Categories
சினிமா

ரெட்ட தல – திரை விமர்சனம்

பொதுவாக ஒரு நடிகரிடம் ஏதாவது விஷயத்தைச் சொல்லி அவரைக் கவர்ந்து விட்டால், அது இயக்குனரின் வெற்றி தான்.

அந்த நடிகரும் ஒப்புக் கொண்டு, அந்த சினிமாவைத் தயாரிக்க ஒரு தயாரிப்பாளரும் கிடைத்துவிட்டால் படத்தை இயக்கி சந்தைப்படுத்தி விடலாம்.

ஏதாவது விடுமுறை தேதிகளில் படம் வெளியானால் குறைந்தபட்ச லாபத்தோடு படம் வெற்றியடைந்து விடும் என்ற நோக்கத்துடன் சில படங்கள் எடுக்கப்படுகின்றன.

அதாவது முற்றிலும் வியாபார பாணியில் எடுக்கப்படும் படங்கள்.

சில படங்கள் கருத்து ரீதியாக வெளியாகும்.
அதாவது ஒரு பெரிய மையக்கருத்தைக் கொண்டு இந்தக் கதையை நான் படமாக்க வேண்டும் , இதற்கு கதாநாயகன் முக்கியமல்ல கதையே நாயகன் என்ற ரீதியில் வெளியாகும்.

சில படங்கள் கதாநாயகர்களுக்காகவே வெறும் மசாலா படங்களாக, வெற்றியடைந்த இயக்குனருடன் நானும் கூட்டணி வைக்கிறேன் என்று கதாநாயகர்களை மையப்படுத்தி மசாலா படமாக வெளியாகும்.

கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியான ரெட்ட தல என்ற அருண் விஜய் நடித்த படமானது இதில் எந்த வகையில் சேரும் என்பது புதிர் தான்.

ஆம். முழுக்க முழுக்க கதாநாயகனை மையப்படுத்திய ராவான மசாலா சண்டைப்படம், அதிலும் ஒரு கதாநாயகன் அல்ல, இரண்டு நாயகர்கள். பொதுவாக இரண்டில் ஒரு கதாநாயகன் சோப்புளாங்கியாகவும் இன்னொருவர் மாவீரராகவும் சித்தரிக்கப்படுவது என்பதைத் தாண்டி இரண்டு பேருமே மிகப் பிரம்மாண்டமான வீரர்கள் . எதிரில் ஆயிரம் பேர் இருந்தாலும் பொளந்து தள்ளக் கூடிய தைரியசாலிகள் என்று காட்டியிருக்கிறார்கள்.

இருவருக்குமான கதைப்பின்புலன்களும் இரண்டு முறை குட் பேட் அக்லி படத்தை காப்பி அடித்தது கோல இருந்தது.
குட் பேட் அக்லி படத்தில் அந்த கதாநாயகனுக்கு அவ்வளவு தூரம் மிகப்பெரிய பின்புலம் காட்டப்பட்டாலும் கூட, நமக்கு அதிலும் ஒரு சலிப்பு ஏற்படவே செய்தது.
இந்தப்படத்தில் அந்தப் பின்புலக் கதையும் மனதில் ஒட்டுவதாக அல்லாமல் நாடகத்தனமாக இருந்தது . காரணமில்லாத சண்டை, காரணமில்லாத கொலை, அதற்கான பழிவாங்கல் , என ஒரு நாயகனின் கதை மனதிற்கு ஒவ்வாமல் இருந்தது ஒரு புறம் பின்னடைவு என்றால், இன்னொரு கதாநாயகன் யாரென்றே தெரியாமல் அவனது காதல் கதையும் சுவாரஸ்யமாக அமையாமல், சொதப்பியது. இருவரின் சந்திப்பும் சுவாரஸ்யமாகத் துவங்கினாலும் அதற்குப் பின்னால் அமைந்த கதை பெரிய லாஜிக் ஓட்டை.

பெரிய அளவில் மூலக்கதையும் பின்கதையும் கொண்டுள்ள ஒரு நாயகன் தனது காதலியின் பேச்சைக் கேட்டு அவளைத் திருப்பதிபடுத்துவதற்காக கொலை செய்யும் அளவிற்குத் துணிவார் என்பது லாஜிக் ஓட்டை.

சொல்லப்போனால் அதைப் பின்பற்றி நகரும் மீதி கதையை நம்மால் ஏற்றுக் கொள்ளவே இயலவில்லை.

மேலும் பாண்டிச்சேரியிலேயே பல வருடமாக இருந்த கதாநாயகனின் அடையாளம் அங்கிருக்கும் உள்ளூர் காவல்துறைக்குத் தெரியாமல் , அவர்கள் மிகவும் மெனக்கெட்டு அவரைக் கண்டறிவது என்பது கதையை நகர்த்திச் செல்வதற்காக அமைக்கப்பட்ட யோசனையற்ற செயல்.

மொத்தத்தில் ஒரு ராவான சண்டைப்படத்திற்கான நல்ல முயற்சி.

ஆக்‌ஷன் படங்களை விரும்பி ரசிக்கும் ரசிகர்கள் லாஜிக் மறந்து ஒரு முறை ரசிக்கலாம்.

ரெட்டத் தல – பத்தல!

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.