Categories
கருத்து தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

அமீபா கற்றுத் தந்த பாடம்

அமீபா.
இந்தப் பெயரைக் கேட்டதும் இப்போதைக்கு எல்லோருக்கும் நினைவில் வருவது இப்போதைய மூளை காய்ச்சல் ஏற்படுத்தும் அமீபா தான்.
சபரிமலை செல்லும் பக்தர்களை மூக்கைப் பொத்திக் கொண்டு குளிக்கும்படியான உத்தரவுகளும், அமீபா காய்ச்சலுக்கான அறிகுறிகளும் பரவலாகப் பேசப்படுகிறது.

ஆனால் இது சரிசெய்யக்கூடியது தான், யாரும் அந்தளவிற்கு பயப்பட வேண்டாம் என்ற செய்தி ஆறுதல்.
இதே அமீபா என்ற பெயரைக் கேட்டதும் எனக்கு இன்னொரு விஷயமும் நினைவில் வந்தது.

எந்த வகுப்பில் என்று தெரியவில்லை, அறிவியல் பாடத்தில் அமீபா படம் வரைந்து பாகம் குறி என்ற கேள்வி ஒன்று வரும்.
அமீபாவின் படம் புத்தகத்தில் ஒரு மாதிரியாக வளைத்து நெளித்துக் கொடுக்கப்பட்டு, உள்ளே இருக்கும் பாகங்களும் குறிக்கப்பட்டிருக்கும்.

அமீபாவின் தனித்தன்மை என்னவென்றால் அதற்கு ஒரு குறிப்பிட்ட உருவ அமைப்பு என்பது கிடையாது. எந்த உருவத்தில் வேண்டுமானாலும் இருக்கும்.

இது அமீபாவைப் பற்றிய தீர்க்கமான ஒரு குறிப்பு.

இந்தக் குறிப்பு என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டது.
எனவே தேர்வில் அமீபா படம் வரைந்து பாகம் குறி என்று கேட்டிருந்த போது நான் புத்தகத்தில் இருந்தது போல அல்லாமல் எனக்குத் தோன்றியவாறு மிக எளிமையாக செவ்வகமும் இல்லாமல் சதுரமும் இல்லாமல் ஒரு தோராயமான வடிவில் வரைந்து அதன் உள் பாகங்களை தெளிவாகக் குறிப்பிட்டு படம் வரைந்திருந்தேன்.

விடைத்தாள் திருத்தி வந்தது. புத்தகத்தில் இருந்த அதே கடினமான வடிவத்தை வரைந்திருந்த எனது சக நண்பர்களுக்கு முழுமையான இரண்டு மதிப்பெண்களும், எனக்கு ஒரு மதிப்பெண்ணும் வழங்கப்பட்டிருந்தது.

ஏன் டீச்சர் நான் தான் அமீபாவை சரியாக வரைந்து பாகங்களைக் குறித்திருக்கிறேனே , எனக்கு ஏன் மதிப்பெண் குறைத்தீர்கள் என்று கேட்டேன்.

அதற்கு அந்த டீச்சர் ஏலே புத்தகத்துல எப்படி இருக்கு நீ என்ன லட்சணத்துல வரைஞ்சிருக்க என்று கேட்டார்கள்.

அதற்கு நான், டீச்சர் அமீபாவுக்கு தான் தீர்க்கமான உருவம் என்று ஏதும் கிடையாதே?
அப்படியிருக்க அமீபா ஏன் இந்த உருவில் இருக்கக் கூடாது? என்று விடாமல் கேட்டேன்.

ஏலே புத்தகத்துல இருக்கிறத ஒழுங்கா வரைஞ்சா தான் மார்க்கு.

நீ அவ்வளவு பெரிய ஆளா? புக்குல இருக்குறது மாத்தீருவீகளோ என்று கேட்டு எனக்கு அந்த ஒரு மதிப்பெண் தரவே இல்லை.

ஆனால் நான் செய்தது சரியே என்ற எண்ணம் என்னுள் தீ்ர்க்கமாக இருந்தது .
அடுத்தடுத்த பரீட்டைசகளிலும் நான் அமீபாவை எனது விருப்பம் போலவே வரைந்தேன்.

மதிப்பெண்ணுக்காக எனது போக்கை நான் மாற்றிக் கொள்ளவே இல்லை.

அதன் விளைவை இன்று உணர்கிறேன்.
அமீபாவை புத்தகத்தில் இருந்தபடியே வரைந்து மதிப்பெண் பெற்றவர்கள், ( உயரதிகாரிகள் சொன்னதை அப்படியே செய்பவர்கள் உயர் நிலையிலும்)

நான் இன்னமும் உயரதிகாரிகள் தவறு செய்தால் அது தவறு என்று வாதாடி இதுவும் சரிதான் என்ற மனப்போக்கிலும் வாழ்கிறேன் வேலை செய்கிறேன்

இன்னமும் கூட சராசரிக்கும் குறைவான ஊதியமும் சராசரி வாழ்வும் தான்.

மூளை உணர்த்தினாலும் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை. அமீபாவை வளைத்து நெளித்து வரைந்து இரண்டு மதிப்பெண் வாங்க எனக்கும் ஆசை தான்.

இருக்கும் நெருக்கடியைப் பார்க்கும் போது என்றாவது ஒரு நாள் அமீபாவை வளைத்து நெளித்து வரைய ஆரம்பித்துவிடலாம் என்று தான் தோன்றுகிறது.

அது எப்போது என்பது தான் தெரியவில்லை.

பார்க்கலாம்.
இந்த அமீபா எனக்கு சொல்லித் தந்த பாடம் வெல்கிறதா என்று.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.