அரசு ஊழியர்களின் வாழ்வில் மீண்டும் வசந்தம் பூத்த பொன்னாள்.
மீண்டும் ஓய்வூதியம் என்ற அறிவிப்பு. அதுவும் 20 ஆண்டுகளுக்குப் பிறகான வரலாற்று அறிவிப்பு.
இனிமேல் மண்டும் அரசு ஊழியர்களுக்கு அதே பழைய ஓய்வூதியம்.
அதாவது 30 ஆண்டுகள் அரசுப்பணி செய்தவர்களுக்கு அவர்களின் கடைசி மாத வருமானத்தில் 50 சதவீதம் ஓய்வூதியமாகவும், 10 ஆண்டுகள் வேலை செய்தவர்களுக்கு பத்தாயிரம் ரூபாய் ஓய்வூதியமாகவும், TAPS, அதாவது Tamilnadu Assure Pension Scheme என்ற பெயரில் மீண்டும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
உனக்கென்னப்பா கவர்மென்ட் வேலை என்ற சொல்லாடல் மீண்டும் தலைதூக்கும் தருணம் இது.
இடையில் அரசாங்கப்பணியாளர்களுக்கு ஓய்வூதியம் இல்லை என்ற நிலை இருந்து, அதை அரசுப்பணியாளர் சங்கங்கள் இத்தனை காலமாகப் போராடி மீண்டும் நிலை நிறுத்தியிருக்கிறார்கள்.
இதற்குப் பெரும்பாலான வரவேற்பும் அதே சமயம் சில இடங்களில் எதிர்ப்பும் இருக்கத்தான் செய்கின்றன.
அதென்ன அவர்களுக்கு மட்டும் சலுகை என்ற ரீதியில் பலரும் பேசுவதும் இல்லாமல் இல்லை.
ஏதோ ஒரு பெருமுயற்சி செய்து இப்போதெல்லாம் அரசு வேலையைப் பெற முடிகிறது.
அந்தக்காலம் போல எளிதாக அரசு வேலை கிடைப்பது இல்லை.
அப்படியான பெருமுயற்சி செய்யத் தவறியவர்கள் அல்லது முயற்சி செய்து தோற்றவர்கள் அவர்களுக்கு கிடைக்கும் சலுகை அல்லது மரியாதையை எதிர்த்துக் குரல் கொடுப்பது நியாயமாகது அல்லவா?
வேண்டுமென்றால் தங்களுக்கான உரிமைகளைக் கோரலாம்.
பல ஆண்டுகளாக ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி அந்த நிறுவனத்தின் வளர்ச்சிக்காக உழைப்பவர்கள், அரசு ஓய்வூதியத் திட்டம் போல அந்த கார்ப்பரேட் அல்லது அந்த நிறுவனம் தங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும், அதற்கு அரசாங்கம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுமானால் கோரிக்கை வைக்கலாம்.
மாறாக நம்மால் இயலவில்லை, அவர்களுக்குக் கிடைக்கிறது என்ற ரீதியில் பேசுவது சரியல்ல.
அரசு ஊழியர்களும் தங்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் இருந்து தான் இந்த சம்பளமும் இனிமேல் வரப்போகும் ஓய்வூதியமும், ஏன் தனது மனைவி காலம் வரை வரப்போகும் ஓய்வூதியமும் என்பதை உணர்ந்து மக்களுக்காக நேர்மையாக தொய்வில்லாமல் விசுவாசமாக உழைக்க வேண்டும்.
மற்ற சாதாரண மக்களைக் காட்டிலும் தனியார் நிறுவனங்களைக் காட்டிலும் நல்ல சலுகைகளைப் பெறும் நாம் லஞ்சமும் ஏன் வாங்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.
இத்தனை சலுகைகளுக்குப் பிறகும் லஞ்சம் வாங்கும் அலுவலர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டு அவர்களின் வேலை பறிக்கப்பட்டு அந்த வேலை ஒரு நல்ல குடிமகனுக்குத் தரப்பட வேண்டும்.
அரசு வேலைக்கு ஏற்கனவே மவுசு தான்.
சில வேலைகளுக்குப் பல லட்சங்கள் வரை லஞ்சமாகக் கொடுத்து வேலை வாங்கப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது.
இனி அது இரண்டு மூன்று மடங்காக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
எது எப்படியோ , பணம் கொடுத்து வேலை வாங்குவது, வாங்கும் ஆட்களின் முடிவும் திறமையும்.
அதைக் காரணம் காட்டி நான் விட்ட பணத்தை இங்கே சம்பாதிக்கிறேன் என்று பொதுமக்களை வஞ்சிப்பது நியாயமாகாது.
நியாயமான முறையில் படித்து, நியாயமாக அரசு வேலை பெற்று நல்ல முறையில் உழைத்து சலுகைகளை அனுபவித்து அனைவரும் சந்தோஷமாக வாழலாமே!



