Categories
தகவல் தற்கால நிகழ்வுகள் நினைவுகள்

அடடே இதுதான் சங்கதியா?

உலகில் நம்மைச்சுற்றி சில விசித்திரமான விஷயங்கள் நமக்குப் புரியாத தெரியாத நிறைய விஷயங்கள் நிகழ்ந்து கொண்டே தான் இருக்கின்றன.

நான்கு புது இடங்களுக்குச் சென்று அந்த இடங்களைக் கண்டு அனுபவிக்கும் போது கிடைக்கும் அந்த இனிமையும், அந்தப் புது அனுபவமும் வேறு எதுவும் தர இயலாது.

அப்படி எனக்கு பணி நிமிர்த்திமாக தமிழ்நாடு தாண்டி சில இடங்களைக் காண வாய்ப்பு அமைந்தது.

அதில் எனக்குப் பிடித்தமான நாசிக் பற்றி எழுதியிருந்தேன்.
அகமதாபாத் சென்றிருந்த போது அந்த ஊர் இன்றளவிலும் கூட பல ஆண்டுகள் பின்தங்கியதைப் போல சிறிது வளர்ச்சி குறைவாகவே உள்ளது என்பதைக் குறிப்பிட்டு எழுதியிருந்தேன்.
ஆனால் அகமதாபாத் நகருக்கு நான் சென்றிருந்த போது என் கண்களில் பட்ட ஒரு வித்தியாசமான விஷயம் என்னவெனில், இரு சக்கர வாகனங்களின் முன்பகுதியில், அதாவது முகப்பு விளக்கின் மீது, ஒரு பெரிய இரும்புக் கம்பி வளையம் போல வளைக்கப்பட்டு,முகப்பு விளக்கை ஒட்டி இடது வலதாக பொருத்தப்பட்டிருந்தது.அது வாகன ஓட்டியின் தலையை விட உயரமாக வளைக்கப்பட்டு இருந்தது. முகப்புப் படத்தில் உள்ள வளையம்.

நாங்கள் சென்று கொண்டிருந்த மகிழுந்து ஓட்டுனரிடம் அதைப் பற்றி விசாரித்தேன்.

ஏ க்யா ஹே பையா ? என்று.

நான் ஏதோ இந்தி பண்டிட் போல, அவன் ஏதேதோ பேச, எனக்குப் புரிந்த அறைகுறை இந்தியை வைத்து அது ஏதோ பண்டிகைக்காக கட்டியது என்று தெரிந்து கொண்டேன்.

நான் அதை ஏதோ சடங்கு அல்லது சம்பிரதாயம் என்று நினைத்துக் கொண்டேன்.

ஆனால் இன்று இணையத்தில், அந்த வளையம் பற்றிய செய்தியும், சூரத் நகர காவல்துறையினர், அனைத்து இருசக்கர வாகனங்களிலும் பாதுகாப்பு வளையங்களைப் பொறுத்துகின்றனர் என்றும் செய்தி பார்த்தேன்.

அடடே இது பாதுகாப்பு வளையமா?
நாம ஏதோ சடங்கு , சம்பிரதாய வளையம்னு தானே நினைத்தோம் என்று அதைப் பற்றி தேடத் துவங்கினேன்.

கிடைத்த தகவல் சற்று ஆச்சரியமாக இருந்தது.

இதுவரை அறிந்திறாத வித்தியாசமான புதுமையான தகவலாக இருந்தது.
அதாவது மகர சங்க்ராந்தி , இந்த வருடம் ஜனவரி 14 ஆம் தேதி வரும் பண்டிகை,
நமது பொங்கல் பண்டிகை போல மற்ற மாநிலங்களில் அறுவடை தினமாக சூரியனுக்கு நன்றி செலுத்தும் விதமாகக் கொண்டாடப்படும் பண்டிகை.

இந்த மகர சங்க்ராந்தி குஜராத் மாநிலத்தில் உத்ராயன் என்ற பெயரில் கொண்டாடப்படுகிறது.

உத்தராயணம் என்பதன் பொருள், சூரியன் வடதிசை நோக்கிப் பயணிக்கத் துவங்கும் ஆறு மாத காலத்தைக் குறிப்பது.

சூரியனின் இந்த நகர்வை அவர்கள் பண்டிகையாகக் கொண்டாடுகிறார்கள்.

இந்த நாளில் இனிப்புப் பலகாரங்கள் சமைத்து உறவுகளோடு கொண்டாடுவது மட்டும் அவர்கள் வழக்கமல்ல.

குடும்பம் குடும்பமாகப் பட்டம் விடுதுலும், பட்டம் விடுதலில் எதிர் வீடு பக்கத்து வீடுகளோடு போட்டியிடுதலும், மற்றவர்களின் பட்டத்தின் மாஞ்சாக் கயிற்றை அறுப்பதும் என பட்டம் விடுதல் என்பதை வெகு விமரிசையாக செய்வார்களாம்.

பகலில் வண்ண வண்ணப் பட்டங்களில் துவங்கும் இந்த வழக்கம், இரவில் பெட்டி வடிவில் விளக்குகள் பொருத்தப்பட்ட அழகான பட்டங்கள் வரை நீளுமாம்.

பகலில் வண்ணமயமாகவும், இரவில் ஊரே பட்டங்களின் ஒளியில் ஜெகஜோதியாகவும் மிளிருமாம்.

இப்படி பட்டங்கள் விடும்போது அதில் சில கயிறை அறுத்துக் கொண்டு சாலைகளில் சென்று இருசக்கர வாகன ஓட்டிகளின் கழுத்தை அறுப்பது, பல விபத்துகளை உண்டாக்குவது என்ற வரலாறும் இங்கு இருக்கிறது.
ஏன் சென்னையில் கூட சில விபத்துகள் மாஞ்சா கயிறு கழுத்தை அறுத்து ஏற்பட்டதை நாம் அறிவோமே.
அது போலத் தான் இங்கும் சில விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன.

இப்படியான விபத்துகளைத் தவிர்க்கவே இந்த பாதுகாப்பு வளைய ஏற்பாடாம்.

அதுவும் காவல்துறை நேரடியாகக் களத்தில் இறங்கி எல்லா வாகன ஓட்டிகளையும் இதைக் கையோடு பொறுத்தச் சொல்லி அறிவுறுத்திப் பொறுத்தியும் விடுகிறார்களாம்.

இந்தச் செய்தி வித்தியாசமான நாம் அறிந்திராத ஒன்று தானே?

நினைவுகள்

நினைவுகளை வார இதழாக மின்னஞ்சலில் பெற தங்கள் முகவரியை இங்கே பதிவு செய்யலாம்

We don’t spam! Read our privacy policy for more info.