பொதுவாக அந்தந்த வாரங்களில் படங்களைப் பார்த்து விட்டு அதைப்பற்றி எழுதிவிடுவது தான் நமது வழக்கம்.
ஆனால் இந்த முறை போன வாரம் வெளியான படத்தைப் பற்றி எழுதுகிறோம்.
இந்தப்படத்தைப் பற்றி பல விமர்சனங்களும் வந்து விட்டன.
ஆனாலும் நாம் எழுதக் காரணம், அந்த விமர்சனங்களில் இருந்து சிறிய மாறுபாடு , கருத்து வேறுபாடு இருக்கின்ற காரணத்தினால் தான்.
விஷ்ணு விஷால் மற்றும் செல்வராகனவனின் நடிப்பில் வெளியான ஆரியன் (AARYAN) திரைப்படம் பற்றிய பதிவு தான் இது.
பெரும்பாலான விமர்சனங்களில் இந்தப்படம் நல்லாதான் இருக்கு, ஆனா ராட்சசன் மாதிரி இல்லை என்ற தொடர்ச்சியான கருத்துகளைப் பார்க்க இயன்றது.
இந்தப்படம் விஷ்ணு விஷால் காவல் அதிகாரியாக நடித்த காரணத்தாலோ அல்லது தொடர் கொலை பற்றிய படம் என்பதாலோ இது ராட்சசன் மாதிரி இருக்க வேண்டும் என்பது ஏற்புடையதல்ல.
இது மசாலா தோசையை மட்டன் பிரியாணியோடு ஒப்பிடுவதற்குச் சமமான ஒன்று .
ஆனால் ஒரு விஷயம் , இந்த மசாலா தோசையை எப்படி செய்தார்கள் என்பதில் தான் இருக்கிறது, இதன் முடிவு எப்படி இருக்கிறது என்று.
அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் என்ற ரீதியில் இல்லை என்றாலும் பேஷ் பேஷ் என்ற ரீதியில் எல்லாம் இருந்தது என்றும் சொல்லிவிட முடியாது.
தொடர் கொலை பற்றிய படம் தான்.
ஆனால் வழக்கத்திலிருந்து ஒரு சிறு மாறுதல்.
கொலை செய்யும் கொலையாளி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு முதலில் இறந்த பிறகு ஐந்து பேரை வரிசையாக ஒவ்வொரு நாளுக்கு ஒருவர் என்ற ரீதியில் , பெயரைச் சொல்லி சொல்லி கொலை செய்கிறார் என்பதே படத்தின் கதை.
அதாவது இந்தக் கொலைகள் எல்லாம் முன்பே திட்டமிடப்பட்டு அந்த திட்டத்தின் படி நிகழ்வதான கதை.
வித்தியாசமான கதை என்றாலும் இரண்டு கொலைகளுக்கு அப்புறம், நமக்கு அந்த சுவாரஸ்யம் பெரிதாகக் கடத்தப்படவில்லை என்றே தோன்றுகிறது.
பல இடங்களில் லாஜிக் இல்லை.
2024 ல் நிகழும் கதையில் காயின் பூத், வீட்டில் லேண்ட்லைன் போன் என பழமை.
ஒரு ரிட்டயர்டு மிலிட்டரி ஆபிசர் தங்க இடமில்லாமல் பணத்திற்கு வழியில்லாமல் காவலாளி வேலை பார்ப்பதான காட்சியமைப்புகள் அபத்தம்.
அதில்லாமல் 20 வருடத்திற்கு முன்பு பொறியியல் படிப்பு, அதிலும் பாதியிலேயே விட்டவர், இப்போதைய காலகட்டத்தில், சிக்னலில் இருக்கும் ஒளித்திரை, டிவி சேனல் எல்லாம் ஹேக் செய்வது என்பது நம்ப முடியாத ஒன்று.
மேலும் இவர் தேர்ந்தெடுத்த ஆட்களை பின்தொடர்ந்து நோட்டமிட்டது சரி, ஆனால் அவர்களின் சொந்த உபகரணங்களை எல்லாம் இவர் எப்படி கையாண்டார், என்பது புதிர்.அதற்கு வாய்ப்பும் மிகக் குறைவு.
அழகு சாதனப் பெட்டி, மெழுகுவர்த்தி போன்றவற்றில் கொலைக்கான காரணத்தை வைத்தது எல்லாம் சாத்தியமில்லாத ஒன்று.
இப்படி லாஜிக் ஓட்டைகள் இருப்பதாலோ என்னவோ தான் இந்தப்படம் பெரிய தாக்கத்தை உண்டு செய்யவில்லை.
காலையில் எழுந்து 8 மணிக்கு அலுவலகம் செல்ல திட்டமிட்டாலே ஒரு நாள் 8.30 ஆகிறது, ஒரு நாள் 9 ஆகிறது.
இதில் இறந்த பிறகு தான் போட்ட திட்டம் அப்படியே நடக்கிறது என்பதெல்லாம் சாத்தியமில்லாத ஒன்று.
ஸ்டுடியோ கதவுகளை நான் மூடிவிட்டேன், அதைத் திறக்க முடியாது என்பதில் துவங்கி , பல இடங்களில் லாஜிக் ஓட்டைகள்.
அதிலும் அந்தப்பூங்கா இருக்கையின் கீழே இரண்டு வாரமாக ஒரு கைப்பேசி இருக்கிறது, அதில் வீடியோ பதிவாகி , இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகும் விதமாக அது செயல்பட்டுக் கொண்டு இருக்கிறது என்பதால்லாம், எம்ஜிஆர் சமாதியில் காது வைத்து அவரது வாட்ச் சவுண்டைக் கேட்கும் கதை.
இரண்டு வாரமாக ஒரு அலைபேசி எப்படி மின்னூட்டமின்றி செயல்பாட்டில் இருந்தது?
அடுத்து இறுதிக் காட்சியில் பயங்கரமான தொழில்நுட்பம்.
சரசரவென கண்ணாடிக் கதவுகள் அடைத்துக் கொண்ட உடனே இதில் 3 பக்கத்திலிருந்தும் தண்ணீர் பீய்ச்சி அடிக்கிறது. மேலும் அந்த சுரங்கப் பாதைக்கு அப்படி ஒரு மின் இணைப்புகளும் வழி்நெடுக விளக்குகளும்.
எப்படி பாஸ் இவ்வளவு கனெக்ஸன் குடுத்தாரு.
இருக்கிற 3 பேஸ்ல் பாதி்நேரம் 2 பேஸ் கரண்டு தான் வருது.
மிக்சி, ,கிரைண்டர் ஒழுங்கா ஓட மாட்டுது.அப்படியிருக்க அவர் சுரங்கப்பாதை கட்டி அதுக்கு வழிநெடுக வெளிச்சம், உள்ள வெளிச்சம், காலை வச்ச உடனே அடைத்துக் கொள்ளும் கண்ணாடி அறை, அதில் தண்ணீர்..
யப்பா டேய்.
போதும்டா என்கிற ரீதியில் ஒரு கட்டத்தில் லாஜிக் ஓட்டைகள் அதிகம்..
ஆனால் ஒரு தடவை பார்க்கலாம்.



