வருமுன் காப்பதே சிறந்த அறிவு என்பது நோய்க்கு மட்டுமல்ல.ஆபத்தான் சூழ்நிலைகளுக்கும் தான்.
சமீபத்தில் பரபரப்பாகப் பேசப்படும் கோவை மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டியவர்கள் தான், அவர்கள் சுட்டுப் பிடிக்கப்பட்டது பாராட்டுக்குரிய செய்தி தான்.
அந்தப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர்கள் குற்றவாளிகள்.
அவர்களுக்கு இழப்பதற்கு என்று ஏதுமில்லை.
நெஞ்சில் சிறிதும் ஈரமில்லை.
தன் ஈன சுகத்திற்காக ஒரு ஆளை அடித்துத் துன்புறுத்திக் காயப்படுத்தி அரிவாளால் வெட்டி, ஒரு பெண்ணை கத்தி முனையில் பலவந்தப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்த ஈனப்பிறவிகளுக்கு இந்தத் துப்பாக்கிச் சூடெல்லாம் எம்மாத்திரம்.
இப்போது இழப்பு அந்தப் பெண்ணுக்கும் அந்தப் பெண்ணின் குடும்பத்தாருக்கும் தானே?
பொதுவெளியில் வெளிப்படையாக அந்தப் பெண்ணின் தகவல் தெரியாவிட்டாலும் கூட, அந்தப் மெண்ணோடு படித்தவர்கள், பழகியவர்கள், சொந்தக்காரன், என்று அவள் பழகும் அந்த குறிப்பிட்ட வட்டாரத்தில் உள்ள அனைவருக்குமே அந்த விஷயம் தெரிந்து விடுவது மறுக்க முடியாத உண்மை தானே?
இனி வாழ்நாள் முழுக்க அந்தப் பெண் தனது வட்டாரத்தில் உள்ள ஆட்களை சந்திக்கும் போதும் பழகும் போதும் இந்த சம்பவத்தை மனதில் நினைத்துக் கொண்டு ஒரு அசௌகர்ய மனநிலையோடு தானே பழக முடியும்?
இதன் ஆரம்பப் புள்ளி என்ன என்று பார்த்தால், ஆபத்தை உணராமல் அந்த இருவரும் செய்த ஒரு தவறு தான்.
இருவரும் ஏதோ ஒரு விதத்தில் பழகி நட்பாகியிருக்கிறார்கள்
அவரை நம்பி இந்தப் பெண் அவரோடு வெளியே பயணித்திருக்கிறார்.
இப்படி பழகி ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பொள்ளாச்சியில் நிகழ்ந்தது நமக்கு இன்னும் மறக்கவில்லை தானே?
அப்படியிருக்க தெரியாத நபரை நம்பி அந்தப்பெண் வெளியே சென்றிருக்கிறார்?
அவர் நன்கு பழகிவிட்டார் அவர் நல்லவர் என்றே வைத்துக் கொள்ளலாம்.
டெல்லியில் நிர்பயாவுக்கு நிகழ்ந்த கொடுமை ஏன் நினைவில் வராமல் போனது?
இரவில் ஏதோ ஒரு பேருந்து நிறுத்தத்தில் நின்று வந்த பேருந்தில் நம்பி ஏறிய பெண்ணையே, கூட இருந்த ஆண் நண்பரைத் தாக்கிவிட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூரமான குற்றவாளிகளும், கயவர்களும் நிறைந்த இந்த உலகில் எதை நம்பி ஆள் அரவரமற்ற இடத்திற்குச் சென்றார்களோ?
இதில் அந்த கயவர்களை , காமுகர்களை நான் எந்தவிதத்திலும் நியாயப்படுத்தவில்ல.ஆனால் நாம் ஏன் ஆபத்தைத் தேடிச் சென்று மாட்டிக்கொள்ள வேண்டும்?
நண்பர்களோ , காதலர்களோ அவர்கள் அமர்ந்து உரையாட வேறு இடமே இல்லையா ஊருக்குள்ள?
அதுவும் கோவை மாதிரியான ஒரு மாநகரில் அக்கா பார்க்கப் போகிறாளா? அண்ணன் பார்க்கப் போகிறாரா?
பேசுபவர்கள் பார்க்கிலோ , அல்லது வேறேதேனும் பொது இடத்திலோ அமர்ந்து பேசக்கூடாதா?
இனி அந்த கயவர்களுக்கு என்னதான் கடுங்காவல் தண்டனை ஆயுள் தண்டனை என்று கிடைத்தாலும் இந்தப் பெண்ணுக்கு நிகழ்ந்த அநீதி மறைந்து விடுமா?
இந்த மாதிரி தப்பை இனி ஒருவனும் செய்யக்கூடாது என்ற ரீதியில் இங்கே சட்டம் , அரபு நாடுகளைப்போல கடுமயாக உள்ளதா?
நாமும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
அரசாங்கமும் காவல்துறையும் அந்த குற்றவாளியைக் கண்டுபிடிக்கத்தான் செய்கிறது.
ஆனாலும் இந்தக்
கற்பழிப்பு ஓய்ந்த பாடில்லை.
இந்தக் குற்றத்தில் பிடிபட்டவர்கள் ஏற்கனவே கொலை கொள்ளை உள்ளிட்ட சம்பவங்களில் தொடர்பு உடையவர்கள் , அவர்களின் மீது வழக்குகள் உள்ளன எனில் அவர்கள் இப்படி வெளியே உலாத்துவது எந்த விதத்தில் நியாயம்?
மேலும் இப்படி தைரியமாக ஒரு குற்றத்தைச் செய்வது எதன் அடிப்படையில்?
மாட்டிக் கொண்டாலும் என்ன செய்து விடப்போகிறார்கள் என்ற கோணத்தில் தானே?
பிடிக்க வந்த கவலர்களைத் தாக்கிவிட்டுத் தப்ப முயல்கிறார்கள் எனில் அவர்களுக்கு எந்த அளவிற்கு தைரியம் இருக்கிறது பாருங்கள்.
சாதாரண குடிமக்கள், இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் இல்லாமல் பின்னாடி யாரையாவது அமரத்திச் சென்றால் , தெருமுனையில் போலீஸ் பிடித்து விடுமோ என்ற அச்சத்திலே போகும்போது இவர்களைப் போன்ற குற்றவாளகளுக்கு இத்தகைய தைரியம் என்பது தண்டனைகள் கடுமையாக இல்லாத காரணத்தினால் தான் வருகிறது.
ஏதாவது மாற்றமில்லாமல் இது மாறப்போவதில்லை.
நல்ல துவக்கம் நம்மிலிருந்தே துவங்கட்டும்.
நாம் முதலில் நம்மைப் பாதுகாத்துக் கொள்வோம்.




