Categories
அரசியல் கருத்து தற்கால நிகழ்வுகள்

தேவை- அடிப்படை ஒழுக்கம்!

தலைவன் இல்லாத படை தலையில்லா முண்டம் என்பது ஒரு சொலவடை.
தலைவன் சரியில்லாதபட்சத்தில் படை கட்டுக்கோப்பாக இல்லாமல் சிதறிப் போகும் என்பதை சில முக்கியமான அரசியல் கட்சிகளை உதாரணமாகக் கொண்டு நாம் புரிந்து கொள்ளலாம்..
அதைப்போல வளரும் கட்சிக்கு மிக அவசியமான ஒரு தேவை என்பது தலைவனின் ஒழுக்கமும், செயலாற்றலும் , நடவடிக்கைகளும், பேச்சும், என்பதைத் தாண்டி தொண்டர்களுக்கு அந்தத் தலைவனின் மீதான பற்றும், அவனது கொள்கையின்பாற் உள்ள பிடிப்பும்.

தலைவனின் மீதான பற்று சற்று முன்பின் இருந்தாலும் கூட கொள்கையின் மீதான பிடிப்பு என்பது மிக மிக அவசியம்.

தமிழ்நாட்டில் இத்தனை காலம் திராவிடக் கட்சிகள் கோலோச்சக் காரணம், ஒரு கட்சிக்குக் கொள்கையும் மற்றொரு கட்சிக்கு தலைவர் அபிப்ராயமும் தான் காரணம்

ஆனால் தலைவர் தலைவி கட்டுக்கோப்பு அபிப்ராயம் ஆகியவற்றைக் கொண்டு இயங்கிய கட்சியின் இன்றைய நிலை என்ன என்பதை நாம் அறிவோம்.

இன்னொரு பூர்வீக திராவிடக் கட்சி, எத்தனை தலைவர்கள் மாறினாலும் பாரம்பரிய தொண்டர்களாலும், அந்தக் கட்சியின் மீதும், வரலாற்றின் மீதும் கொள்கையின் மீதும் கொண்டுள்ள பற்றாலும் இன்றளவிலும் நிலைத்து நிலையாகப் பயணிக்கிறது.
பல விமர்சனங்கள், குடும்ப அரசியல் என்ற தாக்கு, ஊழல் கைதுகளையும் தாண்டி இன்றளவும் மக்களிடம் ஒரு அபிப்ராயம் இருக்கிறது அந்தக் கட்சிக்கு.

இன்னொரு புறம் மிகப்பெரிய தேசியக் கட்சி , சரியான தலைமையும் அமையாமல், தொண்டர்களுக்கு இடையிலான மோதல் போக்கு காரணமாக தடம் தெரியாமல் அழிந்து கொண்டிருக்கிறது.

மற்றொரு தேசியக் கட்சி, மதவாத சக்தி என்ற பெயரைக் கொண்டிருந்தாலும் கூட, கட்டுக்கோப்பு மற்றும் ஒழுக்கத்தின் காரணமாகப் படிப்படியாக ஒவ்வொரு மாநிலமாக தனது கால்தடத்தைப் பதிக்கிறது.

தமிழகத்தில் தற்போது மிகப்பெரிய அளவில் பேசப்படும் , உச்சபட்ச நடிகரின் கட்சி ஆனது தலைவர் அபிப்ராயம் என்ற ரீதியில் அதன் தொண்டர்களிடையேயும் மக்களிடையேயும் தற்போதைய சூழலில் மிக பரபரப்பாக பேசப்பட்டாலும், இது எத்தனை காலம் நிலைக்கும் என்பது கேள்விக்குறியே!

கட்டுப்பாடு இல்லாத கொள்கை என்பது என்னவென்றே தெரியாத ஒரு தொண்டர் படை இந்தக் கட்சியை எப்படி வழிநடத்திக் கரைசேக்கும் என்பதே இப்போது இந்தக் கட்சிக்கு முன்னால் இருக்கும் பெரிய கேள்வி.

பதவி தரவில்லையே பதவிக்காகத் தானே நான் இத்தனை நாளாக இந்தக்கட்சிக்காக உழைத்தேன் என்று 40 , 50 வருடம் கழித்து ஒரு தொண்டர் பேசினால் அது நியாயம்.
ஆனால் கட்சி ஆரம்பித்து முதல் தேர்தலை சந்திக்கும் முன்பே, எனக்குப் பதவி தரவில்லை, இவனுக்கு பக்கோடா தரவில்லை என்று குரங்குத் தாவல்கள் செய்யும் கூட்டம் எப்படி இந்தக் கட்சியை வழிநடத்தி ஆட்சியைக் கைப்பற்றி மக்களைக் காப்பாற்றப் போகிறது?

இதில் இருக்கும் கூட்டத்தில் பெரும்பாலான ஆட்கள் வேடிக்கை பார்க்கும் வகை, மீதி முழுசா வளரும் முன்பே பெருசா வளர வேண்டும் என்று நினைக்கும் முந்திரிக் கொட்டை வகை.

ஒரு கட்சி உறுப்பினர், தனக்குப் பதவி தரவில்லை என்று கட்சித் தலைவரின் வாகனத்தை வழிமறிக்கிறார், பிறகு கட்சிப் பதவி கிடைக்கவில்லை என்று தற்கொலை முயற்சி செய்கிறார்!

இதெல்லாம் ஒரு வளரும் கட்சிக்கு மிகப்பெரிய வெட்கக் கேடு. இவர்களும் இந்தக் கட்சியும் மக்களுக்காக சேவை செய்ய வந்தவர்கள் என்பதை எப்படி மக்கள் நம்புவார்கள்?

விதை போட்டு மண்ணைத் தாண்டி முளைக்கும் முன்பே பக்கத்திலிருக்கும் செடியைக் காட்டிலும் தான் வேகமாக வளர வேண்டும் என்ற எண்ணம் கொண்ட சுயநல கும்பல், வளர்ந்து ஆலமரம் போல விழுதுகள் விட்டால் என்ன ஆவது?

அடிப்படை ஒழுக்கமும் , கட்டுப்பாடும் இல்லாத கட்சி ஒரு மாநிலக் கட்சியாக அங்கீகரிக்கப்படுவதற்கே தகுதியற்றது.

முதலில் தகுதியை வளர்த்துக் கொண்டு கோதாவில் இறங்கினால் மக்களின் செல்வாக்கைப் பெறலாம்.

இல்லாவிட்டால் கடல் அலைபோல மக்கள் கூட்டத்திற்கு நடுவே செல்போனில் படம் மட்டுமே எடுக்கலாம்.

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.