இன்று சமூக வலைதளத்தில் ஒரு பதிவைக் காண நேர்ந்தது.
சபரி மலைக்கு வரும் மிக அதிகப்படியான கூட்டத்தைப் பற்றி விமர்சனம் செய்து ஒரு பதிவு.
ஒழுக்கமான பக்தியோடு , 48 நாள் ஔ அதாவது ஒரு மண்டலம் நேர்த்தியாக விரதமிருந்து, சபரிமலைக்கு பக்திமார்க்கமாக மட்டுமே பக்தர்கள் சென்ற போது இவ்வளவு கூட்டமோ , ஆர்ப்பாட்டமோ இல்லை.
இப்போது சும்மா பத்து நாளைக்கு விரதம், ஒரு வார விரதம், சபரிமலை பார்த்துவிட்டு அப்படியே குற்றாலத்தில் இன்பக் குளியல் என்று சபரிமலை டூர் பேக்கேஜ் போல இது மாறிய பிறகு தான் இவ்வளவு கூட்டமும் , நெரிசலும் ஆர்ப்பாட்டங்களும் என்ற விமர்சனம்.
இந்தப்பதிவை ஆதரித்து பல பேரும் எதிர்த்து சில பேரும் விமர்சனம் செய்திருந்தார்கள்.
இது முற்றிலும் ஏற்புடையதல்ல என்றும் நாம் கடந்து விட முடியாது.
சில காலத்திற்கு முன்பு வரை ஒரு கட்டு்ப்பாடுடன், 48 நாள் தவறாமல் விரதமிருந்து மட்டுமே சபரிமலைக்கு பக்தர்கள் சென்ற காலம் மாறி இப்போது விருப்பத்திற்கு , பத்து , ஐந்து என விரத நாட்களை சுருக்கிக் கொண்டு ஏன் எதற்கு என்று தெரியாமல் நானும் மாலை போட்டேன், நானும் ஐயப்பன் பாடலை கும்பலோடு சேர்ந்து பாடினேன், நானும் சபரிமலைக்குப் போகிறேன் என்று பல பேர் இருப்பது நிதர்சனம் தான்.
பக்திக்கு முதல் அடிப்படை ஒழுக்கம் தான்.
அந்த ஒழுக்கமில்லாமல் விரதமென்பது மாமிசம் தவிர்ப்பது, வாழை இலையில் சாப்பிடுவது என்று நினைத்துக் கொண்டு, விரதம் விட்டாச்சு ஒரு தம்மப் போடுவோம் என்று குப்பு குப்பு என்று புகை விடும் பலரையும் காண முடியும்.
சாமிகள் ரெண்டு பேரும் பஜனைக்கு நடுவுல எங்க போறீங்க என்று கேட்க, அந்த சாமிகள் தம் போட போவுது என்ற பேச்செல்லாம் யதார்த்தமாகிப் போனது.
ஒரு ஊருக்கு ஒரு குருசாமி ,ஒரு யாத்திரைக் குழு என்று இருந்த காலம்மாறி, இன்று 4-5 குழுக்கள், அந்தக்குழுவுல இந்தவாட்டி 100 பேரு இருக்காங்க சாமி, நம்ம குழுவுல எப்படியாச்சும் 150 பேராவது சேத்துரனும், அவங்க பஸ்புடிச்சு போறாங்க, நாமளும் ரெண்டு பஸ் புடிச்சு போகனும்.
அவங்க குற்றாலம் போறாங்க, நாம கன்னியாகுமரி போகலாம் என்ற கோணத்தில் பல இடங்களில் இது வேறு மாதிரியாக மாறி நிற்கிறது.
இந்த வாட்டி மண்டல பூஜைய மாஸா கலக்கி வுட்ரனும் சாமி என்ற ரீதியில் , இதெல்லாம் ஒரு கொண்டாட்ட மனநிலையிலும் போட்டி மனநிலையிலும் மாறிக் கொண்டிருக்கிறது.
ஏதோ ஒரு விதத்தில் மனிதர்களிடையே கடவுள் நம்பிக்கையும் பக்தியும் வளர்வது சரி , ஆனால் பக்தியின் அடிப்படைக் கோட்பாடான ஒழுக்கம் என்பது இல்லாத போது பக்தி வளர்ந்து என்ன செய்ய?
மலையில் காட்டுப் பாதையில் நடக்கும் சாமிகள் ப்ளாஸ்டிக் தண்ணீர் பாட்டிலை தூக்கி எறிந்து விடுவது, கூட்டத்தில் ஒழுக்கமில்லாமல் முண்டியடித்து மற்றவர்களை நசுக்கித் தள்ளி விட்டு தரிசனம் செய்வது என்பதெல்லாம் எந்தக் கோணத்தில் பக்தியாகும்?
இதையெல்லாம் பேசுவதற்கு நமக்கு எந்த உரிமையும் இல்லை தான்.
கொண்டாட்டமாக கடவுளை வழிபடுதல் என்பது அவரவர் விருப்பம். ஆனால் நமது பக்தி ஒரு தேவையில்லாத குழப்பத்தை விளைவிக்கும் பட்சத்தில் அதை நமக்கு நாமே சரி செய்து கொள்ளாவிட்டால் நமக்கு தானே பிரச்சினை?
ஏன் ஒட்டுமொத்த கூட்டமும் இந்த இரு மாதங்களில் சென்று குவிய வேண்டும்?
ஏன் படபட்பை, பதட்டமான சூழலை உருவாக்க வேண்டும்?
இப்படி அதீத பக்தி என்ற பெயரால் நம்மையும் நாம் கஷ்டப்படுத்தி தான் கொள்கிறோம் என்பதை உணரலாமே?
கோவிலுக்கே போக வேண்டாம் என்று சொல்ல இங்கு யாருக்கும் உரிமை இல்லை.
ஆனால் தேவை அறிந்து நேரம் காலம் அறிந்து கொஞ்சம் நிம்மதியாக அவசரமில்லாமல் கடவுளை வணங்கினால் தான் அதற்கு பலன். கொஞ்சம் சிந்திக்கலாமா?




