சினிமா .
தெருக்கூத்து, மேடை நாடகம் ஆகியவற்றின் பரிணாம வளர்ச்சி.
மேற்சொன்ன இரண்டும் வழக்கொழிந்து போய்விட்டன என்று சொல்லும் அளவில் தான் இருக்கின்றன.
ஒரு காலத்தில் மேடை நாடகத்தில் கொடிகட்டிப் பறந்த ஜாம்பவான்களை உலகம் போற்றி வியந்த கதைகளை நாம் இன்று செவி வழிச் செய்தியாகத் தான் கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
பம்மல் சம்பந்தனார், சங்கரதாச சுவாமிகள் போன்ற நாடக ஆசிரியர்களின் பெருமையை அறியாத தலைமுறை நமது.
ஆனால் மேடை நாடகத்தின் அடுத்த கட்ட பரிணாமமான சினிமா அதைக்காட்டிலும் உச்சகட்ட வளர்ச்சியை அடைந்து விட்டது என்பதில் வியப்பில்லை.
அதிலும் தமிழ்நாட்டில் சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு அம்சம் மட்டும் என்றால் பைத்தியக்காரனா இவன் என்று நம்மை வியப்பாகப் பார்ப்பார்கள்.
சிவாஜி , எம்.ஜி.ஆர், எம்.ஆர்.ராதா போன்ற மேடைக்கலைஞர்கள் சினிமாவில் கோலோச்சியதோடு அல்லாமல், தமிழ்நாட்டின் அரசியலலும் மிக முக்கிய ஆளுமைகளாக இருந்தனர்.
எம்.ஜி.ஆர் , கலைஞர் , ஜெயலலிதா ஆகியோர் சினிமாவில் இருந்து வந்து தமிழ்நாட்டின் தலையெழுத்தில் மிக முக்கிய எழுத்தாணிகளாக இருந்தது உலகறியும்.
இன்று வரை தமிழக அரசியலில் சினிமா நடிகர்கள் முக்கிய இடம் வகிப்பது நமக்கெல்லாம் தெரிந்த ஒன்று தான்.
இன்றைய ஆளும் கட்சித் தலைவரும் தமிழக முதல்வரும் கூட சினிமா வாசனை இல்லாதவர் அல்ல.
துணை முதல்வர் சினிமாவைத் தொழிலாகக் கொண்டவரும், சினிமா நடிகரும் தான்.
இப்போது மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய் அவர்களும் உச்சகட்ட சினிமா நடிகர் தான்.
எம்.ஜி.ஆர் தலைமுறைக்குப் பிறகு நடிகர் கமலஹாசன் அவர்களும் அரசியலுக்கு வந்து இப்போது மேல்சபை உறுப்பினராக பெருமை பெற்றிருக்கிறார்.
இப்படி தமிழக அரசியலிலும் சரி மக்களின் அன்றாட வாழ்விலும் சரி சினிமா என்பது முக்கியப் பங்காற்றுவது என்பது அன்றிலிருந்து இன்று வரை மாறாமல் தான் உள்ளது.
தீபாவளி , பொங்கல் , கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளுக்கும் முக்கியமான திரைப்படங்கள் வந்து மோதிக் கொள்வது என்பது ஒரு விதமான கொண்டாட்டம் தான்.
அதிலும் தீபாவளி பொங்கலுக்கு ரஜினி , கமல் , அஜித் , விஜய் படங்கள் மோதிக் கொள்வது ஒரு ஆரோக்கியமான போட்டி மற்றும் பெரிய அளவிலான கொண்டாட்டம்.
இந்தப் பொங்கலுக்கு நடிகர் விஜய் அவர்களின் அரசியல் வாழ்வுக்கு முந்தைய, அதாவது சினிமாவில் இது கடைசி படம் என்ற அறிவிப்போடு வரும் ஜனநாயகன் திரைப்படம் வரவிருக்கிறுது.
இன்னொரு படம் , சிவகார்த்திகேயன் அவர்களின் 25 ஆவது படமான பராசக்தி படம் வரவிருக்கிறது.
பொதுவெளியில், ஜனநாயகனை எதிர்த்து பராசக்தி வருகிறது.
ஜனநாயகனுக்குப் போட்டியாக பராசக்தி வருகிறது என்ற ரீதியில் மிகப்பெரிய அரசியல் பின்புல மோதலாக இதை மாற்றி வருவது மிக வருத்தமான செய்தி.
காலை உணவு என்றால் இட்லியும் இருக்கலாம், பொங்கலும் இருக்கலாம்..
இட்லி விரும்புபவர்கள் அதையும், பொங்கல் விரும்பிகள் இதையும் உண்ணுவது அவரவர் விருப்பம்.
அதைப் போல, பொங்கல் பண்டிகை என்பது மிக முக்கியமான ஒன்று, அதிலும் விடுமுறைகள் அதிகம் உள்ள பண்டிகைக் கொண்டாட்டம்.
அந்தப் பண்டிகையின் போது ஒரு படம் தான் வரலாம் , இன்னொரு படம் வரக்கூடாது என்றெல்லாம் பேசுவது நியாயமல்ல.
இது சினிமா , அரசியல் அல்ல..
சினிமா ஆனாலும் சரி, அரசியல் ஆனாலும் சரி, போட்டிக்கு அல்லது எதிர்த்து நிற்க ஏதாவது ஒருவர் இருக்கத்தான் வேண்டும்.
ஜனநாயகன் படம் நன்றாக இருந்தால், மக்கள் விரும்பினால் அந்தப் படம் ஓடப்போகிறது, மக்கள் பார்க்கப் போகிறார்கள்.
அதேதான் பராசக்திக்கும்.
இதில் ஒரு படக்குழுவினர் இன்னொரு படக்குழுவினரை மறைமுகமாக சாடுவது, அந்த நடிகரின் ரசிகக் குஞ்சுகள், இன்னொரு பட நடிகரை கடுமையாக ஏசுவதெல்லாம் தவறு.
பராசக்தி படக் கதாநாயகனான சிவகார்த்திகேயன் அவர்கள் இரண்டு படமும் வெல்ல வேண்டும் என்ற ரீதியில் பேசுகிறார்.அந்தப் படத்தின் இயக்குனருமான சுதா அவர்களின் கருத்தும் அதுதான்.
இப்படியிருக்க இவர்களை விஜய் ரசிகர்கள் தெலுங்கர்கள் இணைந்து தமிழனை எதிர்க்கிறார்கள் என்றும், தமிழ் டிரைலரில் தமிழ் வாழ்க என்று போட்டார்கள், தெலுங்கு டிரைலரில் தெலுங்கு வாழ்க என்று போட்டார்கள் என்றெல்லாம் பேசுவது சிறுபிள்ளைத்தனம்.
ஜனநாயகன் தெலுகு டப்பிங்கில் விஜய் அண்ணா தமிழா பேசப்போகிறார்?
அரசியல் தான் இலக்கு என்றால் புத்திசாலித்தனம் நிறைந்த அரசியல் செய்யப் பழக வேண்டும்.
இப்படிப் பொதுவெளியில் சினிமாவுக்காக சண்டையிட்டு, மக்கள் மனதில் இவர்கள் இன்னும் சில்லறை அணில் குஞ்சுகள் தான். இவர்கள் திருந்த மாட்டார்கள் என்ற ரீதியில் பெயர் வாங்கக்கூடாது.
அதிலும் குறிப்பாக பராசக்தி படம் இந்தி திணிப்பை எதிர்க்கும் கருப்பொருளைக் கொண்ட படம்…
அதை எதிர்ப்பது என்பது இவர்கள் துவங்கியுள்ள கட்சியின் கொள்கையை எதிர்ப்பது என்பது விளங்காமல் இருப்பது தற்குறித்தனமல்லாமல் வேறென்ன?
சினிமாவை வாழ விடுங்கள்.
அரசியலை அரசியல்வாதிகளோடு அரணியல் களத்தில் செய்யுங்கள்.




