Categories
கருத்து தற்கால நிகழ்வுகள்

என்று ஓயுமோ இந்தப் போராட்டம்?

உலகின் மோசமான உயிரினம் மனித இனமே என்பது அன்றாடம் நிரூபிக்கப்படுகிறது.

ஐந்தறிவு கூட மிருகங்கள் கூட தேவையின்றி இன்னொரு மிருகத்தைத் துன்புறுத்துவது கிடையாது .
ஆனால் இந்த மனித இனம் மட்டும் தான் சாதி , மதம், இனம், மொழி, நாடு , கலாச்சாரம், பண்பாடு என்று பல்வேறு காரணங்களைக் காட்டி சக மனிதனைத் துன்புறுத்துவதும், ஈவு இரக்கமின்றி வயது வித்தியாசம் பார்க்காமல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கொன்று குவிப்பதும் வாடிக்கையாக உள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு தலைநகர் தில்லியில் நடந்த கார் வெடிப்பு தீவிரவாதத் தாக்குதல் காரணமாகவே நிகழ்ந்திருக்கிறது என்பது உறுதியாகியிருக்கிறது.

அதிலும் குறிப்பாக அந்த வாகனத்தை இயக்கியவர் ஒரு மருத்துவர் என்பது எவ்வளவு கசப்பான செய்தி?

மேலும் ஒரு மருத்துவ அணியே இதில் செயல்பட்டிருக்கிறது பல்வேறு மருத்துவர்களும் இந்த சம்பவத்தின் பிண்ணனி என்றும் பல செய்திகள் வருகின்றன.

ஒரு உயிரைக்காப்பது எப்படி என்று ஐந்து வருடங்கள் படித்து, பல வருடங்கள் அந்தத் தொழிலை செய்த ஒருவருக்கு , சில உயிர்களைக் கொல்வதற்காக, ரசாயனமும் வெடி மருந்தும் தயாரித்து திட்டம் தீட்ட முடிகிறது எனில் அவன் மனதில் எவ்வளவு வன்மம் விதைக்கப்பட்டிருக்கும்?

ஒரு சராசரி படிப்பில்லாத, சமுதாயத்தில் சீரழிந்த நிலையில் வாழ வழியில்லாத ஒருவன் வாழ்வில் நிலை தவறிப் போவது என்பது நிகழக்கூடியது.
ஆனால் இந்த நாட்டில் நன்றாக வாழ்ந்து, மருத்துவம் படித்து சமுதாயத்தில் ஒரு நல்ல நிலையில் வாழக்கூடிய, மாதம் சில லட்சங்கள் சம்பாதிக்கக் கூடிய மருத்துவருக்கு எப்படி ஏன் இந்த வன்மம்?

அப்படி என்ன மதத்தின் பெயரால் மக்களின் மீது வன்மம்?

எப்படி இத்தனை அழகான வாழ்வை , அந்தஸ்தை அளித்த தாய் திருநாட்டிற்கு எதிராக இந்த வன்மம் வளர்கிறது?

சரி எல்லாருமே ஒரு மதத்தைப் பின்பற்றி ஒரு கடவுளை வணங்கினால் பிரச்சினை தீர்ந்து விடுமா என்றால் அதுவும் நிச்சயமாக இல்லை.

மதம் செய்யாத பிரிவினையை அப்போது இனமோ, சாதியோ செய்யும் ,இஸ்ரேல் பாலஸ்தீனம் போல.

படித்தால் திருந்துவார்கள் என்றால் இவர்களைப் போன்ற சிலர் படிப்பதே நன்றாகத் திட்டமிட்டு தீவிரவாதம் செய்வதற்கு என்ற நிலை இருக்கும் போது சாதாரண மனிதன் என்னதான் செய்வது?

பாவம் அந்தப்பக்கமாக வேலைக்காகவோ, வாழ்க்கையைத் தேடியோ, மகிழ்ச்சிக்காவோ, மருத்துவத் தேவைக்காகவோ இப்படி ஏதாவது ஒரு சாதாரண நாளைப் போல பயணம் செய்த அப்பாவிகள் குண்டு வெடித்து உடல் சிதறி இறந்ததை அறிந்த அவர்களின் குடும்பத்தின் நிலை என்ன?

இதை எந்தக் கடவுள் மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்?

இன்று குண்டு வெடித்து இத்தனை சாவு என்று எண்ணிக்கையைக் கொண்டாடும் அந்த மனநலம் பாதிக்கப்பட்ட தீவிரவாதிகளை கடவுள் தான் திருத்த வேண்டும்.

மதத்தையும் கடவுளையும் ஒழுங்காகப் புரிந்து கொண்டவன் இன்னொரு உயிருக்கு தீங்கு நினைக்க மாட்டான்.
இவர்கள் மூளை சலவை செய்யப்பட்ட அரக்கர்கள்? எப்போது ஓயுமோ இந்தப் போராட்டம்?

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.