Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள்

சிந்திக்க வேண்டிய கட்டாயம்!

பட்டாசு.
தீபாவளிக்கும் கார்த்திகை தீபத்திற்கும், திருவிழாக்களிக்கும் இன்ன பிற சாவு போன்ற சடங்குகளுக்கும் பட்டாசு என்பது ஆடம்பரமாகவோ இன்றியமையாத ஒன்றாகவோ அல்லது அடிப்படைத் தேவையாகவோ என்று ஏதோ ஒரு கணக்கில் கட்டாயம் தேவை என்று வழக்கமாகிப்போனது.

பட்டாசு வெடிப்பதில் நமக்கு பெரிய எதிர்ப்பு இல்லை , பட்டாசு தொழிலை நம்பியே வாழும் சிவகாசி என்ற ஊர் மக்களுக்காக நாமும் பட்டாசு வெடிப்பதை ஆதரித்தே பலமுறை எழுதியிருக்கிறோம்.

ஆனால் இந்த முறை ஒரு சிறிய மனக்குழப்பம்.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் விஷம் என்ற பழமொழியை இந்த தீபாவளி நமக்கு நினைவுபடுத்தி விட்டுச்சென்றது போன்ற உணர்வு.

உணர்வு மட்டுமல்ல , அளவுக்கு மீறித்தான் இருந்தது.
அதனால் ஏற்பட்ட பாதிப்புகளையும் நம் கண்ணால் காண முடிந்தது.உடல் உபாதைகளால் உணர முடிந்தது.

தீபாவளி தினத்தன்று இரவு சாலைகளில் எதிரே வரும் வண்டிகள் தெரியாத அளவிற்கு புகைமூட்டம்.
பல விமானங்கள் ஓடுதளம் தெரியாமல் தரையிறக்கப்படாமலும், கிளம்பாமல் தாமதமானதும் நிகழ்ந்திருக்கிறது.

காற்றின் தரம் தினசரி சென்னை மாநகரின் வழக்கமான தரத்தைக் காட்டிலும் பல மடங்கு குறைந்திருக்கிறது.

காற்றின் தரக்குறியீடு மிக ஆபத்தான நிலையில் தள்ளப் பட்டிருக்கிறது.

சென்னைக்கு இந்த நிலை என்றால் டெல்லி இன்னும் மோசம்.

பல ஆண்டுகளாகப் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்த டெல்லி மாநகரில் இந்த ஆண்டு அந்த விதி தளர்த்தப்பட்டிருக்கிறது

அது தவறு என்று உணர்த்தும் ரீதியில் பல சம்பவங்கள் நிறைவேறியிருக்கிறது.

பல முதியவர்கள், நுரையீரல் பிரச்சினை இருந்தவர்கள் உட்பட பலர் மூச்சுத்திணறி அவதிப்பட்டிருக்கிறார்கள்.

ஏற்கனவே மோசமாக இருந்த காற்று மாசுக் குறியீட்டு எண், மிக மோசம் என்ற நிலைக்கு மாறி இருக்கிறது.

சரி இதற்கு நாம் என்ன செய்ய?

குழந்தைகள் அந்த ஒரு நாளில் தானே மகிழ்ச்சியாகப் பட்டாசு வெடிக்கிறார்கள்?
ஓரிரு நாட்களில் இந்தப்பிரச்சினைகள் சரியாகி விடுகிறதே? என்ற கேள்வி எழலாம்.

பட்டாசு வெடிக்கவே வேண்டாம் என்பதற்காக இதைப் பேசவில்லை.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல, தேவையறிந்து அளவாகப் பட்டாசு வாங்குவது ஒரு முக்கியமான விஷயம்.

இரண்டாவது தரமான நல்ல பட்டாசுகளை வாங்குவது அவசியம்.
நமக்கறிந்த சில பெயர் பெற்ற தரமான பட்டாசுகளை வாங்குவது நமக்கும் பாதுகாப்பு, சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பு.

தடைசெய்யப்பட்ட வேதிப்பொருட்களைத் பட்டாசு ஆலைகள் தவிர்க்க வேண்டும்.

விபத்து ஏற்படாத வண்ணம் பாதுகாப்பான முறையில் வியாபாரம் செய்ய வேண்டும்.

ஒரே நாளில் மொத்தப் பட்டாசையும் ஒட்டுமொத்த மக்களும் வெடித்துத் தள்ளாமல் இரண்டு முதல் நான்கு நாட்களுக்குப் பிரித்து வெடிக்கலாம்.

இது மகிழ்ச்சிக்கு எதிரான பதிவல்ல.
அடுத்தவர்களை பாதிக்காத மகிழ்ச்சி தான் உண்மையானது.

சுற்றுச்சூழலை சீரழிக்கும் மகிழ்ச்சியை நாம் அனுபவிப்பது அவசியம் தான் என்றாலும் பரிசீலிக்க வேண்டியதும் அவசியம்.

வருமுன் காப்போம்.
ஆக்ஸிஜன் குப்பிகளை கையில் தூக்கிக் கொண்டு அலையும் காலத்தை உருவாக்க வேண்டாமே!

வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும்

என்ற வள்ளுவனின் வாக்கை நினைவில் கொள்ள வேண்டிய நேரம்.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.