ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப் படும்.
இந்தத் திருக்குறளை நாம் அடிக்கடி எங்காவது வாசித்திருந்தாலும் இதன் அர்த்தத்தை உள்வாங்கிக் கொள்வதில்லை.
ஒரு சின்ன கதை .
தெரியாத இரு நபர்கள் சந்திக்கிறார்கள்.
இடம்: கோவில்.
நல்ல கூட்டமான கோவில்.
அந்த இரு நபர்களும் குடும்பத்துடன் தான் கோவிலுக்கு வந்திருக்கிறார்கள்.
சிறிது நேரம் காத்திருந்த மக்கள் சாமி அலங்காரம் முடிந்தவுடனே முண்டியத்துக்கொண்டு நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு சாமியைப் பார்க்கச் சென்றனர்.
ஏங்க க்யூல வரக்கூடாதா , குழந்தைங்களெல்லாம் இருக்குல்ல என்று சொல்லிக்கொண்டே ஒருவர் முண்டியடித்துக் கொண்டு வரிசையை மீறிக்கொண்டிருந்தார்.
கிட்டத்தட்ட எல்லோருமே அப்படித்தான் , அந்த ஒரு நபரைத் தவிர.
அவரைப் பின்தொடர்ந்து அவரது குடும்பமும் மிக அமைதியாக வரிசையில் நின்று கடவுளை தரிசித்தார்கள்
மற்றவர்கள் யாரும் , கடவுளின் போதனையே ஒழுக்கம் தான். மதங்களின் வலியுறுத்துவது அன்பு தான்.
மனிதன் ஒழுக்கமாக மனிதனாக வாழ்வதைத்தான் மதங்கள் போதிக்கிறது என்பதை மறந்து , கோவில் கர்ப்பகிரகத்தில் இருக்கும் சிலைக்கு செய்யப்படும் அலங்காரத்தை வேடிக்கை பார்ப்பதையும், ஐயர் கொடுக்கும் விபூதியை நெற்றியில் இட்டுக் கொள்வதையுமே இலக்காக வைத்துக் கொண்டு ஒழுக்கம் கெட்டு மக்கள் முண்டியத்துக் கொண்டிருந்தார்கள்.
இந்த அமைதியான முறையில் ஒழுக்கமாக இருந்த நபரையும், அவரது குடும்பத்தையும் இன்னொரு நபர் கவனித்திருந்தார்.
சாமி கும்பிட மட்டுமல்ல, பிரசாதம் தரும் இடத்திலும் அதே மாதிரியான களேபரம் தான்.
அந்தக் கோவில் ஓரளவு சிறிய கோவில் என்பதால் கம்புகள் கட்டி வரிசைப்படுத்துதல் எல்லாம் இல்லை..
ஆறறிவு படைத்த மனிதனையும் ஐந்தறிவு படைத்த மிருகங்களை குச்சி வைத்து மிரட்டுவது போல, கம்புகள் கட்டிதான் ஒழுக்கம் எனும் பண்பை வரவைக்க வேண்டியிருக்கிறது அல்லவா?
இந்த முறையும் இந்த நபர் அந்த நபரையும் அவரது குடும்பத்தையும் கவனித்திருந்தார்.
அதே அமைதி, அதே ஒழுக்கம்.
எல்லாம் முடிந்து வெளியே வந்து பேருந்தில் ஏற நின்றார்கள்.
ஒரு குறிப்பிட்ட பேருந்து வந்தபோது அதே முண்டியடிப்பு.
ஏதோ வேண்டா வெறுப்பாக கோவிலுக்கு வந்தது போலவும், உடனடியாக வீட்டுக்குத் திரும்பிப் போய்விட வேண்டும் என்பது போலவும் அனைத்து மக்களிடையேயும் ஒரு அவசரம்..
இவ்வளவு அவசரம் இருப்பவர்கள் ஏன் கோவிலுக்கு வர வேண்டும்?
வீட்டிலேயே சௌகரியாமாக இருந்திருக்கலாமே என்று கேள்வி எழும் அளவிற்கு எல்லோரிடமுமே ஒரு அவசரம்.
அந்த நபரும் அவரது குடும்பமும் அந்தக் களேபரத்தில் பங்குகொள்ளவில்லை.
ஒதுங்கி நின்றார்கள்
அதை கவனித்த இந்த நபரும் அதே பாணியைப் பின்பற்றினார்.
அவர்களின் பொறுமைக்குப் பரிசாக அடுத்து வந்த பேருந்தில் அவர்களுக்கு நிம்மதியாக அமரந்து செல்ல இடம் கிடைத்தது..
இப்போது இந்த நபருக்கு மிகவும் ஆர்வம்.
அவர் எப்படி இவ்வளவு பொறுமையாக அமைதியாக இருக்கிறார் என்று.
அவரிடம் சென்று தயங்காமல் கேட்டு விட்டார்..எப்படிங்க இவ்வளவு பொறுமையா இருக்கீங்க ? நீங்க என்ன பண்றீங்க என்று.
அதற்கு அவர் சொன்ன பதிலைக் கண்டு திகைத்து விட்டார்
நான் ஒரு ஆயுள் தண்டனைக் கைதி.
கோபத்தில் ஒரு கொலை செய்த காரணத்தால் ஆயுள் சிறை தண்டனை கிடைத்தது.
இப்போது பரோலில் எனது குடும்பத்தோடு நேரம் செலவழிப்பதற்காக வந்திருக்கிறேன்.
நான் பொறுமையாகவும் அமைதியாகவும் இருக்கக் காரணம் இதுதான்.
நான் மீண்டும் சிறை சென்று விட்டால், இந்தக் கோவில், பேருந்து இந்த சூழல்களை எல்லாம் அனுபவிக்க இயலாது.
அதனால் அதைப் பொறுமையாக ரசித்து அனுபவிக்கிறேன்.
எனது குடும்பத்தினரும் என்னோடு நேரம் செலவழிப்பது இந்த நாட்களில் தான்.
அதனால் அவர்களும் நான் போன போக்கில் என்னோடே பயணிக்கிறார்கள்.
ஏற்கனவே ஒரு முறை பதட்டப்பட்டு ஒழுக்கம் கெட்டதாடல் தான் எனது வாழ்க்கை இப்போது கம்பிகளுக்குப் பின்னே சீரழிகிறது.
இன்னொரு முறை நான் அந்தத் தவறை செய்ய மாட்டேன்.
இந்தச்சூழல் எல்லாம் அனுபவிக்க எனக்கு அமைந்த வாய்ப்பை அமைதியாக ரசித்துக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லிக் கொண்டே பேருந்தில் அருகிலிருந்த அழுத குழந்தையை சமாதானம் செய்ய தயாராகி விட்டார்.
இவருக்கு அதைக் கேட்டதும் ஆணி அடித்தாற் போல இருந்தது.
நாமும் நமது ஆன்மாவும் இந்த பூமிக்கு பரோலில் வந்தவர்கள் தானே?
இருக்கும் சிறிது காலத்தை அமைதியாக ஒழுக்கமாக ரசித்து வாழலாமே?
எத்தனை ஓட்டம்?
எத்தனை அவசரம்?
எத்தனை போட்டி பொறாமை?
வாழ்வை அமைதியாக ரசித்து வாழலாமே?
ஆறறிவு உள்ள நமக்கு ஒழுக்கத்தை ஏற்படுத்த அங்குசம் எதற்கு?
நமக்குள்ளேயே அது வரவேண்டாமா?
எப்போது உருவாகும் அது மாதிரி சூழல்?


