மீண்டும் மீண்டும் வஞ்சிக்கப்படும் உழைக்கும் வர்க்கம்.
நாம் பலமுறை தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர்களின் அவல நிலை பற்றியும் அவர்களின் ஊதிய மோசடி பற்றியும் எழுதியிருக்கிறோம்.
தனியார் முதலைகள் தான் பணத்திற்கு பேராசைப்பட்டு உழைப்பவர்களை வயிற்றில் இடத்தில் பிழைக்கிறார்கள் என்றால் , அரசாங்கமும் அதையே செய்தால் எங்கே தான் சென்று முறையிடுவது இந்த பாவப்பட்ட பிறவிகள்?
தொகுப்பூதிய செவிலியர்களுக்கு நிகழும் அநியாயம் பற்றியது தான் இந்தப் பதிவு.
தொகுப்பூதிய செவிலியர்கள் மட்டுமல்ல, துப்புறவுத் தொழிலாளர்களில் துவங்கி பல அரசுத் துறைகளிலும் பெரிய அளவிலான வேலைகளிலும் இந்தத் தொகுப்பூதிய அவல நிலை என்பது நிச்சயம் இருக்கத்தான் செய்கிறது.
தொகுப்பூதிய ஊழியர்களாகப் பணியமர்த்தப்படும் செவிலியர்களுக்கும் , நிரந்தர அரசுப்பணியில் இருக்கும் செவிலியர்களுக்கும் வேலையில் எந்த வித வித்தியாசமும் இல்லாதபட்சத்தில் ஊதியத்தில் 30 முதல் 50 சதவீத வித்தியாசம் உண்டு.
அதாவது நிரந்திர செவிலியர் 65000 ஊதியம் பெறுவார் எனில் தொகுப்பூதிய செவிலியர் 30000 மட்டுமே அதிக பட்சம் சம்பளமாகப் பெறுவார்.
இந்த வித்தியாசம் ஊதியத்தில் மட்டுமே.
போதாக்குறைக்கு தொகுப்பூதிய செவிலியர்களை நிரந்திர செவிலியர்கள் அதிகபட்சமாக வேலை வாங்கவும் வாய்ப்புகள் அதிகம்.
அரசு தனது செலவைக் குறைத்துக் கொள்வதற்காக, அதாவது நிரப்பப்பட வேண்டிய காலிப் பணியிடங்களை நிரந்திர செவிலியர்களைக் கொண்டு நிரப்பினால் ஆகும் செலவைப்பாதியாகக் குறைப்பதற்காக தொகுப்பூதிய ஊழியர்களை நியமிக்கிறது.
இது செவிலியர் பணியில் மட்டுமல்ல.
அனைத்துத் துறைகளிலும் இந்த அவலம் உண்டு.
இதை எதிர்த்துப் பேசவும் பாவப்பட்ட பட்டதாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் தெம்பு என்பது கிடையாது.
ஏதோ ஒரு விதத்தில் இந்த செவிலியர் சங்கம் தன்னை ஏய்க்கும் அரசுக்கு எதிராக உயர்நீதமன்றத்தில் வழக்குத் தொடுத்து தனக்கான தேவைகளை வாதமாக எடுத்து வைத்திருக்கிறார்கள்
சரி போனால் போகட்டும் அவர்களும் பிழைக்கட்டும் என்றில்லாமல் அரசாங்கம், இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து அவர்களுக்கு எதிராக செயல்படுகிறது.
தனியார் நிறுவனங்கள் சிலவும், தனியார் பள்ளி கல்லூரிகளும் தான் இப்படி பணத்தாசைக்காக தனது ஊழியர்களை வஞ்சிக்கிறது என்றால், மக்கள் நலனைப் பிரதானமாகக் கொண்ட அரசும் இப்படி ஊழியர்களை வஞ்சித்தால் என்னதான் செய்வது எங்கு தான் போவது?
அரசு ஊழியர்களைப் போலத்தானே மற்றவர்களுக்கும் குடும்பமும், சூழலும் என்பதை உணர்ந்து அரசு இந்த விஷயத்தில் ஓரளவு ஈவு இரக்கம் காட்டினால் சிறப்பு.




