஞர்களின் கனவுகளையும் , எதிர்பார்ப்புகளையும் மையப்படுத்தி ஒரு கதையை வடிவமைத்திருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

1990 களில் தென் மாவட்டங்களில் இரண்டு சாதிகளுக்கு இடையிலான மிகப்பெரிய பகை கலவரம் அதனோடு இணைந்த மக்களின் வாழ்வோடு இணைத்து கபடி வீரர் மணத்தி கணேசன் அவர்களின் வாழ்க்கை வரலாறை கலந்து சினிமாவுக்கு ஏற்ற வடிவில், காதல், ஆக்‌ஷன் மசாலா ஆகியவற்றைக் கலந்து ஒரு திரைக்கதையை அமைத்திருக்கிறார்.

முட்டுவதென்றால் ஒரேடியாக மேல் சாதி ஆதிக்கம் என்று முட்டாமல், சாதி வெறி யார் பக்கம் இருந்தாலும் தவறு, சாதியின் பெயரைச் சொல்லி மனிதனை மட்டம் தட்ட நினைப்பவன் யாராக இருந்தாலும் தவறு தான் என்பதைத் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

கபடி என்ற ஒரு புள்ளியை மையப்படுத்தி கதை நகர்ந்தாலும் கூட, அவ்வப்போது சாதிக் கலவரங்கள், வன்முறைக்காட்சிகள் இரு பெரும் ஆளுமைகளுக்கு இடையிலான வெட்டுக் குத்து என்று படம் திசை மாறுகிறது.
அது சற்று அளவுக்கு அதிகமாகவே வந்து போய் நம்மை சோதிக்கிறது.
அந்த கதாபாத்திரங்களின் வன்முறை சம்பந்தப்பட்ட காட்சிகளை கொஞ்சம் கத்தரித்திருக்கலாம்.

அரசியல் மற்றும் சமத்துவம் பேசும் வசனங்கள் அருமை.

கதாபாத்திரங்களின் வடிவமைப்புப் பிரமாதம்.

படத்தில் வந்த கதாபாத்திரங்களை நாம் வெறுமனே நடிப்பு எனக் கடந்து விட முடியவில்லை.

துருவ் துவங்கி, படத்தின் ஓரிரு காட்சிகளில் வரும் கடைசி கதாபாத்திரம் வரை அனைவரும், பாத்திரங்களாகவே மாறி அற்புதப்படுத்தி உள்ளனர்.

உங்கள வேற வழியில்லாம் ஒரு நாள் அடிச்சதுக்கும், என்னைய தேடித் தேடி துரத்தி துரத்தி அடிக்கிறதுக்கும் வித்தியாசம் இருக்கு.

இங்க நான் கத்திய எதுக்கு எடுத்தேங்கிறதையே பல பேர் மறந்துட்டான்.
வேலிய ஒடைக்கிறது மட்டும் திமிர் இல்ல.
வேலியே போட முடியாத உயரத்துக்குப் போறதும் திமிர் தான்.

இங்க நீ பிறக்கிறதுக்கு முன்னாடி இருந்தே ஒரு பகை இருக்கு.

இப்படி மாரி செல்வராஜின் அக்மார்க் அரசியல் வசனங்கள் ஆங்காங்கே கைதட்டலைப் பெறுகிறது.

குடும்பக் காட்சிகள் எல்லாம் யதார்த்தம் என்றாலும், காதல் காட்சிகள் மட்டும் சற்று திணித்தல் போலவும், நமது பொறுமையை சோதிப்பதாகவும் இருந்தது.

படத்தின் விறுவிறுப்புக்கு முட்டுக்கட்டையாக அமைந்த காதல் காட்சிகளைத் தவிர்த்தே இருந்திருக்கலாம்.

கபடி விளையாட்டு வீரனாக உருமாறி நிற்கிறார் துருவ்.
அவரது நடிப்பு 100 சதவீதம் பொருந்தி இருக்கிறது.

ஒரு தாழ்ந்த சாதி திறமையாளனை சாதி பெயரைச் சொல்லி முட்டுக்கட்டை போட ஒரு சாதி வெறிக்கூட்டம் உண்டு..
அந்தத் திறமையாளனின் சொந்த சாதியில், ஏன் குடும்ப சொந்தத்தில் கூட அதுமாதிரி ஆட்களும் உண்டு, அதேபோல சாதி பார்க்காமல் கை பிடித்து மேலே ஏற்றி விட மற்ற சாதிக்காரர்களிலும் பல நல்லவர்கள் உண்டு என்று தெள்ளத் தெளிவான நடுநிலையாக இருந்து சாதிக்கு எதிரான சாட்டையை சுழற்றியிருக்கிறார் மாரி செல்வராஜ் அவர்கள்.

கதாநாயகனின் கபடி திறமையை வெளிக்கொணரும் , ஆசிரியரில் இருந்து , அவனை வாழ்வில் பெரிய ஆளாக்கி அழகு பார்க்கும் கந்தசாமி, பேப்பர் அணி பயிற்சியாளர் என அனைவரும் மாற்று சாதியினர், அதிலும் கந்தசாமி கதாபாத்திரத்தின் வடிவமைப்பு மாரி செல்வராஜ் அவர்களின் நடுநிலை மனநிலையை பிரதிபலிப்பதாக உள்ளது.

மேல் ஆதிக்க சாதி வெறியன் என்று காட்டாமல், அந்த கதாபாத்திரத்தின் உண்மையான முகத்தை வெளிப்படையாகக் காட்டியதற்காக வலுவான பாராட்டுகள்.

அதேபோல, சாதி வெறியை மனதில் சுமந்து கொண்டு திரியும் கதாபாத்திரத்தின் சொந்தக்காரன் கதாபாத்திரத்தை வடிவமைத்ததற்கும் பாராட்டுகள்.

அடிபட்டு மிதிபட்டு மேலே சென்றாலும் அங்கேயும், பணம் சாதி என்ற அரசியலால், திறமையானவர்கள் ஓரம் கட்டப்படுவதையும், அங்கேயும் சில ஆட்கள், திறமையானவர்கள் பக்கம் சாதகமாக நின்று போராடுவதையும் காட்சிபடுத்திய விதம் அழகு.

இந்தியா பங்காளதேஷ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை சுவாரஸ்யத்திற்காக இந்தியா பாகிஸ்தான் என்று மாற்றியது நாடகத்தன்மை.

படத்தின் இடையிடையே ஊர்க்காட்சிகளில் காட்டப்பட்ட கபடி விளையாட்டின் ஆக்ரோஷமும், சுவாரஸ்யமும் இறுதிக் காட்சியில் பாகிஸ்தான் அணியோடு காட்டப்பட்டபோது இல்லாத மாதிரியான உணர்வு.

ஒருவேளை தொடர்ச்சியாக பல காட்சிகளைப் பார்த்து சலித்துப் போயிருக்கலாம்.
ஆனாலும் கடைசி ரெய்டு காட்சி அழகு,கேப்டன் ரத்தினம், நான் இதயத்திலிருந்து பேசுறேன், மொழிபெயர்ப்பு செய்ய முடியாது என்று சொல்வது யதார்த்தமான மொழி அரசியல்.

ஒரு ஆட்டை வைத்து சாதிக்கலவரத்தைத் தூண்டவும் ஆட்கள் இருக்கிறார்கள், ஆளை வைத்துத் திறமையை வைத்து சாதி , அந்தஸ்தைக் கடந்து அவனை உயர்த்தி விடத்துடிக்கும் நல்லவர்களும் இருக்கிறார்கள், சொந்தக் குடும்பத்திலேயே நமது முயற்சிக்கு முட்டுக்கட்டை போடவும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று வெளிப்படையான நடுநிலையான கதையமைப்பு பாராட்டுதலுக்குரியது.

சினிமா மசாலாவைக் குறைத்திருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம்.

மொத்தத்தில் மனதை வென்று விட்டான் காளமாடன்.

நண்பர் திரு.ஏகன் அவர்களின் ஆடை வடிவமைப்புப் பிரத்யேகம்.
90 களின் நமது வாழ்க்கையை அப்படியே கண்முன் நிறுத்தியிருக்கிறது.
அதிலும் குறிப்பாக கதாபாத்திரங்களுக்கு ஏற்ப அந்தக்காலத்தில் யார் யார் என்ன என்ன யதார்த்தத்தில் ஆடை அணந்திருந்தார்கள் என்பதை உணர்ந்து உழைத்திருக்கிறார்.

அச்சிடப்பட்ட டீசர்ட் வகையாறக்களைக் பையாண்டதில் கூட நிதானம் காட்டியிருக்கிறார்.

பெயர் அச்சிடப்பட்ட டீசர்டுகளை இப்போது போல எல்லோராலும் அப்போது வாங்க இயலாது.

அதையும் கூட சற்று நிதானமாக யோசித்து சரியாக நேர்த்தியாகக் காட்டியிருப்பது பாராட்டுக்குரியது.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.