சினிமா- சிலரது பேராவல், கனவு, லட்சியம்.
அப்படி ஒருவரின் முயற்சியில் உருவாகும் சினிமாக்கள் என்றுமே மனதிற்கு நெகிழ்ச்சி தான்.
அப்படியொரு நெகிழ்ச்சியான மறக்க முடியாத சினிமாவாக அமைந்திருக்கிறது இந்த வாரம் வெளியான சிறை திரைப்படம்.
காவல்துறையில் பணிபுரிந்தாலும் தனது கனவான சினிமாவை நோக்கி வந்த தமிழ் அவர்களின் டாணாக்காரன் படம் நம்மையெல்லாம் வியப்பில் ஆழ்த்தியதோடு அல்லாமல், காவல்துறை பயிற்சியில் நடக்கும் அவலங்களை மிக தைரியமாக வெளிக்கொணர்ந்தது.
அது ஒரு அர்த்தமுள்ள சினிமாவாக அமைந்ததோடு அல்லாமல் நமது நெஞ்சங்களையும் கவர்ந்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.
அதைப்போலவே மிக நேர்த்தியாக அருமையாக அமைந்த படம் இந்த சிறை திரைப்படம்.
இதுவும் காவல்துறையில் பணிபுரியும் கீழ்நிலைக் காவலர்களின் பணி அவலத்தையும், அவர்கள் படும் துயரத்தையும், அவர்களின் குறைந்தபட்ச அதிகாரத்தையும் பற்றி மிக நேர்த்தியாக அமைந்த படமாகும்.
மேலும் இதில் ஒரு பின்கதையை பிணைத்து ஒரு சாதாரண பாமரனுக்கு கீழ்நிலை காவலாளிகள் தனக்கிருக்கும் அதிகாரத்தை நேர்மையாகப் பயன்படுத்தி உதவ முனைந்தால் அவர்களின் வாழ்வில் எத்தகைய மாற்றங்கள் நிகழும் என்பதை வெளிப்படுத்திய விதம் அருமை.
கதை என்று பார்த்தால் நாம் பார்த்த மைனா படத்தின் கதையை ஒத்திருப்பது போன்ற தோற்றத்தைக் கொண்டிருந்தாலும், இந்தப்படத்தில் விளக்கங்களும், உண்மையாக காவல்துறை உள்ளள நிகழும் போக்குவரத்து நடைமுறைகளையும், அவர்கள் படும் கஷ்டங்களையும் அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
அதிலும் ஒரு சில காட்சிகள் மனதிற்கு மிகவும் நெருக்கமானதாகவும் , நம்மை நெகிழ்விக்கும் விதமாகவும் அமைந்திருப்பது மிகச்சிறப்பு.
எஸ்கார்ட் வேலை, அதாவது கைதிகளை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று திரும்பும் காவலர்களைப் பற்றிய கதையும், அவர்களின் நடவடிக்கையால் ஒரு கைதியின் வாழ்வு எப்படி மாறலாம் என்பதையும் திரைக்கதையாக அமைத்த விதம் அருமை.
டாணாக்காரனில் வரும் மிடுக்கான விக்ரம் பிரபுவை இந்தப்படத்திலும் நம்மால் பார்க்க முடிகிறது.
உயர் அதிகாரிகளைக் கேள்வி கேட்கும் தைரியமான காவலாளியாக மிளிர்கிறார்.
அவரது அறிமுகக் காட்சி மிக யதார்த்தமாகத் துவங்கி மிரட்டலாக முடிகிறது.
பெரிய கமர்ஷியல் நாயகர்களின் அறிமுகக் காட்சி போல கைதட்டல் வாங்குகிறது.
இறுதிக்காட்சியிலும் ரசிகர்கள் விசிலடித்துக் கொண்டாடத் தவறவில்லை.
அதைத்தாண்டி கைதி இஸ்லாமியர் என்பதால் துப்பாக்கியைத் தோட்டாவோடு வைத்திருந்தோம் என்று கூறும் காவலாளிக்கு மேலதிகாரி தரும் பதிலடி காட்சியும், அப்துல் ராவத் என்ற பெயரை உடைய மனிதன் ஈழத்தமிழருருக்காகத் தீக்குளித்தவர் எனவும், இஸ்லாமியரும் இன தேச உணர்வோடு தான் வாழ்கிறோம், மதத்தை வைத்து எங்களைப் பிரிக்க வேண்டாம் என்ற வசனம் பலத்த கைதட்டல்களைப் பெறுகிறது.
நீதிபதியிடம் குற்றவாளி முறையிட்ட பிறகு நீதிபதி கூறும் வார்த்தைகளும் ஆராவாரத்தைப் பெறத. தவறவில்லை.
குறிப்பாக இறுதிக் காட்சி மிக அழகு.
யதார்த்தமான, ஆழமான கருத்துள்ள மனதிலிருந்து நீங்கா நல்ல படம்.
சிறை- நமது இதயங்களை சிறைபிடிக்கத் தவறவில்லை.


