Categories
சினிமா

அவதார்- திரை விமர்சனம்

ஒரு நல்ல உணவு. மிக அருமையான ருசி . அதை மனம் விட்டுப் பாராட்டிய பிறகு மறுநாளும் அதே ருசியுடன் அதே உணவு பரிமாறப்பட்டால்? நேத்து நல்லா இருந்துச்சு. இன்னைக்கும் அதே மாதிரி நல்லாதான் இருக்கு என்று சிறிய சலிப்புடன் ஏற்றுக் கொள்வோம்.

மீண்டும் அடுத்த நாள் அதே உணவு பரிமாறப்பட்டால்?

ஏங்க நல்லா இருக்குன்னு சொன்னது குத்தமா ? தினமும் அதையே போட்டா மனுஷனுக்கு வெறுத்துப் போயிடாதா? என்ற கேள்வி வரும்தானே?

அதே கேள்வி தான் இந்த அவதார் மூன்றாவது பாகத்தைப் பார்க்கும் போது வருகிறது.

முதல் பாகம் மிகப் பிரம்மாண்டம் என்பதில் உலகத்தில் யாருக்குமே எந்த மாற்றுக் கருத்துமே கிடையாது.
அதிலும் அத்தனை வருடங்களுக்கு முன்பு அப்படி ஒரு கிராபிக்ஸ் காட்சி அமைப்புகளையும், முப்பரிணாமத்தையும் எப்படி செய்ய முடிந்தது என்று வியக்காத ஆளில்லை.

அவதார் படத்தை வெளியிடுவதற்காகவே பல திரையரங்குகள் புதுப்பிக்கப்பட்டு முப்பரிணாம வசதி செய்யப்பட்ட நினைவுகள் இன்னும் நம் மனதில் இருந்து நீங்கவில்லை.

மனித குலம், அந்த இனத்திற்குள் சேர்வதில் துவங்கி, பயிற்சி , காதல் , விரோதம் , பகை என்று பலவிதத்திலும் மக்களை வியப்பில் ஆழ்த்திய முதல் பாகத்தின் பிரம்மாண்டத்தை, திருப்தியை இரண்டாம் பாகம் தரமுயற்சி செய்திருந்தது.

வனத்திலிருந்து கடல் பகுதிக்கு மாற்றி அமைத்து ஓரளவிற்கு ஒரு புதுமுயற்சியுடன் மக்களை மனக்குறை இல்லாமல் சரிகட்டியது இரண்டாம் பாகம்.

ஆனால் இப்போது வந்திருக்கும் மூன்றாவது பாகம் சுத்த மோசம்.

புதிதாக ஒன்றுமே இல்லை.
இரண்டாம் பாகத்திலும் முதல் பாகத்திலும் வந்த கடல் காட்சி அமைப்புகள் , பிராணிகள் பறவைகள் நீளமான சண்டைக காட்சிகள் என்று எல்லாம் நமது மனதில் ஒட்டாதவைகளாகத் தான் இருக்கின்றன.

அதிலும் சண்டைக்காட்சிகளின் நீளம் நம்மை நெளியச் செய்கிறது.

பார்ர்துக் கொண்டே இருக்கலாம் என்ற ரீதியில் பாராட்டப்பட்ட படம் இப்போது எப்பதான் முடியும் என்று சலித்துக் கொள்ளும்படியாக அமைந்திருப்பது வருத்தம் தான்.

அனைத்து காட்சிகளும் நாம் ஏற்கனவே இருமுறை பார்த்து விட்டபடியால் எந்தக் காட்சியும் புதிதாக ரசிக்க வைக்கவில்லை என்பதையும் தாண்டி படத்தின் நீளமும் நம்மை சோதித்து விட்டது.
மருவை ஒட்டி மாறுவேடமிட்ட கதையாக இந்த அவதார் மூன்றாவது பாகம் அமைந்திருப்பது பெரும்பாலான ரசிகர்களுக்கு வருத்தமே.

அவதார் ரசிகர்களாக ஒரு முறை கடனே என்ற ரீதியில் இந்தப்படத்தைப் பார்க்கலாம்.

ரசித்துப் பார்க்கும்படியான சரக்கு சுத்தமாக இல்லை.

இதோடு இந்த அவதாரங்கள் நின்று விட்டால் அவதாருக்கு மரியாதை.

இதுல புதுசா அந்த இனத்துலயே ஒரு வில்லக்கூட்டத்தக் கொண்டு வந்து அந்தக் கூட்டத்தோட தலைவி தலையில திமுக கொடிய அலங்காரம் பண்ணி வச்சு …

கேமரூன் ப்ரோ, ரொம்ப தப்பு ப்ரோ!

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.