Categories
தகவல் தற்கால நிகழ்வுகள் விளையாட்டு

சாதித்த தங்க மங்கைகள்!

திரும்பிப் பார்க்க வைத்தது மட்டுமல்ல!
தூக்கிக் கொண்டாடவும் வைத்திருக்கும் இந்திய அணி.

சிறிது நட்களுக்கு முன்பு கூட இது இந்தியப் பெண்கள் கிரிக்கெட் அணி என்று தான் நம்மால் குறிப்பிடப்பட்டது.
ஏனென்றால் அவ்வளவு பிரபலமாகவில்லை, நம் மனதில் அந்த அளவிற்குப் பதியவில்லை.

ஆனால் இன்று ஆண்களுக்குப் பெண்கள் நிகரானவர்கள், ஏன் அவர்களை விடவும் ஒரு படி மேலே சென்று சாதித்துக் காட்டுவோம் என்று 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி உலகக் கோப்பையை தனதாக்கிக் கொண்டிருக்கிறது இந்தத் தங்கத் தாரகைகளின் கூட்டம்.

இனி கோலிக்கு சேரும் கூட்டம், தீப்தி சர்மாவுக்கும், ரோஹித்தைப் பாராட்டும் வாய்கள் சபாலி வர்மாவையும் , ஸ்மிரிதி மந்தானாவையும், ஹர்மன்ப்ரீத் கவுரையும் பாராட்டும் அல்லவா?

ஒரு நிலைக்கு வளர்ந்து ஆளாகி பெயரைத் தக்க வைத்துக் கொள்வது என்பது சாதாரண விஷயமல்ல.

அந்த சாதனையைச் செய்து காட்டியிருக்கிறார்கள் நம் வீராங்கனைகள்.
ஆனால் இன்னும் கூட இவர்கள் போக வேண்டிய பாதை நீளம்.

ஏன் என்று யோசித்துப் பார்க்கிறீர்களா?

2011 ஆம் ஆண்டு நினைவிருக்கிறதா?

அன்றைய நாளில் இந்திய அணி உலகக் கோப்பையை வென்றெடுத்த போது எத்தனை கொண்டாட்டங்களும் ஆரவாரமும் இருந்தது? அது நமக்கெல்லாம் நினைவிருக்கிறது தானே!

ஆனால் நேற்றைய தினத்தை கணக்கில் எடுத்துக் கொண்டால் அந்தக் கொண்டாட்டத்திற்கு ஈடான கொண்டாட்டங்கள் நிகழவில்லை.

காரணம் அதே தான்.
இவர்கள் ஆட்டமும், இவர்களின் பெயர்களும் நமக்கு சிறு வயதிலிருந்து பரிட்சயமில்லை.

ஐந்தில் வளையாதது , ஐம்பதில் வளையாது என்பதைப்போல இன்று வரையிலும் ஆண்கள் அணியின் ஆட்டத்தை ரசித்துப்பார்க்கும் என் போன்ற பல ரசிகர்களும் , இந்தப்பெண்கள் அணியின் ஆட்டத்தை அலைபேசியில் வெறும் ஓட்டப்பட்டியலாகப் பார்த்து வெற்றி பெற்றதும் சிறிய புன்னகையுடன் அமைதியாகக் கடந்து செல்லும் சூழல் தான் இருக்கிறது.

ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக, நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று பொட்டில் ஆணி அடித்தாற்போல் சாதித்துக் காட்டியிருக்கிறார்கள் வெற்றி மங்கைகள்.

இனி காலம் மாறும். இந்திய அணி எதுவாயினும் பாகுபாடு இல்லாமல் ரசிகர் கூட்டம் ஆதரவளிக்கும், வெற்றியைக் கொண்டாடும் என்று நம்பிக்கை கொள்வோம்

அதற்கான முதல் அடியை , பேரிடியாக எடுத்து வைத்திருக்கிறார்கள்

வாழ்த்துகள் வீரங்கனைகளே!

இன்னும் நிறைய சாதிக்க விரும்புகிறோம், மனதார வாழ்த்துகிறோம்.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.